Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்கியது எப்படி?
மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது கார் ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் ரயிலில் வைத்து பிடிபட்டுள்ளனர். அவர்கள் மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மூன்று பேரும் டெல்லி வழியாக நேபாளத்திற்குத் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு மூன்று பேருக்கும் உதவுவதாக உறுதியளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

தாக்குதல் முடிந்த பிறகு மேலும் அதிக அளவில் பணம் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது என்று மூன்று பேரும் தெரிவித்துள்ளனர்.
கைதான பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ஹிருத்திக் என்கிற ரோஷன் (22), ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த ரெஹான் (18), ஹரியானாவைச் சேர்ந்த ஃபூல் சிங் (18) ஆகிய மூன்று பேரில் ஒருவரிடம் பணத்தாசைக் காட்டி இக்காரியத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சம்மதிக்க வைத்திருந்தனர்.
மூன்று பேருக்கும் எந்த வகையில் பணம் வழங்கப்பட்டது என்றும், மூன்று பேருடன் தொடர்பில் இருந்தவர் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளியான அனில் பண்டிட்தான் வேறு ஒருவரை இதற்காக நியமித்து அவர் மூலம் ஆட்களை ஏற்பாடு செய்வது போன்ற வேலைகளைச் செய்ததாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்தப் பொறுப்பை லாரன்ஸ் பிஷ்னோய், அனில் பண்டிட்டிடம் ஒப்படைத்து இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு அனில் பண்டிட் வெளியிட்ட ஆடியோ பதிவில் இத்தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர்களாகிய நாங்கள்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார்.
குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்த போன் அழைப்பு
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சூரத் செல்லத் திட்டமிட்டு இருந்தனர். அவர்கள் இதற்காக டாக்சி ஒன்றை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். டாக்சி டிரைவர் எந்த நம்பரில் டாக்சி முன்பதிவு செய்யப்பட்டதோ அந்த நம்பருக்கு போன் செய்து பேசினார்.
அவர்கள் டாக்சியில் கிளம்பியதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்த போலீஸார், அந்த டாக்சி டிரைவரைக் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது 3 பேரையும் சூரத்தில் இறக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
உடனே சூரத் ரயில் நிலையத்திலிருந்து அந்த நேரத்தில் புறப்பட்ட ரயில்கள் குறித்த விபரங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சந்தேக நபர்கள் புனே-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் ராஜஸ்தான் நோக்கி பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் ராஜஸ்தான் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கூட்டு நடவடிக்கையைத் துவக்கினர். ரயில் கோட்டா ரயில் நிலையம் சென்றவுடன் போலீஸார் ரயில் முழுக்க சோதனை நடத்தி மூன்று பேரையும் கைது செய்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து டைகர் ஷெராப்புக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சிக்கு முன் நடிகருக்கு எந்தப் பாதுகாப்பும் போலீஸார் கொடுக்கவில்லை. பாதுகாப்பு இல்லாததால், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் எளிதான இலக்காக அவர் மாறியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு நடிகருக்கு மெய்க்காப்பாளர்களை நியமித்துள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் போலீஸ் நிலையமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பல பணியாளர்களை நியமித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)