‘புலி’ திரைப்படத் தோல்வியிலிருந்து தொடங்கிய அரசியல் புலிப் பாய்ச்சல்

Jun 15, 2026 - 20:31
0
‘புலி’ திரைப்படத் தோல்வியிலிருந்து தொடங்கிய அரசியல் புலிப் பாய்ச்சல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் சில நடிகர்கள் வெறும் கலைஞர்களாக மட்டுமே நினைவுகூரப்படுகிறார்கள்; சிலர் காலத்தின் கலாச்சார அடையாளங்களாக மாறுகிறார்கள். ஆனால் மிகச் சிலரே திரைப்பட நட்சத்திரம் என்ற எல்லையைத் தாண்டி சமூக மற்றும் அரசியல் விவாதங்களின் மையப்புள்ளியாக உருவெடுக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜயின் பயணம் தனித்துவமான ஒன்றாகும். சிறுவனாக திரையில் தோன்றிய ஒரு கலைஞர், ரசிகர்களின் பேராதரவை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசியலின் புதிய சக்தியாக உருவெடுத்த கதை, சமகால தமிழகத்தின் முக்கியமான சமூக-அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு வெளியான “வெற்றி” திரைப்படத்தில் சிறுவனாக திரையில் தோன்றிய விஜய், 1992 இல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை 77 திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சிறப்புத் தோற்றம் முதல் முழு நீள கதாநாயகன் வரை பல்வேறு வடிவங்களில் தமிழ் சினிமாவை வளமாக்கியிருக்கிறார். 13 படங்களில் "விஜய்" என்ற பெயரிலேயே கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

விஜய் - ப்ரியங்கா சோப்ரா - தமிழன்

அரசியல் பிம்பத்தின் தொடக்க அத்தியாயம்

2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ திரைப்படம் விஜயின் கலைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மக்கள் சேவை, சட்ட உதவி, நீதிக்கான போராட்டம் என்ற கருத்துகளை முன்வைத்த அந்தப் படம், அவரின் திரைமுகத்தில் சமூக விழிப்புணர்வு என்ற புதிய பரிமாணத்தை சேர்த்தது. இந்த படத்தில் ஒரு வசனம் இருக்கும், “நான் பத்த வைச்சா எரிகிற தீக்குச்சி இல்லை, சூரியன்” அதே ஆண்டு வெளியான பகவதி படமும் இந்த வழியிலேயே சென்றது. இதன் மூலம் விஜயின் திரைப்படங்களில் அரசியல் கருத்துகள் படிப்படியாக வலுப்பெறத் தொடங்கின.

பொது அரங்கில் அரசியல் அங்கீகாரம்

2006 ஜனவரி 12 அன்று புதுதில்லியில் நடைபெற்ற அஞ்சல் துறை விழாவில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து பொங்கல் நினைவு அஞ்சல் தலை ஆல்பத்தை விஜய் பெற்றுக்கொண்டார். தகவல்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, விஜய்க்கு கிடைத்த முதல் பெரிய அரசியல்-பொது அங்கீகாரமாக அமைந்தது. ஆனால் இந்த நிகழ்வே திமுகவில் ஒரு உள்கட்சி விவாதத்தையும் தூண்டியது. நடிகரும் திமுக எம்.பி.யுமான சரத்குமார், தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தார். இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் விஜயின் செல்வாக்கு கவனிக்கப்படத் தொடங்கியதன் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.

மக்களை நோக்கிய முதல் பயணம்

2007 காலகட்டத்தில் விஜய் டிவி நடத்திய "வெற்றி நாயகன்" நிகழ்ச்சி, விஜயின் திரைப் பிரபலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நேரடியாக இணைத்த ஒரு முக்கியமான மக்கள் தொடர்பு முயற்சியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வாகனத்தில் பயணம் செய்து ரசிகர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்தித்தார்.

மக்களுடன் நேரடியாக உரையாடுதல், அவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல், சமூக விழிப்புணர்வு செய்திகளைப் பரப்புதல் போன்ற அம்சங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி, விஜயை வெறும் திரைப்பட நட்சத்திரமாக மட்டுமல்லாமல் மக்களோடு நெருக்கமாக பயணிக்கும் பொதுமுகமாகவும் அடையாளப்படுத்தியது. பின்னாளில் உருவான அவரது மக்கள் ஆதரவு மற்றும் அரசியல் பிம்பத்திற்கான ஆரம்பகால அடித்தளங்களில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி கருதப்படுகிறது.

