Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் - ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்' செய்கிறதா?

May 28, 2026 - 20:02
0
Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் - ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்' செய்கிறதா?

சென்னையில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ராஜாராம் (அர்ஜுன்), தன்னுடைய மகள் நிலா (ப்ரீத்தி முகுந்தன்) தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும், அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காகச் சிறுவயதிலேயே அவருக்குக் கராத்தே கற்றுத்தருகிறார். மற்றொரு பக்கம், ஒரு மலைக்கு அருகே இருக்கும் கிராமத்தின் அழிவையே கருத்தில் கொள்ளாமல் சுரங்கம் தோண்டி வளங்களை அபகரிக்க முயல்கிறார் 'கார்ப்பரேட் வில்லன்' வருண் தயாளன் (ஜான் கொக்கன்).

Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்
Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்

அதற்காக வருண் கையிலெடுக்கும் விஷயங்கள் என்ன, இதில் ராஜாராம் குடும்பம் எப்படிச் சம்பந்தப்படுகிறது, அவரின் குடும்பத்தினர் வருணின் திட்டங்களை எப்படி 'ப்ளாஸ்ட்' செய்கின்றனர் என்பதுதான் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை.

குடும்பஸ்தனாக அர்ஜுன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைக் குறையின்றி அள்ளித் தந்திருக்கிறார். அமைதி மோடு பொத்தானை நடிப்பில் அழுத்தியிருந்தாலும், ஆக்ஷன் களத்தில் 'நான் ஸ்டாப்' - ஆக வலம் வந்திருக்கிறார். கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தந்திருக்கும் வேலையை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். கராத்தே பயின்று ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் செலுத்திய உழைப்பிற்கு க்ளாப்ஸ்! நீலவேணியாக அபிராமி, இளங்கோவாக விவேக் பிரசன்னா ஆகியோர் ஆக்ஷன், நடிப்பு என அவர்களுடைய மைதானத்தில் ஆல் ரவுண்டர்களாக ஸ்கோர் செய்கிறார்கள்.

Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்
Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்

வில்லன்களாக ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன் என மூவர் வருகிறார்கள். இதில் அர்ஜுன் சிதம்பரத்தின் இறுக்கமான நடிப்பும், பவனின் வில்லனிசமும் மட்டுமே நம் நினைவில் தங்குகின்றன. வில்லனுக்கான 'க்ளிஷே' மொழியில் வரும் ஜான் கொக்கன் வெறுமனே கடந்துபோயிருக்கிறார். இவர்களைத் தாண்டி திலீபன், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'டியூட்டி'-யைக் குறைவின்றிப் பார்த்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் காட்சிகளை மோகோபோட் கேமரா உதவியுடன் படம்பிடித்த விதம், இரவு நேரக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் லைட்டிங் என ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா மொழி இந்த ஆக்ஷன் சினிமாவுக்குச் செம்மையான 'டச்' தந்திருக்கிறது. '2x' வேகத்தில் சோர்வுடன் நடைப்பயணம் போகும் இந்த இரண்டரை மணி நேரப் படத்திற்குப் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் 'எனர்ஜி டிரிங்க்' கொடுக்கத் தவறியிருக்கிறார். ஆனால், வெவ்வேறு சிக்கல்கள், அதிலிருந்து எழும் பிரச்னைகள், அது ராஜாராம் குடும்பத்துடன் சம்பந்தப்படுவது என்கிற கதையை நேர்த்தியாக இணைத்த விதத்திற்கு லைக்ஸ் பிரதீப்!

Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்
Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்

படத்திற்கு ஆக்ஷன் நிறம் சேர்க்கும் சண்டைக் காட்சிகளுக்குச் சிரத்தை தந்து உழைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு 'ஃப்யர்' விடலாம். படத்தில் ஆங்காங்கே வரும் ஆங்கிலப் பாடல்கள், திருப்பத்தை உண்டாக்கும் காட்சிகளில் அமைத்திருக்கும் மாஸ் பின்னணி இசை என இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் திரையரங்கை பிளாஸ்ட் செய்திருக்கிறார். ஆனால், அதே சமயம் ஒரு சில இடங்களில் வரும் பின்னணி இசை ஒரு ரவுண்டிற்குள்ளாகவே ரவுண்டு போய் ஓவர்டோஸ் ஆகியிருக்கிறது.

ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் கராத்தே ஜாம்பவான்கள். பல்வேறு இடங்களைச் சுற்றி, முட்டி, மோதி இந்தக் குடும்பத்திற்கு வரும் முக்கியப் பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆக்ஷன் தடதடக்கும் படமாகக் கொண்டு வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ். நிலாவின் சிறுவயது கராத்தே பயிற்சி, அதனைக் கற்றுத் தேர்ந்து அநீதிக்கு எதிராகவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர் அதைப் பயன்படுத்துவது, கார்ப்பரேட் வில்லனின் திட்டம் எனத் திரியைக் கிள்ளிப் பற்ற வைத்துப் படத்தின் கதையைத் தொடங்குகிறார் இயக்குநர்.

Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்
Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்

ஆனால், படத்தின் முதல் 40 நிமிடங்கள் மையக்கதையின் வாயிலிற்கே செல்வதற்கு முரண்டு பிடிக்கிறது. இப்படி நம் பொறுமைக்கு வெடி வைக்கும் திரைக்கதை மெதுவாக இடைவேளையின் போதுதான் படத்தின் மையக்கதையை எட்டுகிறது. ஆனால், அதுவும் நமக்கு பழக்கப்பட்ட கார்ப்பரேட் வில்லன், அவரைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள் என 'க்ளிஷே' கதையை ஏந்தியபடியே நகர்கிறது.

இதற்கிடைப்பட்ட கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு வரும் பிரச்னைகள், அதனை ஒவ்வொன்றாகக் கதையின் மையப்புள்ளிக்குள் இணைத்த ஃபார்முலா நச் ரகம்! அதேபோலப் படத்தின் இடைவேளைக் காட்சியில் சின்ன சின்ன சர்ப்ரைஸ் தருணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர். அது 'புல்லட் பாம்' போல ஒலியுடன் வெடிக்கவில்லை என்றாலும் டீசண்டான மாஸ் உணர்வை உண்டாக்குகிறது. இரண்டாம் பாதியில் குழப்பங்களால் நடக்கும் சின்ன சின்ன 'கலகல' தருணங்கள், ஆங்காங்கே தோன்றும் சர்ப்ரைஸ் என நிதானமாகி நிமிர்கிறது திரைக்கதை.

Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்
Blast Review | ப்ளாஸ்ட் விமர்சனம்

ஆனால், அதற்கடுத்த காட்சிகள் அனைத்தும் லாஜிக் கேள்விகளைப் புஷ்வாணப் பெட்டிக்குள் அடைத்துப் பொசுக்கியிருக்கிறது. அத்தனை போலீஸாரைக் கொலை செய்த பிறகும் ஏற்படாத பரபரப்பு, பெரம்பூர் போலீஸுக்கே அப்பகுதியின் பிரபல ரவுடி பற்றித் தெரியாமல் இருப்பது, ராஜாராம் வீட்டின் அருகே யாராவது குடியிருக்கிறார்களா இல்லையா எனப் படம் எழுப்பும் பல லாஜிக் விஷயங்களுக்குத் தெளிவான பதில்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மிடம் இருந்து அந்நியமாகிறது கதை. இதன் பிறகு வரும் க்ளைமாக்ஸ் காட்சியில், முடிவைப் பல மைல்களுக்கு 'லாங் ஜம்ப்' தாண்டுவது போல் இழுத்திருப்பது ஏனோ!

மேக்கிங் தரத்தில் மின்னும் படம்தான். திரைக்கதையின் சோதனையான மேடு பள்ளங்களை மட்டும் புதிய ட்ரீட்மெண்ட் கொடுத்து களைந்திருந்தால் 10000 வாலா பட்டாசாக 'ப்ளாஸ்ட்' ஆகியிருக்கும்! இப்போதோ ஊசி வெடியாக நம் தலையை மட்டுமே திரும்ப வைக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User