State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

Mar 18, 2026 - 20:01
 0
State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்கில் உள்ளது.

தி.மு.க வின் துணை பொதுச்செயலாளராகவும், தென் மண்டலத்திற்கான பொறுப்பாளராகவும் இருக்கிறார் கனிமொழி. டெல்லியின் தி.மு.க-விற்கான மூவ் களை இவரை வைத்தே ஸ்டாலின் செய்துவருகிறார்.

சமீபத்தில் காங்கிரஸ் - தி.மு.க இடையே கூட்டணி சிக்கல் வந்தபோது கனிமொழி தான் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் கனிமொழி உடன் இருந்தார்.

டெல்லியில் தி.மு.க தொடர்பான பணிகளாக இருந்தாலும், மத்திய அரசு தொடர்பான கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தி.மு.க சார்பாகவும், இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும் பங்கெடுத்த கனிமொழிக்கு தற்போது டெல்லி அரசியல் மீது விருப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி,கனிமொழி

இதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று டெல்லியில் கனிமொழியின் செல்வாக்கை குறைத்துவிட்டு, அந்த இடத்தில் முதல்வரின் மருமகன் சபரீசனை நியமிக்க இருப்பதாக கிளம்பிய பேச்சு.

மற்றொன்று தமிழக அரசியல் களத்தில் கனிமொழிக்கு கிடைத்து வரும் அபரீதமான வரவேற்பும், கனிமொழியை உற்சாகப்படுத்தியுள்ளது. மொழி புரியாத டெல்லிக்கு சென்று அரசியல் செய்வதைவிட, தமிழகத்திலே நமது அரசியலை வேகமாக முன்னெடுக்கலாம் என்று சில மாதங்களாகவே கணக்கு போட்டுவந்தார்.

அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடமும் இதுகுறித்து கனிமொழி ஆலோசித்து வந்தார். அவரது ஆசையை புரிந்து கொண்ட தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர், `வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்க போட்டியிடுங்க அக்கா' என்று சொல்ல ஆரம்பித்தனர்.

அதோடு தி.மு.கவில் விருப்ப மனு பெற்ற போது, பலரும் கனிமொழி சுமார் பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வேட்பாளர்களுக்கான நேர்காணலை தி.மு. க தலைவர் துவக்கியுள்ளார். நேர்காணலுக்கு முன்பாக தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தை தனது அண்ணனும், முதல்வருமான ஸ்டாலினிடம் தெரிவிக்க முயன்றாராம் கனிமொழி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆனால், கனிமொழியின் மூவ் ஏற்கனவே தலைமைக்கு நன்றாக தெரிகிறது. கனிமொழியை டெல்லியின் முகமாக மட்டுமே வைத்துக்கொள்ள தலைமையும், தலைமையின் கிட்சன் கேபினெட்டும் விரும்புவதால் அவரை மாநில அரசியலில் பங்காற்றிடவிடாத அளவுக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள்.

இந்நிலையில் திருச்செந்துார், பாளையங்கோட்டை, விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட சில தொகுதிகளை கனிமொழி தனக்காக அடையாளப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு தலைமை இதுவரை இசைவு கொடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்வாகும் பட்சத்தி்ல், எதிர்காலத்தில் உதயநிதிக்கு சிக்கலாகுமோ? என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. அதோடு துாத்துக்குடி மற்றொரு நபரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம யோசித்தே தலைமை இப்போது கனிமொழியின் ஆசைக்கு தடைபோடும் முடிவை எடுத்துள்ளது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0