Train: ``கடந்த 6 வருஷத்துல மிஷ்கின் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்" - இயக்குநர் ராம்

Jul 13, 2026 - 12:31
0
Train: ``கடந்த 6 வருஷத்துல மிஷ்கின் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்" - இயக்குநர் ராம்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராம், ``'சைக்கோ' (2020) திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் மிஷ்கினின் ஒரு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது.

Train டீசர் வெளியீடு
Train டீசர் வெளியீடு

இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அவர் 'பிசாசு 2', 'ட்ரெயின்' என இரண்டு படங்களை எடுத்து முடித்துள்ளார். மற்றொரு படம் பாதியிலேயே நிற்கிறது. ஒரு ஃபிலிம் மேக்கராக இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு படத்தை திரைக்குக் கொண்டு வர அவர் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள், அவதூறுகள் மற்றும் பலிச்சொற்கள் ஏராளம்.

இத்தனை வலிகளையும் அவமானங்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் எந்தவொரு மனிதனும் காணாமல் போயிருப்பான். ஆனால், மிஷ்கின் இதையெல்லாம் தன் இடது கையால் தள்ளிவிட்டு நிமிர்கிறார் என்றால், அதற்கு மனிதர்கள் மீது அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். இவ்வளவு காயங்களுக்குப் பிறகும் மனிதர்களை நேசிக்கும் அவரது குணம்தான் அவரை இன்றுவரை சினிமா உலகில் தக்க வைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் 'மாஸ்டர் ஆஃப் த்ரில்லர்ஸ்' அல்லது த்ரில்லர் படங்களின் தந்தை என்று மிஷ்கினைத் தாராளமாகக் கூறலாம். 'நந்தலாலா' தவிர அவரது பெரும்பாலான படங்கள் த்ரில்லர் பாணியைச் சேர்ந்தவைதான். கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது 'குற்றமும் தண்டனையும்' தத்துவத்தில், "கொலை செய்யப்பட்டவனுக்கும் அந்த மரணத்தில் பங்குண்டு. கொள்ளையடிக்கப்பட்டவனுக்கும் அந்தத் திருட்டில் பங்குண்டு. இந்தச் சமூகத்தில் நடக்கும் தீமைகளில் நாம் அறியாமலேயே நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது" என்பார்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் மிஷ்கினின் உலகமும் கதைகளும் விரிகின்றன. அவரது படங்களில் கொலைகளும் குற்றங்களும் வெறும் பொழுதுபோக்கிற்காகக் காட்டப்படுவதில்லை. மாறாக, குற்றவாளிகளின் பின்னணியில் இருக்கும் நியாயங்களையும், இறுதியில் அவர்கள் மீது நமக்குக் கருணை வர வைக்கும் ஒரு உன்னதக் கலையாகவும் அது மாற்றப்படுகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

மறுபுறம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 'நானும் ரௌடிதான்' போன்ற படங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஹியூமரில் 100 கோடி கிளப் வரை மெயின்ஸ்ட்ரீம் ஹிட் கொடுத்த எக்ஸ்ட்ரார்டினரி ஹீரோ விஜய் சேதுபதி. அவர் ஏற்கனவே த்ரில்லர் பாணியில் 'பிட்சா', 'மகாராஜா' போன்ற பெரிய வெற்றிகளைக் கொடுத்துள்ளார்.

இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட மேஜிக்கை நிகழ்த்தியிருக்கும் என்பதை முதல் நாளே தியேட்டரில் பார்க்க ஒட்டுமொத்த சினிமாவும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது." என்றார்.

இயக்குநர் சசி பேசியபோது, ``மிஷ்கினின் பின்னணி இசை மற்றும் விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பு எனப் பல எதிர்பார்ப்புகளுடன் வரும் இந்த 'ட்ரெயின்' திரைப்படம், நினைத்த இலக்கை மிகச் சரியாகச் சென்றடையும். தற்போது மிஷ்கின் - விஜய் சேதுபதி என்ற இந்த இரண்டு ஆளுமைகளின் காம்பினேஷன் 'ட்ரெயின்' படம் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

விஜய் சேதுபதி போன்ற ஒரு லெஜண்டரி நடிகரிடமிருந்து மிஷ்கின் எப்படி வேலை வாங்கியிருப்பார் என்பதைப் பார்க்க எனக்கு ஆவாலாக இருக்கிறது.

இயக்குநர் சசி
இயக்குநர் சசி

இந்தப் படத்தை விஜய் சேதுபதிக்காகவே பார்க்கவிருக்கிறேன். மிஷ்கினிடம் இந்தப் படம் குறித்து பேசியிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னதெல்லாம் திரையில் எப்படி வந்திருக்கிறது என எக்ஸைட்மென்டா இருக்கிறது. சத்தியம் தியேட்டரில் "நான் மிஷ்கின் தம்பியுடன் படம் பண்ணப் போகிறேன்" என்று அவர் முன்பு கூறியதை, இன்று 'ட்ரெயின்' படத்தின் மூலம் மிகச் சரியான ட்ராக்கில் ஏற்றி சாதித்துக் காட்டியுள்ளார் தயாரிப்பாளர் தானு சார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு வரும் மிஷ்கினின் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட அதிசயத்தை நிகழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User