``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

Jul 22, 2026 - 15:31
0
``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் என வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

அபிராமி பதிவு

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அபிராமி தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியே நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கடும் வெயிலில் நின்று கொண்டு, தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்று மட்டுமே கேட்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, `இதுவே என் குழந்தையாக இருந்தால் என்ன செய்வது?' என்ற எண்ணமே எனக்குள் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது.

அவர்கள் பல வருடங்கள் படித்தார்கள், விதிகளுக்குட்பட்டு நடந்துகொண்டார்கள், ஆனால் ஏமாற்றப்பட்டார்கள். அதை அமைதியான முறையில் முறையிடுவதற்காக டெல்லிக்குச் சென்றார்கள். ஆனால், அவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன.

என்னிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இல்லை. ஆனால், குரல் கொடுப்பதும் களத்தில் நிற்பதும் முக்கியம் என்பதை நம்பியே என் குழந்தை வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன் நான் உங்களைப் பார்க்கிறேன் (உங்கள் பக்கமிருக்கிறேன்)." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User