'படமெடுக்க வந்தவருக்கு அவர் சொன்ன அந்த அட்வைஸ்!' - ஆர்.பி. சௌத்ரியுடன் என் நினைவுகள்

May 06, 2026 - 15:31
0
'படமெடுக்க வந்தவருக்கு அவர் சொன்ன அந்த அட்வைஸ்!' - ஆர்.பி. சௌத்ரியுடன் என் நினைவுகள்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம்.

அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழலாடுகின்றன. தி.நகரின் நார்த் போக் ரோட்டில் உள்ள சூப்பர் குட் அலுவலகத்திற்குச் சென்றால் சௌத்ரி சாரை பார்க்க பெரிய கூட்டமே திரண்டிருக்கும். அத்தனை பேரும் உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அவர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்கள் என நாளைய இயக்குநர்களும், நடிகர்களின்களின் க்யூவே களைகட்டும்.

அத்தனை பேரும் அவரிடம் கதை சொல்வதற்காகக் காத்திருப்பார்கள். காரணம், தேவர் ஃபிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்கள் போல, சூப்பர் குட் ஃபிலிம்ஸின் கதை இலாகா கிடையாது. கதைகள் கேட்பதற்காக பத்து, பதினைந்து பேர் கொண்ட குழு கிடையாது சௌத்ரி சாரே்தான் கதை கேட்பார். கதை பிடிச்சிருந்தால் உடனே 'ஓகே' என ரிசல்ட்டையும் சொல்லிவிடுவார். பலரின் வாழ்க்கை அந்த ஒரே நாளில் வெளிச்சம் பரவிவிடும்.

RB Choudary
RB Choudary

தயாரிப்பில் 100வது படத்தை நெருங்கிவிட்ட அவர், ``ஒரு படம் ஓடும்னு நூறு சதவிகிதம் என்னால ஜட்ஜ் பண்ண முடியாது. ஆனா, என் மைன்ட்டுக்கு தோணின கண்டிப்பாக அது ஓரளவுக்காவது ஓடக்கூடியதுனு தெரிஞ்சிடும். அதே சமயம் என்னோட செலக்ஷன் கூட எடுபடாமல் போயிருக்கிறது.

'புதுவசந்தம்', 'பெரும்புள்ளி' ரெண்டுமே நான் தேர்ந்தெடுத்த கதைகள்தான். 'புதுவசந்தம்' சூப்பர் ஹிட். 'பெரும்புள்ளி' படுஃபிளாப். ஸோ, வெற்றியை யாராலும் நூறு சதவிகிதம் கணிக்க முடியாது'' என ஒளிவு மறைவின்றி சொல்லியிருக்கிறார்.

ஒருவர் கதை சொல்லும் போதே சரியாகக் கணித்து விடுவார். அதைப் போல சில இயக்குநர்களுக்கு கதை சொல்ல வராது. மேடையில் பேசுவதை போல ஒரு தயக்கமும், படப்படப்பும் இருக்கும். ஆனா, சௌத்ரி சார் ஆளை பார்த்ததும் எடை போட்டுவிடுவார்.

அவருக்கு கதை சொல்ல வரவில்லை என ரிஜக்ட் செய்யாமல், 'ஸ்கிரிப்ட்டைக் கொடுத்துடுங்க. படிச்சிட்டு சொல்றேன்' என்பார். அப்படி அவர் கதைகளைப் படித்துவிட்டு அன்றே அந்த இயக்குநரைக் கூப்பிட்டு, 'இந்த வாரமே பூஜை போட்டிடலாம்பா' என்று சொல்லியிருக்கிறார். அந்த இயக்குநர்கள் இப்போது பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள்.

R B Choudary
R B Choudary

எப்போதும் தினமும் அலுவலகம் வந்துவிடும் சௌத்ரி சார், வந்ததும் முதல்வேலையாக அலுவலகத்தின் கீழ்த் தளத்தில் உள்ள பூஜை அறைக்குச் சென்று, பக்தி உருக வணங்கிவிட்டு அதன்பிறகே முதல்மாடியில் இருக்கும் தன் அறைக்குள் செல்வார். அங்கேயும் அவருக்காக பெரிய இயக்குநர்கள் சிலர் காத்திருப்பார்கள்.