அரசியலை மறுத்தாலும், மக்கள் இயக்கம் உருவாகியது

2009 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து விஜய் அரசியல் வருகை என்ற ஊகங்கள் பரவின. அதற்கு நேரடியாக பதிலளித்த விஜய், "இது வெறும் மரியாதைக்கான சந்திப்பு மட்டுமே; என் கவனம் முழுவதும் திரைப்படங்களில் தான் உள்ளது; தற்போது அரசியலில் நுழைய திட்டமில்லை" என தெளிவாக கூறினார். இருப்பினும், எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தையும் தனது ரசிகர் இயக்கத்தையும் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று கதவை திறந்தே வைத்தார்.

அதே ஆண்டு, முள்ளிவாய்க்கால் படுகொலையை கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெற்ற திரையுலகப் போராட்டத்தில் விஜய் கலந்துகொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இது அவரின் சமூக நேர்மையை வெளிப்படுத்திய முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

2009 ஜூலை 26 அன்று, பல ஆண்டுகளாக இயங்கிய ரசிகர் மன்றங்கள் ஒன்றிணைந்து "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் மாநில அளவிலான அமைப்பாக மாற்றப்பட்டன. இரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள், பேரிடர் நிவாரணம், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று வளர்ந்த இந்த அமைப்பு, 2021 மற்றும் 2022 உள்ளாட்சித் தேர்தல்களில் தனது அரசியல் செல்வாக்கை நிரூபித்தது. 2024 இல் தமிழக வெற்றிக் கழகம் உருவானபோது, இந்த அமைப்பே அதன் அடித்தளமாக செயல்பட்டது.

காவலன்

காவலன், தலைவா: அரசியல் தாக்குதல்களும் திரையரங்கு போர்களும்

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வெளியான காவலன் திரைப்படம், பல திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரிய பின்னரே, நீதிமன்றத் தலையீட்டின் மூலம் படம் வெளியானது.

2013 இல் தலைவா திரைப்படத்தின் "Time to Lead" என்ற போஸ்டர் வாசகம் கடும் சர்ச்சையை எழுப்பியது. அன்றைய அதிமுக அரசு இதை அரசியல் சவாலாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. யாரோ முகம் தெரியாதவர்களால் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன; காவல்துறை பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் வெளியீடு தடைபட்டது. இறுதியில் தயாரிப்புக் குழு சர்ச்சைக்குரிய வாசகத்தை நீக்கிய பின்னரே படம் ஆகஸ்ட் 20 அன்று வெளியானது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் எவ்வளவு நெருக்கமாக பிணைந்திருக்கின்றன என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கிறது.

அண்ணா ஹசாரே போராட்டம்

இதற்கிடையில், 2011 ஆகஸ்ட் 25 அன்று, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாக விஜய் புதுதில்லி ராம்லீலா மைதானம் சென்றார். அண்ணா ஹசாரேவுடன் மேடையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார். ஊழலை கண்டித்தும், காந்திய வழிமுறைகளை பாராட்டியும் பேசிய விஜய், "ஒரு தமிழனாக தேசிய நலனுக்காக குரல் கொடுப்பதில் பெருமை" என்று கூறினார். விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களும் டெல்லியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வு அவரது ஆரம்பகால அரசியல் ஈடுபாட்டின் குறிப்பிடத்தக்க தருணமாக கருதப்படுகிறது.

அண்ணா ஹசாரே

அரசியல் அல்ல, மரியாதை சந்திப்பு

2014 ஏப்ரல் 16 அன்று, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்த நரேந்திர மோடி, கோயம்புத்தூர் விமான நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகர் விஜயை சந்தித்தார். அப்போது விஜய் பொள்ளாச்சி பகுதியில் கத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் இந்தச் சந்திப்பு எளிதாக ஏற்பாடு செய்யப்பட்டது. மோடி தரப்பினர் இதற்கு முன்பும் இரண்டு முறை சந்திப்பை ஏற்பாடு செய்ய முயன்றிருந்தாலும், ஜில்லா படத்தின் விளம்பரப் பணிகள் மற்றும் Kaththi படப்பிடிப்பு காரணமாக அது சாத்தியமாகவில்லை என்று விஜயின் தரப்பு விளக்கம் அளித்தது.

