சிவகங்கை, சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் : வரம் தரும் வடுக பைரவர்; திருமணம் கைகூடும்!

Mar 7, 2026 - 09:02
 0
சிவகங்கை, சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் : வரம் தரும் வடுக பைரவர்; திருமணம் கைகூடும்!

சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழகம் முழுமையும் அமைந்துள்ளன. பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்த ஆலயங்களில் கோயில்கொண்டு அருளும் மூர்த்திகளை தரிசனம் செய்தாலே நமக்குப் பெரும் புண்ணியம் வாய்க்கும். அப்படி ஒரு கோயில்தான் சிவங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சுயம்பிரகாசேசுவரர். சுயம்புவாகத் தோன்றி ஒளிவீசும் ஈசன் என்பது இவர் திருநாமத்தின் பொருள். இங்கே, அம்பிகை தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமத்துடன் கோயில்கொண்டிருக்கிறார்.

முற்காலத்தில் இந்த இடம், 'நிருபசேகர சதுர்வேதி மங்கலம்' என்றும், 'சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்பட்டது. தமிழகத்தின் வம்ச வரலாற்றிலும் சிவபுரிப்பட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சங்க கால மன்னர்களில் ஒருவராகத் திகழ்ந்த பாரியின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் திகழ்ந்த ஊர் இந்த சிவபுரிப்பட்டி என்கிறார்கள் ஊர்க்கார்கள். இந்த ஊர் ஈசனின் வள்ளல் தன்மையே மன்னர் பாரிக்கும் உண்டானது என்பது அவர்கள் கருத்து.

விநாயகர்

தற்போது இங்கு உள்ள கோயில் 12 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இது குறித்த தகவல் கருவறைத் தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தக்கோயில் கி.பி 1112-ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. அந்தக் காலத்தில் சோழர்கள் காலத்தில் இங்கே பல சைவ மடங்கள் நிறுவப்பட்டு தர்மம் செய்யப்பட்டதாகவும் பிற்காலத்தில அவை காலவெள்ளத்தில் அழிந்துவிட்டன என்றும் சொல்கிறார்கள். இடைக்கால பாண்டியர்களின் காலத்தில் இந்த ஊர் மீண்டும் பல மேம்பாடுகளைக் கண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பண்டைய காலத்தில் முக்கிய துறைமுகங்களாகத் திகழ்ந்த தொண்டியையும் முசுறியையும் இணைக்கும் பாதையில் அமைந்த தலம் இது. அந்தக் காலத்தில் இவ்வழியே சென்ற வணிகர்களுக்கு இளைப்பாறும் இடமாகவும் விளங்கியதாம் இந்த ஆலயத்தைச் சேர்ந்த பகுதி. எனவே, சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இந்தக் கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர். இந்தத் தகவலை 17-ம் நூற்றாண்டு வரையிலான - வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் தென்புறமும், அம்பாள் வடபுறமும் எழுந்தருளியிருக்கின்றனர். ஈசன் சுயம்பிரகாச ஈஸ்வரர் என்பதால் இவரை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நம் மன இருள் அகலும். மெய்ஞ்ஞானம் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகை தர்மசம்வர்த்தினையை வழிபட்டால் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையும். வாழ்வில் சகல செல்வங்களும் தேடிவரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கே நந்திபகவான் சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். எனவே இங்கே இவருக்கு பிரதோஷ வழிபாடுகள் மிகவும் சிறப்புடன் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியையும் ஈசனையும் வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கின்றன என்கிறார்கள் நாடிவரும் பக்தர்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வன்னி மரம். இந்த மரத்தை தரிசனம் செய்து வணங்கினால் சனி பகவனால் உண்டான தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு... சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கை இருவரின் சந்நிதியும் அமைந்துள்ளது. தோஷங்கள், தடைகள், பொருளாதாரச் சூழல் காரணமாக வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வருந்தும் அன்பர்கள், இங்குள்ள சிவ துர்கையை மனமுருகி வழிபடு வது சிறப்பு. இதனால் தோஷங்கள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

மேலும் இந்தக் கோயிலில், விநாயகர், காலபைரவர், சண்டிகேஸ்வரி, வடுகபைரவர், யோக நரசிம்மர், சரபேஸ்வரர், சப்த கன்னியர், நாகர் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். இவற்றுள் வடுக பைரவர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளில் பக்தர்கள் மனமுருக வழிபடுகிறார்கள். இங்கே பைரவரை வழிபட்டால் மனபயம் நீங்குவதோடு நோய்கள் விலகி ஆரோக்கியம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கை.

சிவகங்கை சமஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள இந்தக் கோயில், தென் மாவட்ட மக்கள் சிறப்பித்து வழிபடும் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய நாள்களில் இங்கு வந்து, தீபங்கள் ஏற்றிவைத்து, ஈசன் சுயம்பிரகாசரையும் தர்ம சம்வர்த்தினி அம்பாளையும் வழிபட்டால், திருமணத் தடை, கடன், சொத்துச் சிக்கல் முதலான சகல பிரச்னைகளும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0