மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள்" - ராஜ்மோகன்

Jun 15, 2026 - 09:32
0
மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள்" - ராஜ்மோகன்

மதுரை காந்தி அருங்காட்சியத்தில் அருங்காட்சிய புனரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மதுரையில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க வந்துள்ளேன். பள்ளிவளாகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்ள நிலையில், போதைப்பழக்கம் என்பது குற்றங்களின் தாய்மடியாக உள்ளது.

எங்களது ஆட்சி வந்தவுடன் இதுவரை 1638 குற்றவாளிகள் கைது, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிடிவாரண்ட் என 4 ஆயிரம் குற்றவாளிகளை சிறையில் அடைக்கவுள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் கொட்டி அழிக்கப்படுகின்றன. போதையில்லா தமிழ்நாடு என்பது நம்முடைய இலக்கு. முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழகத்தில் போதைக்கலாசாரம் வேரோடு அகற்றப்படும்.

காலி பணியிடங்களை எவ்வளவு வேகமாக நிரப்புவோமோ அதனை நிரப்புவோம், சில பிரச்னைகள் நீதிமன்றத்தில் உள்ளன; சில பிரச்னைகள் பேசவேண்டியுள்ளன. போர்களே பேசி முடிக்கும்போது பள்ளிக்கூட பிரச்னை முடிக்க முடியாதா?

மாணவர் கைகளில் சாதிக்கயிறு
மாணவர் கைகளில் சாதிக்கயிறு

717 டாஸ்மாக் கடைகள் மூட அடிப்படை காரணம் பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால்தான். பள்ளி செல்லும் வழியில் என்ன இருக்கிறதோ, அதனைப் பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். எனவேதான் பள்ளி அருகே இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன.

இது தொடக்கம் மட்டும் தான் இன்னும் வரக்கூடிய காலகட்டங்களில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் இருந்தால் நிச்சயமாக அவை அகற்றப்படும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு சில இடங்களில் சென்சிட்டிவாக சாதிய மோதலைத் தூண்டி விடுகிறார்கள். இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் என வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள். அதனை அனுமதிக்கக் கூடாது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

ஏற்கனவே என்ன நடைமுறையில் இருந்ததோ, அது தொடரும். நானே குங்குமம், விபூதி வைத்துதான் பள்ளிக்குச் செல்வேன். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அரசுப் பள்ளிகளில் சேர்க்க விகிதம் தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது. அதனை இன்னும் கூடுதல் படுத்தவுள்ளோம்” என்றார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User