'மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்; ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட லுங்கி இங்கிடி!' - என்ன நடந்தது?
டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயல்கையில் லுங்கி இங்கிடி தவறி விழுந்து பலத்த அடிபட மைதானத்துக்குள்ளேயே ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
இந்தப் போட்டியில் டெல்லி அணியே முதலில் பேட் செய்திருந்தது. கே.எல்.ராகுல் 152 ரன்களை அடிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 264 ரன்களை எட்டியது. இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி இறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்கள் பிரியான்ஸ் ஆர்யாவும் பிரப்சிம்ரன் சிங்கும் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடினர்.
இந்நிலையில், மூன்றாவது ஓவரை டெல்லியின் கேப்டன் அக்சர் படேல் வீசியிருந்தார். இந்த ஓவரில் ஒரு பந்தில் பிரியான்ஸ் ஆர்யா பெரிய ஷாட்டுக்கு முயன்றார். மிட் ஆபில் பீல்டிங் செய்து கொண்டிருந்த லுங்கி இங்கிடி பின்பக்கமாக ஓடிச் சென்று அந்த பந்தை கேட்ச் செய்ய முயன்றார். கேட்ச்சை தவற விட்ட அவர் பின்பக்கமாக தவறி விழுந்தார். அதில் அவரின் கழுத்தும் தலையும் மடங்கி பலத்த அடி வாங்கினர். மைதானத்திலேயே சுருண்டு படுத்த அவரை அணியின் பயிற்சியாளர்களும் மருத்துவர்களும் சோதித்துப் பார்த்தனர்.
அவருக்கு ஏற்பட்ட அடி தீவிரமாக இருக்கவே உடனடியாக மைதானத்துக்குள்ளேயே ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இங்கிடிக்கு அடிபட்டதில் டெல்லி வீரர்கள் அதிர்ச்சியடையவே போட்டி 15 நிமிடங்களுக்கு தடைப்பட்டிருந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0