"ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் சசிகலா" - தளவாய் சுந்தரம் பேச்சுக்கு போனில் மிரட்டலா? பின்னணி என்ன?

Mar 2, 2026 - 08:31
 0
"ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் சசிகலா" - தளவாய் சுந்தரம் பேச்சுக்கு போனில் மிரட்டலா? பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள இரவிப்புதூரில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசினார்.

அவர் பேசுகையில், "புரட்சித்தலைவி அம்மா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, அந்த அம்மாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு அந்த அம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள்.

ஆனால் அந்த அம்மாவுக்குச் செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது" எனப் பேசியிருந்தார் தளவாய் சுந்தரம்.

தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ
தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ

தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்திடம் சசிகலா ஆதரவாளர் ஒருவர் போனில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சமுக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த ஆடியோவில் பேசும் நபர், "தமிழ்நாட்டில் சின்னம்மாவைப் பற்றி யார் பேசினாலும் நான் கேட்பேன். அண்ணன் என நினைத்துதான் நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அந்த வார்த்தையைப் பேசப் போய்தான் நான் கேட்கிறேன். இனிமேல் நீ சின்னம்மாவைப் பற்றியோ, அந்தக் குடும்பத்தைப் பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன்.

சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்பு தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே.

நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க" என மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசியவர் ஆவேசமானார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்
அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்

எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று கூறப்படுகிறது.

அந்தப் பதிலில், "நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை.

நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன்.

இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க" என முடித்தார்.

எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் போனில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது.

அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், 'அது பற்றி தெரியவில்லை' எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0