திருச்செந்தூர்: `மன்னிப்பு கடிதம் அல்ல; விளக்கம்; நடவடிக்கை உண்டு' - ஆய்வுக்குப்பின் அமைச்சர் ரமேஷ்

May 29, 2026 - 14:01
0
திருச்செந்தூர்: `மன்னிப்பு கடிதம் அல்ல; விளக்கம்; நடவடிக்கை உண்டு' -  ஆய்வுக்குப்பின் அமைச்சர் ரமேஷ்

திருச்செந்தூரில் விரைவு தரிசனத்திற்காக பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் அனுப்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுவாமி தரிசனத்திற்காக அமைச்சர் ரமேஷிடமே யார் என்று தெரியாமல் ரூ.4 ஆயிரம் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனத்திற்கு அர்ச்சகர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அமைச்சர் ரமேஷ்

சர்ப்ரைஸாக ஒரு ஆய்வு

பின்னர், அவர் அமைச்சர் எனத் தெரிய வந்ததும் பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாகச் சிக்கினர். இதனையடுத்து திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்னிடம் பல புகார்களை கூறியுள்ளார்கள். அதன்படி இன்று காலை சர்ப்ரைஸாக ஒரு ஆய்வினை மேற்கொண்டேன்.

மன்னிப்பு கடிதம் அல்ல..

பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு தரிசனத்திற்காக கோயிலுக்குள் அழைத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளோம். அர்ச்சகர்கள் மட்டுமில்லாமல் அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில், இதுதொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் கேட்டு எழுதி வாங்கி மன்னித்து விட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவர்களிடம் விளக்கம் கேட்டுதான் கடிதம் பெறப்பட்டுள்ளதே தவிர மன்னிப்பு கடிதம் கிடையாது.

அமைச்சர் ரமேஷ் ஆய்வு

அன்னதானக்கூடம், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சொத்துப்பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய் விவரங்கள், தரிசனத்திற்காக பக்தர்களின் நேரத்தை குறைக்கும் வகையில் என்னென்ன வழிகள் மேற்கொள்ளலாம் எனவும் ஆய்து செய்துள்ளோம்.” என்றவரிடம்.

இன்று காலை தரிசனத்திற்கு உங்களிடமே ரூ.4 ஆயிரம் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இன்று காலை முதல் ஆய்வின் நிறைவு வரை என்னென்ன நடந்தது என்பதை முழு விளக்கத்துடன் கூடிய அறிக்கையாக மீடியாக்களுக்கு வழங்குகிறேன். சற்று பொறுத்திருங்கள்” எனக் கூறிச் சென்றார்.    

இதனிடையே திருச்செந்தூர் கோயிலில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User