சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் : திருமண வரம் தருவாள் தபசு காமாட்சி!

Apr 25, 2026 - 09:01
 0
சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் : திருமண வரம் தருவாள் தபசு காமாட்சி!

சென்னையில் கோயில்கொண்டிருக்கும் அம்மன் தலங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலுக்கும் முக்கியத்துவம் உண்டு. அவற்றில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் மிகவும் பழைமையானது.

அன்னை காமாட்சி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த தலம் இது. இதன் பின்னணியில் சொல்லப்படும் புராணத் தகவல் சுவாரஸ்யமானது. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். ஈசனின் கண்கள் என்பன சூரியன், சந்திரன் அல்லவா... அப்படி உலகுக்கு ஒளிதரும் இரண்டையும்மூடினால் என்ன ஆகும்... உலகமே இருண்டது. கணநேரம்தான் உயிர்கள் எல்லாம் திகைத்துத் தவித்தன. இதனால் கோபமடைந்த ஈசன், பார்வதி தேவியை பூலோகத்தில் பிறந்து கடும் தவமியற்றிப் பின் தன்னை வந்து அடையுமாறு கட்டளையிட்டார்.

அன்னையும் பூலோகம் வந்து தவமியற்றினாள். அப்படி அவள் மாங்காடு என்னும் இத்தலத்துக்கு வந்து நெருப்பில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள் என்கிறது தலபுராணம். ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனின் அருள் வேண்டி கடுந்தவமியற்றினாள் அன்னை. இதனால் அம்பாள் இத்தலத்தில் ‘தபசு காமாட்சி’ என்று அழைக்கப்படுகிறாள். அன்னையின் இந்தக் கடுந்தவத்தைக் கண்ட ஈசன் மனம் மகிழ்ந்தார்.

அன்னையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்துக்குச் செல்லும்படியும், தான் அங்கு வந்து மணம்புரிந்து கொள்வதாகவும் கூறினார். ஈசனின் சொற்படி அன்னை காஞ்சி மாநகருக்குச் சென்று அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். காஞ்சியில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான்.

ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவகிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.

மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தாலே மனதில் வைராக்கியம் ஏற்படும். இத்தலத்தில்தான் சுக்கிரன் தன் இழந்த கண் பார்வையைப் பெற ஈசனை வழிபாடு செய்தார். அதன் பலனாகத் தன் கண் பார்வையையும் பெற்றார். எனவே கண் பார்வையில் பிரச்னை உள்ளவர்கள் இத்தலம் வந்தால் விரைவில் சுகம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

மேலும் சுக்கிரனுக்கு அருளிய தலம் இது என்பதால் சுக்கிர தோஷம் உடையவர்கள், சுக்கிரனின் அருள் வேண்டுபவர்கள் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்ய சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆதியில் இத்தலத்தில் அன்னை உக்கிரமாக இருந்தாள் எனவும் ஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தைக் குறைக்க, ஶ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்ய அன்னை மனம் குளிர்ந்து வரம் தரும் வடிவினளாய் ஆனாள் என்றும் சொல்கிறார்கள்.

ஶ்ரீகாமாட்சி அம்மன்

சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறுவாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.

இங்குள்ள அம்பாள் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகின்றார். சப்தக்கன்னிகள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மாங்காடு காமாட்சியை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0