பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ... நவம்பரில் வரலாறு காணாத அளவில் தீவிரம் ஆகலாம்!

Aug 08, 2026 - 15:01
0
பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ... நவம்பரில் வரலாறு காணாத அளவில் தீவிரம் ஆகலாம்!

இந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது சூப்பர் எல் நினோ. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.0°C-க்கு மேல் உயரும்போது எல் நினோ என்றும், 2.0°C-க்கு மேல் உயரும்போது சூப்பர் எல் நினோ என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

சாதாரண எல் நினோ பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். சூப்பர் எல் நினோ 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் 2015, 1997, 1982 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் சூப்பர் எல் நினோ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

இயல்பாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருவாகும் இயற்கை சுழற்சி நிகழ்வாக இருந்தாலும், இந்த ஆண்டு இது பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் 1876 ஆம் ஆண்டின் தாது வருட பஞ்சம் தொடர்பான நினைவுகளே. வரலாற்றில் மிக வலுவான எல் நினோக்களில் முதன்மையானதாக கருதப்படும் 1876–78 நிகழ்வு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு, அதைவிட தீவிரமான சூப்பர் எல் நினோ இந்த ஆண்டு உருவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

1876 ஆம் ஆண்டு உருவான சூப்பர் எல் நினோ, பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை சுமார் 3.0°C அளவை எட்டிய வலுவான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 1876 முதல் 1878 வரை இரண்டு ஆண்டுகள் நீடித்த அந்த நிகழ்வு உலக அளவில் பெரும் பஞ்சம், பட்டினி, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தியது. அன்றைய உலக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதம் (சுமார் 5 கோடி பேர்) உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய எல் நினோ 2026-ல் மீண்டும் தீவிரமடையும் நிலையில் உள்ளது. அன்று மக்களுக்கோ அரசுகளுக்கோ இது குறித்த விழிப்புணர்வு, தானிய சேமிப்பு அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்தகைய நிகழ்வை எதிர்கொள்ள முடியும் என்றாலும், புவி வெப்பமயமாதல் காரணமாக இது சவாலான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் உருவான எல் நினோ, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே சூப்பர் எல் நினோ நிலைக்குத் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல் முறை எனக் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக 2015-ல் ஆகஸ்ட் மாதத்தில் 1.20°C, 1997-ல் 1.60°C, 1982-ல் 1.12°C அளவில் எல் நினோ தீவிரம் இருந்தது. அந்த ஆண்டுகளில் அக்டோபர்–நவம்பர் மாதங்களில்தான் சூப்பர் எல் நினோ நிலையை அடைந்தன. தற்போதைய நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் இது வரலாறு காணாத அளவிற்கு 3.5°C-க்கு மேல் அதிகரித்து “தீவிரமான சூப்பர் எல் நினோ”வாக வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் நீடித்த மேற்கத்திய காற்று குவிதல் மற்றும் ஜூலை மாதத்தில் உருவான பவி, டால்பின் போன்ற சூப்பர் புயல்கள் முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்திற்குள் பசிபிக் பெருங்கடலில் மூன்று சூப்பர் சூறாவளிகள் உருவாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இயல்பாக மேற்கு பசிபிக்கில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில்தான் சூப்பர் சூறாவளிகள் உருவாகும். இந்த ஆண்டும் அடுத்த மூன்று மாதங்களில் மேலும் மூன்று சூப்பர் சூறாவளிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை உருவாகும்போது, சூப்பர் எல் நினோ நவம்பர்–டிசம்பர் மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீவிரமடையக்கூடும்.

இந்த தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கம் உலக அளவில் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் எதிரொலிக்கும். தற்போதே ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் அதிக வெப்பம், வெப்ப அலை, பருவமழை பற்றாக்குறை, காட்டுத்தீ, பெருமழை, வெள்ளப்பெருக்கு போன்ற சவாலான சூழல்கள் நிலவுகின்றன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் மழை பற்றாக்குறையும், சில மாநிலங்களில் பெருமழையும் நிகழ்ந்து வருகின்றன.

சூப்பர் எல் நினோ உருவானதன் காரணமாக ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; மழைப்பொழிவின் தாக்கம் குறையும். உலகின் சராசரி வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2.0°C அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சுருக்கமாக, அக்டோபர் வரை வெப்பம், வெப்ப அலை மற்றும் வறட்சியும், நவம்பர்–டிசம்பரில் பெருமழையும், ஜனவரி முதல் அதிக வறட்சியும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User