இந்தச் சந்திப்பு தேர்தல் காலத்தில் நடைபெற்றதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டாலும், இரு தரப்பினரும் இதை "மரியாதை நிமித்தமான, அரசியல் சார்பற்ற சந்திப்பு" என்று விவரித்தனர். விஜயின் கூற்றுப்படி, அவருடைய 21 ஆண்டுகால திரைப்படப் பயணம், தமிழ் சினிமா மற்றும் திரைப்படத் துறை பற்றிய விவாதங்களே முக்கியமாக இடம்பெற்றன. இருப்பினும், தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜயும், அப்போது பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியும் சந்தித்தது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்ற நிகழ்வாக அமைந்தது.

புலி தோல்வியும் ட்ரோல் கலாச்சாரமும்

2015 அக்டோபர் 1 அன்று வெளியான புலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதிக பட்ஜெட், பலவீனமான கிராபிக்ஸ் என்று விமர்சனங்கள் குவிந்தன. சமூக வலைதளங்களில் போட்டி நடிகர்களின் ரசிகர்கள் குறிப்பாக அஜித் ரசிகர்களின் மீம்களாலும் கேலி பதிவுகளாலும் தாக்கினர். இந்தச் சர்ச்சைகளுடன் ஒத்திசைவாக, வருமான வரித்துறை விஜயுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது, விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியது. புலி தோல்வி, விஜயின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் பேசப்பட்ட பின்னடைவாக மாறியது.

அதற்கு சுமார் 40 நாட்களுக்கு பின் வெளியான அஜித்தின் வேதாளம் பெரும் வெற்றியடைந்தது. இது விஜய் ரசிகர்களுக்கும் போட்டி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதலை உருவாக்கியது. காவலன் வெளியீட்டின் போது திமுக ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள், தலைவா வெளியீட்டின் போது அதிமுக ஆட்சியுடன் ஏற்பட்ட மோதல்கள் என்று பல்வேறு அரசியல் சேதங்கள் பின்னணியில் இருந்தன. அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி, சில கட்சி ஆதரவாளர்களும் சேர்ந்து விஜய்யை தொடர்ந்து விமர்சித்தனர்.

தெறி

"அண்ணா" ஒரு பட்டப்பெயரிலிருந்து அரசியல் அடையாளம் வரை

தெறி திரைப்படத்திலிருந்து தொடங்கி, விஜய் நடித்த பல படங்களில் "அண்ணா" என்ற சொல் வெறும் உறவுமுறை அழைப்பாக அல்லாமல், அன்பு, பாதுகாப்பு, தலைமை என்ற அடையாளமாக தொடர்ந்து கட்டமைக்கப்பட்டது. மெர்சலில் இலங்கைத் தமிழ் பெண்ணொருவள் பிரான்ஸ் விமான நிலையத்தில் விஜயை "அண்ணா" என்று அழைக்கும் காட்சி, மாஸ்டரில் சீர்திருத்த பள்ளி சிறுவர்கள் "அண்ணா, எங்களை காப்பாற்றுங்கள்" என வேண்டுவது, பிகில், பெண் கால்பந்து வீராங்கனைகள் மரியாதையுடன் அவரை "அண்ணா" என்று அழைப்பது, இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொடர்பு பிம்பத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்தது.

அரசியல் பிம்பத்தை வலுப்படுத்திய திரைப்படங்கள்

துப்பாக்கி (2012) திரைப்படம் இந்திய இராணுவ வீரர்களின் பங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. இராணுவ அதிகாரியாக நடித்த விஜய் கதாபாத்திரம் தேசப்பற்று, ஒழுக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கருத்துகளை வலியுறுத்தியது. இதனால் படம் தேசிய உணர்வு, பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பொறுப்பு தொடர்பான உரையாடல்களை பொதுவெளியில் தூண்டியது.

கத்தி (2014) திரைப்படம் விவசாயம், நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசியல், சமூக விவாதங்களை உருவாக்கியது. குறிப்பாக விவசாய நிலங்களை தொழில் திட்டங்களுக்காக கையகப்படுத்துவது, விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை படம் எழுப்பியது. இதனால் விவசாயம் மற்றும் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகள் குறித்து பரவலான கவனம் உருவானது.

மெர்சல்

மெர்சல் (2017) திரைப்படம் வெறும் வணிகப் படமாக மட்டுமல்லாமல், GST வரி முறை, மருத்துவத் துறையின் வணிகமயமாக்கல், தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள், இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தின் அவசியம் போன்ற சமூக-அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றது. குறிப்பாக மருத்துவர் மாறன் கதாபாத்திரத்தின் வசனங்கள் மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் பொது சேவைகள் குறித்த விவாதங்களைத் தூண்டின.

