திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Aug 29, 2026 - 17:31
0
திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், நோயிலிருந்து குணமடையவும் மருத்துவமனையை நாடி வரும் மக்களுக்கு, அந்த மருத்துவமனை வளாகமே சுகாதாரமான சூழலை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சில பகுதிகளில் காணப்படும் நிலை அதற்கு நேர்மாறாக இருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

இம்மருத்துவமனைக்கு தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் 200 முதல் 400 பேர் வரை நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தைப் பயன்படுத்துகின்றனர். இத்தனை பேர் வந்து செல்லும் இடத்தில் சுற்றுப்புறத் தூய்மைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவமனையின் முன்பகுதி மற்றும் வெளிப்புறப் பகுதிகள் ஓரளவுக்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவாயில் மற்றும் கட்டடத்தின் உள்புறப் பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி காணப்படுகின்றன.

மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் பெரிய வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருபவர்களாலும் குப்பைகள் வீசப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அவற்றை முறையாக அகற்றுவதுடன், குப்பைகள் சேராத வகையில் உரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மருத்துவமனை கட்டடத்தின் உள்புறப் பகுதியில் சில இடங்களில் தண்ணீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்லும் பாதை சீராக இல்லாததால், தேங்கும் தண்ணீர் பாசி படிந்து நாளடைவில் கருமையாக மாறி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படலாம்.

மேலும், சில வார்டுகளில் உள்ள கழிப்பறைகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சில இடங்களில் தண்ணீர் வராததுடன், தரை மற்றும் சுவர்கள் அசுத்தமாகக் காணப்படுகின்றன.

மருத்துவமனை என்பது சிகிச்சைக்கான இடம் மட்டுமல்ல; சுகாதாரமான சூழலுக்கான முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும்.

எனவே, குப்பைகள் மற்றும் தேங்கும் நீரை அகற்றுவதுடன், கழிவுநீர் பாதைகளைச் சீரமைத்து, கழிப்பறைகளில் தண்ணீர் மற்றும் தூய்மை வசதிகளை உறுதி செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User