`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' - 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

Jun 03, 2026 - 12:02
0
`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' - 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இளம் வயதில் எழுதிய தேர்வுக்கு சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின், அவர் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிய போது பணி நியமன பரிந்துரை கடிதம் வந்து சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் ​மலப்புறம் மாவட்டம் காளிகாவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் கடந்த 2005-ம் ஆண்டு, கேட்டகிரி நம்பர் 229/2005-ன் கீழ், பகுதி நேர இளநிலை அரபு மொழி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதினார். ​தேர்வு எழுதும்போது அவருக்கு 39 வயது. இந்தத் தேர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் 3 ஆண்டு கால வரம்பு கடந்த 2008-ம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது.

பொதுவாக, காலாவதியான பட்டியலிலிருந்து பணி நியமனங்கள் செய்யப்பட மாட்டாது என்பதால், தனக்கு வேலை கிடைக்காது என அவரும் அந்த ஆசையைக் கைவிட்டார். ​கேரள அரசு விதிகளின்படி, ஒரு தற்காலிக அறிவிப்பின் அதிகபட்ச காலவரம்பு 3 மாதங்கள் மட்டுமே. விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிவிப்பு 3 முறை வெளியிடப்பட்டாலும், ஒட்டுமொத்த செயல்முறையும் ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஒரு காலிப்பணியிடத்தை நிரப்ப பி.எஸ்.சி 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

​இறுதியாக 11.01.2022 அன்று திருச்சூர் பி.எஸ்.சி அலுவலகத்திற்கு 'பணியில் சேராத காலிப்பணியிடமாக' இது அறிக்கை செய்யப்பட்டது. அங்கிருந்து அப்துல் மஜீதுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருச்சூர் அலுவலகம் இந்த விவரத்தை மஜீத்திடம் கொண்டு சேர்க்க மேலும் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இறுதியாக, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி (24.04.2026) பி.எஸ்.சி-யிடம் இருந்து அட்வைஸ் மெமோ அனுப்பப்பட்டு, 26.04.2026 அன்று அது மஜீத்துக்கு கிடைத்தது.

அப்துல் மஜீத்

அப்துல் மஜீதின் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழின்படி அவரது பிறந்த தேதி 27.05.1966 ஆகும். எனவே அவருக்குப் பணி நியமன ஆணை கிடைத்த அடுத்த ஒரு மாதத்திற்குள், அவருக்கு 60 வயது நிறைவடைந்து, அரசு விதிகளின்படி அவர் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார். இதனால் அவரால் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.​

இருப்பினும், தனது பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி தவறாகப் பதிவாகியுள்ளதாகவும், தனது உண்மையான பிறந்த வருடம் 1967 என்றும் மஜீத் கூறுகிறார். இந்தத் தவறு திருத்தப்பட்டால், தம்மால் குறைந்தபட்சம் ஓராண்டாவது அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் எனக்கூறும் அவர், மனிதாபிமான அடிப்படையில் தனக்கு நீதி வழங்க வேண்டும் என மாநில கல்வி அமைச்சரிடமும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஷம்சுதீனிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுபற்றி அப்துல் மஜீத் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தபால்காரர் வந்து பணிக்கான கடிதத்தைக் கொடுத்தபோது, என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. 21 வருடங்களுக்கு முன்பு, என் வாலிப வயதில் நான் ஆவலோடு எதிர்பார்த்த பி.எஸ்.சி அட்வைஸ் மெமோ அது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் என் வயது ஞாபகத்திற்கு வந்தபோது, எனக்குள் ஒரு பெரும் ஏமாற்றமும் அழுகையும்தான் வந்தது.

​2005-ல் நான் இந்தத் தேர்வை எழுதும்போது எனக்கு வயது 39. அப்போது எனக்குள் இருந்த துடிப்பும், அரசு வேலை கிடைத்துவிட்டால் நம் குடும்பத்தைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. 2008-ல் அந்த ரேங்க் பட்டியலின் காலம் முடிவடைந்துவிட்டது என்று தெரிந்ததும், நான் அந்த ஆசையை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டேன்.

​அதன் பிறகு, கடந்த 18 ஆண்டுகளாக இந்த அரபு மொழி ஆசிரியர் பணியிடம் ஏன் நிரப்பப்படாமல் இருந்தது? தகுதியான ஆட்கள் இல்லை என்றால், ஏன் மறு அறிவிப்பு வெளியிடவில்லை? இத்தனை காலம் இந்த இடத்தை அப்படியே மறைத்து வைத்துவிட்டு, இப்போது எனக்கு 60 வயது முடிந்ததும் இந்த ஆணையை அனுப்புவது பி.எஸ்.சி-யின் மிக மோசமான நிர்வாக அலட்சியத்தையே காட்டுகிறது. இது என்னைப் போன்ற ஒரு ஏழைத் தேர்வரின் வாழ்க்கையோடு விளையாடும் செயலாகும்.

பணி ஆணையுடன் அப்துல் மஜீத்

ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்கும் என்று நம்பி என் இளமைக் காலத்தை இழந்தேன். வேலை கிடைக்காததால், கடந்த 21 வருடங்களாகக் குடும்பத்தைக் காப்பாற்ற நான் படாதபாடுபட்டுவிட்டேன். பகுதி நேரமாக அரபு மொழி சொல்லிக்கொடுப்பது, தற்காலிகக் கூலி வேலைகள் செய்வது என ஏதோ ஒரு வேலையைச் செய்துதான் என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன், குடும்பத்தை நடத்தினேன்.

ஒருவேளை இந்த வேலை எனக்கு 15 வருடங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால், என் குடும்பத்தின் பொருளாதார நிலை மாறியிருக்கும். என் பிள்ளைகளுக்கு இன்னும் நல்ல எதிர்காலத்தைக் கொடுத்திருக்க முடியும். ​எனது எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழில் பிறந்த தேதி 1966 மே 27 என்று தவறாகப் பதிவாகியுள்ளது. ஆனால் எனது உண்மையான பிறந்த வருடம் 1967 ஆகும். இந்த வயோதிக காலத்தில் பி.எஸ்.சி செய்த தவறுக்காக நான் தண்டிக்கப்படக் கூடாது.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் எனது வயதுப் பதிவைத் திருத்தி, எனக்குக் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அவர்களிடமும், எம்.எல்.ஏ என். ஷம்சுதீன் அவர்களிடமும் நேரில் சென்று மனு அளித்துள்ளேன். அவர்கள் எனக்கு நிச்சயம் நீதி வழங்குவார்கள் என்ற கடைசி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User