சர்க்கார் (2018) விஜயின் பொது ஆளுமையை அரசியல் சாத்தியக்கூறுகளுடன் இணைத்துப் பார்க்கும் ஒரு கலாச்சார தருணமாக மாறியது. ஊழல் எதிர்ப்பு வசனங்கள், வாக்குரிமையின் முக்கியத்துவம், அரசியல் அமைப்பின் மீதான விமர்சனம் என்று படத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்வையும் அரசியல் ஆர்வத்தையும் தூண்டின. திரையில் அரசியல் மாற்றத்தை பேசும் கதாநாயகனை, நிஜ வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக சிலர் கற்பனை செய்ய தொடங்கினர்.

இதனால் திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு படத்தைத் தாண்டி, அரசின் பொறுப்பு, சமூக நீதி மற்றும் மக்கள் நலன் தொடர்பான அரசியல் உரையாடல்களை பொதுவெளியில் உருவாக்கிய திரைப்படமாகக் கருதப்பட்டது.

மீனவர் சமூகமும் திரைக்கதைகளும் தற்செயலா, திட்டமிட்டதா?

நிலாவே வா, சுறா, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களில் கடலோர வாழ்வியல் மற்றும் மீனவர் சமூகத்துடன் தொடர்புடைய கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது. தமிழக அரசியலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவர் வாக்குகள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றன. இலங்கை கடற்படை நடவடிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று மீனவர் உரிமைகள் பொது விவாதத்தில் இருந்த காலகட்டத்தில் அந்த சமூகத்துடன் உணர்வுபூர்வ தொடர்பை ஏற்படுத்தும் திரைமுகம் உருவானது தற்செயலா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் திரைப்படக் கதாபாத்திரங்களுக்கும் அரசியல் ஆதரவுக்கும் இடையே நேரடி காரண-விளைவு தொடர்பை நிரூபிப்பது கடினம் என்பதும் நாணயமான மதிப்பீடாகும்.

வருமான வரித்துறை விசாரணைகள்

2015 இல் புலி திரைப்படத்தின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது; சில வருமானங்கள் முழுமையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் அபராத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. 2020 இல் பிகில் படத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய் விசாரணைக்கு அழைக்கப்பட்டது அரசியல் மற்றும் ஊடக விவாதங்களை கொழுந்துவிட்டு எரியவைத்தது. ஆதரவாளர்கள் இதை அரசியல் நோக்கமுடைய நடவடிக்கை என கண்டித்தனர்; வரித்துறை தரப்பில் இது வழக்கமான வரி ஆய்வு என்று விளக்கப்பட்டது.

'புலி' படம்
'புலி' படம்

"இளைய தளபதி" யிலிருந்து "தளபதி" வரை

திரையுலகில் விஜய் "இளைய தளபதி" என்று அழைக்கப்பட்டதிலிருந்து "தளபதி" என்று மாறியது வெறும் பட்டப் பெயர் மாற்றமாக மட்டுமல்ல. ஒரு முதிர்ந்த தலைமை பிம்பத்தை நோக்கிய குறியீட்டு நகர்வாக பார்க்கப்படுகிறது. திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள், மக்களுக்காக போராடும் கதை அமைப்புகள், ரசிகர் மன்றங்களின் விரிவாக்கம், சமூக நலச் செயல்பாடுகள், திரை வெளியீடுகளின் போது வெளிப்பட்ட மாபெரும் மக்கள் அலை. இவை அனைத்தும் சேர்ந்து, அவரை சாதாரண நடிகர் என்ற எல்லையிலிருந்து மக்கள் மனதில் செல்வாக்கு கொண்ட தலைவராக உயர்த்தின.

விஜய் பட பாடல்களின் அரசியல் தாக்கம்: தலைவன் பிம்பம்

விஜயின் பல திரைப்படப் பாடல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே இல்லாமல், அவரது திரைமுகத்தையும் சமூக-அரசியல் பிம்பத்தையும் வடிவமைத்த முக்கிய கருவிகளாக செயல்பட்டன. மக்கள் எழுச்சி, ஊழல் எதிர்ப்பு, தமிழ் அடையாளப் பெருமை, இளைஞர் சக்தி, தலைமைத்துவம், சமூக நீதி மற்றும் அரசியல் மாற்றம் போன்ற கருத்துகளை இப்பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தின.