சின்னவர்கள், பெரியவர்கள் வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் அன்பைக் காட்டுவார். நான் சென்னை வந்த புதிது. தமிழ் சினிமாவின் பொற்காலக்கட்டம். முதன்முறையாக ஏவி.எம்.மில் ஒரு படப்பூஜையில் தான் (மாயி என நினைக்கிறேன்) அவரிடம், `அண்ணே.. ' என அறிமுகம் செய்து கொண்டு பேசுகிறேன். அந்த 'அண்ணே' அவரைக் கவர்ந்துவிட்டது போல, அதிர சிரித்துவிட்டு என் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு போனார்.

R B Choudary
R B Choudary

அதன் பிறகு அவரைப் படப்பூஜையில், பிரஸ்மீட்டில் சந்திக்கும் போதெல்லாம் என்னை பார்த்தம், 'என்னப்பா, எப்படியிருக்கேப்பா' என்பார். பின்பு, 'சொல்லுப்பா பாரதி' எனக் கூப்பிடும் அளவுக்கு நட்பானார். ஒரு பேட்டியில் அவர் சொன்ன சில விஷயங்கள் இப்போதும் பளீச்சென ஞாபகம் இருக்கிறது.

அவர் டஜன் கணக்கில் புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்த சமயத்தில் படம் தயாரிக்க விரும்பிய ஒருவர் அவரிடம் 'உங்களிடம் ஒரு கோடி கொடுக்கிறேன். படமெடுத்து கொடுங்கள்' எனக் கேட்டிருக்கிறார். அதற்கு சௌத்ரி சார், அவரிடம் சொன்னது என்ன தெரியுமா? `உங்களிடம் பத்து கோடி இருந்தால், ஒன்பது கோடியை வீட்டுல வச்சுக்குங்க. ஒரு கோடியை மட்டும் கொடுங்க. படமெடுகக்கலாம்.

ஜெயிச்சா ஜாக்பாட். இல்லனா, உங்களுக்கு ஒன்பது கோடி லாபம். இருந்த ஒரு கோடியைக் கொடுக்க நீங்க வீடு வாசல், நிலம் எல்லாத்தையும் வித்து கொடுக்கறது முட்டாள்தனமான முடிவாகும்'னு அதிரடியாக சொன்னார்.

அவரின் சரியான இந்த வழிகாட்டுதலைக் கேட்டு அந்த மனிதர் நெகிழ்ந்து விட்டார். இப்படி பல சம்பவங்கள் அவரிடம் சொல்ல முடியும்.

R B Choudary
R B Choudary

அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். இன்னிக்கு சினிமாவுல ஒரு தலைகாட்டுற சீன்ல வரும் நடிகர் கூட பெரிய நடிகராக பந்தா காட்டும் சீஸன் இது. 50 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர், 99 படங்களைத் தயாரித்த சௌத்ரி சார் போனை அட்டென்ட் செய்துவிடுவார். ஃப்ரீயாக இருந்தால் சில நேரம் பேசுவார்.

கடந்த ஆண்டு விகடன் சினிமா விருதுக்காக அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டியிருந்தது. `பாரதி நான் வெளியூர்ல இருக்கேன்ப்பா. ரமாகிட்ட (அவரது அலுவலக உதவியாளர்) கொடுத்துடு' என்றார். அதைப் போல, விழா முடிந்த பிறகுதான் அவர் சென்னை திரும்பியிருப்பார். ஆனாலும் 'இன்விடேஷன் பார்த்தேன். வரமுடியாமல் போச்சுப்பா' என வருத்தமும் தெரிவித்த பண்பாளர்.

அவரிடம் நான் வியந்த ஒன்று, ``ஜீவா ஒரு படம் பண்ணியிருக்கார்... ரமேஷ் (ஜித்தன் ரமேஷ்) ஒரு படம் பண்ணியிருக்கார். ஒரு பேட்டி பண்ணிக்குடுங்க,'' என அவர் எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை. அவர் கேட்டிருந்தால் யாரும் மறுத்திருக்கவும் மாட்டார்கள். ஒரு போதும் அவர் அப்படி செய்ததில்லை.

``நல்ல கதை கண்டிப்பா ஜெயிக்கும்'' என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார். அது மகன்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி! கதையைத்தான் ரியல் ஹீரோவாக நினைத்தவர் அவர்.

தென்னிந்திய சினிமா இருக்கும் வரை அவர் பேசப்படுவார்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User