சொந்தக் காலில் நின்றதோடு இன்னொரு பெண்ணுக்கும் வேலைவாய்ப்பு; அழகு துறையில் அசத்தும் ஐஸ்வர்யா!
“மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிச்சா போதும்... கடை வாடகையாவது கட்டிடலாம்!” ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டி பார்லர் தொழிலைத் தொடங்கியபோது ஐஸ்வர்யாவின் எதிர்பார்ப்பு அவ்வளவுதான். ஆனால், இன்று அவருடைய உழைப்பு அந்தக் கணக்கையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இவர், மாதம் சுமார் ரூ.60,000 சம்பாதிக்கிறார். ஒரு bridal makeup-க்கு ரூ.10,000-க்கும் மேல் வருமானம் கிடைக்கிறதாம்.
ஜோலார்பேட்டை அருகேயுள்ள கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் வாழ்க்கைப் பயணம், அவ்வளவு எளிதானதல்ல. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாய் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு கிடைத்த ரூ.1,500 பென்ஷனை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். அந்த வறுமையின் வலி, “எப்படியாவது நாமும் சொந்தக் காலில் நிற்க வேண்டும்” என்ற எண்ணத்தை ஐஸ்வர்யாவுக்குள் விதைத்தது.

12-ம் வகுப்பு முடித்ததும் திருமணம். திருமணத்துக்குப் பிறகு படிப்பையும் வேலையையும் தொடர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், குடும்பச் சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என ஆண்டுகள் நகர்ந்தன. திருமணமான 17 ஆண்டுகளில் சுமார் 12 ஆண்டுகள் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா.
ஆனால், ‘வீட்டிலேயே இருக்க வேண்டும்’ என்ற வாழ்க்கையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் தையல் கற்றுக்கொண்டார். அதில் கிடைத்த வருமானத்தில் நகை வாங்கினார். பின்னர் டைப்பிங் கற்றார். இப்படிப் பல முயற்சிகளுக்குப் பிறகு, அழகு கலை மீது இருந்த ஆர்வம் அவரை பியூட்டி துறைக்குள் அழைத்துச் சென்றது.

அந்த முடிவுக்கும் எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. “இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருமா? வெளியே போக வேண்டியிருக்கும்... இரவு நேரத்திலும் bridal work இருக்கும்” என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். சிலருக்கு இந்தத் தொழிலைப் பற்றியும், makeup artist-களைப் பற்றியும் தவறான பார்வையும் இருந்தது.
ஆனால், அந்தப் பேச்சுகளை எல்லாம் கடந்து ஐஸ்வர்யா முன்னேறினார். “நம்ம கையில் ஒரு ரூபாய் இருந்தாலும் அது நம்ம உழைப்பில் கிடைத்ததாக இருக்கணும். என்னுடைய கணவருக்கு உறுதுணையாக அவருக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். அதற்கு நாமும் சம்பாதித்து சுயமாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது." என்கிறார் ஐஸ்வர்யா.
இதற்காக முறையாக பியூட்டிஷியன் கோர்ஸ் கற்றுக்கொண்டு, சுமார் ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில், இன்று அவருக்கான வருமானத்தை மட்டுமல்ல... இன்னொரு பெண்ணுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. தன்னுடைய கடையில் தற்போது மற்றொரு பெண்ணுக்கு வேலை கொடுத்து, அவரையும் தொழிலில் வளர்த்துவருகிறார்.

அவருடைய உழைப்பின் பலன் பார்லரின் வருமானத்தில் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையிலும் தெரிகிறது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டியுள்ள புதிய வீட்டின் அடித்தளப் பணிக்காக, தன்னுடைய பியூட்டி பார்லர் மூலம் சேமித்த ரூ.5 லட்சத்தைச் செலவிட்டிருக்கிறார்.
“நான் பியூட்டிஷியனா சம்பாதிச்சு சேமிச்ச பணத்துல எங்க வீட்டோட basement-க்கு ரூ.5 லட்சம் செலவு பண்ணியிருக்கேன். அந்தப் பணம் என் உழைப்புல கிடைச்சது என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்கிறார் ஐஸ்வர்யா.
குழந்தைகளின் கல்விச் செலவிலும் அவருடைய வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. “ஒரு semester-க்கு கணவர் fees கட்டுவார். அடுத்த semester-க்கான fees-ஐ நான் என்னுடைய வருமானத்தில் இருந்து கட்டுவேன். அந்த அளவுக்கு இந்தத் தொழில் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என்கிறார்.
இதோடு நிற்காமல், தன்னுடைய அனுபவத்தையும் உழைப்பையும் நம்பி தற்போது புதிதாக Vip beauty parlour என்ற மற்றொரு பியூட்டி பார்லரையும் தொடங்கியிருக்கிறார்.

“ஒண்ணுமே பண்ண முடியலையேன்னு வீட்டுக்குள்ள இருந்த காலம் போய், இன்னைக்கு என்னால இன்னொரு பெண்ணுக்கும் வேலை கொடுக்க முடியுது. என்னுடைய வீட்டுக்கும், பிள்ளைகளுடைய படிப்புக்கும் என்னால பங்களிக்க முடியுது. இதுதான் நான் இந்தத் தொழில்ல சாதிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா.
ஒருகாலத்தில் மாதம் ரூ.3,000 கிடைத்தால் போதும் என்று நினைத்தவர்... இன்று ஒரு நாளில் அதே ரூ.3,000 வரை சம்பாதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.
வருமானம் உயர்ந்தது மட்டுமல்ல... தன் உழைப்பால் வீட்டைக் கட்டி, பிள்ளைகளின் படிப்பைத் தாங்கி, இன்னொரு பெண்ணுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு தன்னுடைய வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறார் ஐஸ்வர்யா.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)