'தீரா சோகம்...' - மீண்டும் தோல்வி; மீண்டும் கண்ணீர்! - நிறைவேறாத நியூசிலாந்து கனவு!

Mar 9, 2026 - 00:32
 0
'தீரா சோகம்...' - மீண்டும் தோல்வி; மீண்டும் கண்ணீர்! - நிறைவேறாத நியூசிலாந்து கனவு!

நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு இந்த முறையும் நிறைவேறவில்லை. பேட் கம்மின்ஸ் ஸ்டைலில் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் எனக் கூறிய சாண்டனரின் சவால் அகமதாபாத்தில் எடுபடவில்லை. உலகக்கோப்பையை வென்ற கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள் இருந்தாலும் நியூசிலாந்து அணிக்காகவும் கொஞ்சம் வருந்துவார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த அணி அப்படிப்பட்டது.

சாண்ட்னர்
சாண்ட்னர்

நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையே 53 லட்சம்தான். சென்னையை விட சின்ன நாடு. பெரும் அலட்டல் இல்லாத பெரும் ஓட்டம் இல்லாத அந்த மக்களின் வாழ்வில் கிரிக்கெட்டுக்கு பெரிய இடமெல்லாம் கிடையாது. ரக்பிதான் அந்த நாட்டில் மிகப்பெரிய விளையாட்டு. 'All Blacks' எனப்படும் அவர்களின் ரக்பி அணிக்குதான் அங்கே ரசிகர்கள் அதிகம்.

நியூசிலாந்து
நியூசிலாந்து

2023 உலகக்கோப்பையில் ஆட நியூசிலாந்து அணி இந்தியா வந்திருந்தது. அப்போது ரக்பியிலும் ஒரு பெரிய தொடர் நடந்து கொண்டிருந்தது. 'All Blacks' சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது. நியூசிலாந்து வீரர்கள் இரவில் கண் விழித்து All Blacks இன் போட்டியை பார்த்துவிட்டு மறுநாள் பயிற்சிக்கு வருவார்கள். பத்திரிகையாளர் சந்திப்புகள் 'All Blacks' க்கும் வாழ்த்து சொல்வார்கள்.

நாம் நட்சத்திரமாக பார்க்கும் நியூசியின் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் அந்த நாட்டின் ரக்பி வீரர்களின் தீவிர ரசிகர்கள். கிரிக்கெட்டில் ஒரு பெரிய தொடரை, குறிப்பாக உலகக்கோப்பையை வென்று தங்கள் நாட்டில் ரக்பிக்கு இணையான மதிப்பைப் பெற வேண்டும் என்பதுதான் நியூசிலாந்து வீரர்களின் எண்ணம். மார்டின் க்ரோ தொடங்கி வெட்டோரி, மெக்கல்லம், வில்லியம்சன் என இப்போதுள்ள சாண்ட்னர் வரைக்கும் அதுதான் ஒரே லட்சியம்

நியூசிலாந்து
நியூசிலாந்து

நியூசிலாந்து அணி எவ்வளவு சிறப்பாக ஆடி உலகக்கோப்பைகளின் இறுதி வரை வந்தாலும் இன்னமும் அவர்களால் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை. 2015 இல் மெக்கல்லம் பெரும் துடிப்போடு அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடி நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். அந்த உலகக்கோப்பை நியூசிலாந்திலும் நடந்தது. இறுதிப்போட்டி வரை வந்து ஆஸியிடம் தோற்றிருப்பார்கள்.

இந்தியா அரையிறுதியில் ஆஸியிடம் தோற்று வெளியேறிய பிறகு, 'இந்திய ரசிகர்கள் எங்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்' என மெக்கல்லம் கேட்டுக் கொண்டார். எப்போதுமே இந்திய ரசிகர்களுக்கு நியூசிலாந்து அணியின் மீது ஓர் ஈர்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. 2015 க்குப் பிறகு 2019 உலகக்கோப்பையை சொல்லவே வேண்டாம். வில்லியம்சன் தலைமையில் சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆகி தோற்றிருப்பார்கள்.

Kane Williamson

2021 டி20 உலகக்கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் இழந்திருப்பார்கள். இதோ இப்போது இன்னொரு உலகக்கோப்பை. இன்னொரு இறுதிப்போட்டி. இந்திய அணியிடம் தோற்றிருக்கிறார்கள். எவ்வளவோ திறமையான வீரர்கள் இருந்தும் பண்பான கேப்டன்கள் இருந்தும் வெற்றிக்கோட்டை மட்டும் அந்த அணியால் கடக்க முடியவில்லை. தீராத இந்த சோகம் என்று தணியுமோ?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0