வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

Aug 28, 2026 - 21:01
0
வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து பெண்களை தாக்கி தங்க நகை, பணம் பறித்தது என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், முன்பகை காரணமாக சிவகாசி விஜயலெட்சுமி காலனியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரின் மனைவி மருதாயி என்பவருடன் இவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மருதாயி- கொலை செய்யப்பட்ட தங்க முனீஸ்வரன்

இருப்பினும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக தினமும் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் காலையில் நேரில் ஆஜராக கையெழுத்திட்டு வந்தார். குண்டர் சட்டத்தின் கீழ் தங்கமுனீஸ்வரன் கைது செய்யப்பட்டதற்கு மருதாயி காவல் நிலையத்தில் அளித்த புகாரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

”என் மீது பொய் புகார் கொடுத்து சிறையில் அடைத்ததால் உன்னை சும்மா விட மாட்டேன்” என, மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தினமும் மருதாயி எங்கு சென்று வருகிறார் என்பதை கண்காணித்து வந்துள்ளாராம். இதனையறிந்த  மருதாயி, தங்க முனீஸ்வரின் அண்ணன் முத்து முனியப்பனை நேரில் சந்தித்து, ”உன் தம்பியை ஒழுங்காக இருக்கச் சொல்” என எச்சரித்துள்ளாராம். இந்த நிலையில் போனில் மருதாயியை அழைத்த தங்க முனீஸ்வரன், “என்னை மிரட்டிப் பார்க்கிறாயா?” எனப் பேசியுள்ளார். இருவருகும் வாக்குவாதம் முற்றவே ”உன்னை நேரில் வந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லியதுடன் சிறிது நேரத்தில் தன் நண்பர்கள் 2 பேருடன் மருதாயி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கிழக்கு காவல் நிலையம் சிவகாசி

தான் கூப்பிடும் போது உள்ளே வந்தால் போதும் எனக் கூறியுள்ளார். வீட்டிற்குள் சென்றதும் சமையல் அறையில் மறைந்திருந்த முத்துமாரி என்ற பெண், மிளகாய் பொடியை தங்க முனீஸ்வரன் மீது தூவியுள்ளார். மிளகாய்பொடி கண்ணில் பட்டதால் நிலைதடுமாறிய தங்க முனீஸ்வரன் கீழே விழுந்தார்.

மருதாயி மற்றும் அவர்களின் தோழிகளான ரம்யா, ஈஸ்வரி, நண்பர் செல்வகுமார் ஆகியோர் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டியும், குத்தியும் உள்ளனர். இதில், உடலில் பல இடங்களில் வெட்டுகள் விழுந்ததால் உயிரிழந்தார். பின்வாசல் வழியாக மருதாயி உள்ளிட்டோர் தப்பியோடினர். நீண்ட நேரம் ஆகியும் தங்க முனீஸ்வரன் வெளியே வராததால், வீட்டின் வாசலில் காத்திருந்த அவரது நண்பர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

கைது செய்யப்பட்ட மருதாயி மற்றும் அவரது நண்பர் -தோழிகள்

தங்கமுனீஸ்வரன் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து மருதாயியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் தனது தோழிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மருதாயியின் மகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.  

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “தங்க முனீஸ்வரனுக்கும் கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்துவரும் மருதாயிக்கும் இடையிலான முன்பகை காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. செல்போனில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே நேரில் வந்து உன்னை கொலை செய்கிறேன் எனச் சொல்லி தங்க முனீஸ்வரன் அழைப்பினை துண்டித்ததுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது தோழிகளை வரச் சொல்லியிருக்கிறார் மருதாயி. வீட்டில் மருதாயி மட்டும்தான் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு சென்றுள்ளார் தங்க முனீஸ்வரன்.

கிழக்கு காவல் நிலையம் சிவகாசி

கழிப்பறையில் மருதாயியின் மகன் பதுங்கி இருந்துள்ளார். சமையல் அறையில் ரம்யா, முத்துமாரி, ஈஸ்வரி ஆகியோர் பதுங்கி இருந்துள்ளனர். மற்றொரு அறையில் மருதாயி, செல்வகுமார் ஆகியோர்  இருந்துள்ளனர். தங்க முனீஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கை அறைக்குள் சென்றுள்ளார். மருதாயியின் மகன் வீட்டின் கதவைப் பூட்டியுள்ளார். அப்போது மருதாயி, செல்வகுமார் ஆகியோர் வாக்குவாதம் செய்துள்ளனர். முத்துமாரி மிளகாய்பொடி வீசியதில் கண்ணை கசக்கிக் கொண்டே கீழே விழுந்துள்ளார். பின்னர் 6 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.” என்றனர்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User