குறிப்பாக வேட்டைக்காரன் திரைப்படத்தின் "புலி உறுமுது", சுறாவின் "வெற்றிக்கொடி ஏத்து", தலைவாவின் "தளபதி தளபதி", மெர்சல் திரைப்படத்தின் "ஆளப்போறான் தமிழன்", சர்கார் படத்தின் "ஒரு விரல் புரட்சி", லியோவின் "நா ரெடி", வாரிசுவின் "தீ தளபதி", மற்றும் GOAT திரைப்படத்தின் "வீசில் போடு" போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே வெறும் கொண்டாட்டப் பாடல்களாக மட்டுமல்லாமல், ஒரு தலைவர் குறித்த கற்பனை, அரசியல் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, சமூகப் பங்கேற்பு மற்றும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் கலாச்சாரச் சின்னங்களாகவும் மாறின.

இப்பாடல்கள் மூலம் விஜய் ஒரு சாதாரண திரைப்பட நட்சத்திரமாக மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைமைத்துவ முகமாகவும், அரசியல் மாற்றத்தின் சாத்தியமான அடையாளமாகவும் ரசிகர்களின் மனதில் படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டார்.

எதிர்ப்பிலிருந்து உருவான அரசியல் சக்தி

அரசியல் அரங்கில் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு எப்போதும் காணப்படுகிறது. ஒருவரை பலவீனப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் தாக்குதல்களே, சில நேரங்களில் அவரின் எழுச்சிக்கான அடித்தளமாக மாறிவிடுகின்றன. விஜயின் அரசியல் பயணம் அதற்கான குறிப்பிடத்தக்க உதாரணமாகத் திகழ்கிறது. அவரை தொடர்ந்து கேலி செய்தவர்களும், அவரது திரைப்படங்களை அரசியல் கண்ணோட்டத்தில் எதிர்த்தவர்களும், அவரை புறக்கணிக்க முயன்ற சக்திகளும் அறியாமலேயே அவரது அரசியல் வளர்ச்சிக்கான உரமாக மாறினர்.

ஒவ்வொரு விமர்சனமும் அவரது ஆதரவாளர்களின் உணர்வுகளை மேலும் தீவிரப்படுத்தியது. ஒவ்வொரு தடையும் அவரைச் சுற்றியிருந்த ரசிகர் வட்டத்தை இன்னும் இறுக்கமாக ஒன்றிணைத்தது. அவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும், மக்களின் பார்வையில் அவரை ஒரு சாதாரண நடிகராக அல்லாமல், தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் போராளியாக உருவாக்கியது. எதிர்ப்புகள் அவரை பலவீனப்படுத்தவில்லை; மாறாக, அவை அவரது அரசியல் அடையாளத்தை மேலும் செதுக்கி, மக்களின் மனதில் உறுதியான இடத்தைப் பெற்றுத் தந்தன.

விஜய்
விஜய்

ஒருவரின் சுயமரியாதை, சுய அடையாளம் மற்றும் சமூக செல்வாக்கை தொடர்ந்து காயப்படுத்தும் முயற்சிகள், அவரை வீழ்த்துவதற்கான ஆயுதமாக இல்லாமல், எழுச்சிக்கான எரிபொருளாக மாறும் என்பதைக் தமிழக அரசியல் வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. விஜயின் அரசியல் வளர்ச்சியும் அதே வரலாற்றின் புதிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான எதிர்ப்புகள், இறுதியில் அவரை மேலும் வலிமையான அரசியல் சக்தியாக மாற்றியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அரசியல் சவால்களின் வேர்களை ஆராய்ந்தால், அவற்றின் ஒரு பகுதி கடந்த காலத்தில் விஜயை நோக்கி செலுத்தப்பட்ட தொடர்ச்சியான எதிர்ப்புகளிலும் விமர்சனங்களிலும் புதைந்திருப்பதை காண முடிகிறது. அவரைத் தடுக்க முயன்ற பல கைகள், அறியாமலேயே அவருக்கான பாதையை விரிவுபடுத்தின. அவரை பின்தள்ள நினைத்த பல குரல்கள், எதிர்பாராத விதமாக அவரது அரசியல் குரலுக்கு மேலும் வலிமை சேர்த்தன.

திரையுலகில் தொடங்கிய ஒரு நட்சத்திரத்தின் பயணம், இன்று ஒரு கலாச்சார மற்றும் அரசியல் நிகழ்வாக பரிணமித்துள்ளது. எதிர்காலத்தில் அந்தப் பயணம் எந்த உயரத்தை எட்டும் என்பது காலத்தின் கையில் இருந்தாலும், எதிர்ப்புகளையே தனது எழுச்சிக்கான படிக்கற்களாக மாற்றியவர் என்ற அடையாளத்தை விஜய் ஏற்கனவே பெற்றுவிட்டார் என்பதில் ஐயமில்லை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User