திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

Mar 4, 2026 - 18:00
 0
திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக  நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர்.

தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

திருச்சி ஜங்சன்
திருச்சி ஜங்சன்

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0