தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

Sep 23, 2026 - 11:00
0
தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இருவருடன் இணைந்து ஒரு மதச் சடங்கில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்.

இதற்கு அரவிந்த் எதிர்ப்பு தெரிவித்ததால் அரவிந்த் மற்றும் அவரது மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து, முதலில் தனது மனைவியையும், அதைத் தொடர்ந்து இரண்டு பூசாரிகளையும் சுட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு அறையில் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்து விரைந்து வந்தனர். அவர்கள் அறையில் பூட்டிக்கொண்டு இருந்த அரவிந்தை வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அரவிந்த் வீட்டிலிருந்து வெளியே வர மறுத்து, காலை வரை காத்திருக்குமாறு வலியுறுத்தினார்.

போலீஸார் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால், அரவிந்த் வீட்டிற்குள்ளிருந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது.

மனைவியுடன் அரவிந்த்
மனைவியுடன் அரவிந்த்

இதனால், வேறு வழியின்றி போலீஸார் வீட்டிற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரி நவீன் அரோரா கூறுகையில், ''ஏழு மணி நேர முற்றுகைக்குப் பிறகும், குற்றம் சாட்டப்பட்டவர் வெளியே வர மறுத்து, காலை வரை காத்திருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். இறுதியாக, அவர் ( அரவிந்த்) உள்ளிருந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியபோது, ​​வேறு வழியின்றி போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாங்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினோம். போலீஸார் உள்ளே நுழைந்தபோது, ​​அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், பதிலுக்குச் சுட வேண்டிய சூழல் உருவானது," என்றும் அவர் தெரிவித்தார்.

அரவிந்த் சுட்டதில் அவரது ஒரு மகன் காயம் அடைந்தார். இதே போன்று போலீஸார் சுட்டதில் அரவிந்த் காயம் அடைந்தார்.

இரண்டு பேரையும் போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அரவிந்த் மற்றும் அவரது மகன் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துப் போனார்கள்.

தீயச் சக்தியை விரட்ட மத சடங்கு

கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அரவிந்த் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதும் தெரியவந்துள்ளது. அவர் குடும்பத்தினரைத் தாக்குவது மற்றும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது குறித்து அவரது தாயாரும் மனைவியும் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளனர். இச்சூழ்நிலையால் மனவேதனை அடைந்த அவர்கள், ஒரு மதச் சடங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் தீய சக்தியின் பிடியில் இருப்பதாகச் சந்தேகப்பட்ட அவர்கள், அதை அகற்றும் நம்பிக்கையிலேயே அந்தச் சடங்கை நடத்தினர். ஆனால் இதற்கு அரவிந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வெளியில் இருந்து வந்ததும் இது தொடர்பாக தனது மனைவியுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதத்தின்போது மத சடங்கில் ஈடுபட்டிருந்த இரண்டு பூசாரிகளையும் அரவிந்த் அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து அரவிந்த் மனைவி அதனைத் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மூன்று பேரையும் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

இந்தப் பரபரப்பு சம்பவம் 7 மணி நேரமாக நீடித்தது. இறுதியில் போலீஸார் அரவிந்த் இருந்த அறைக்குள் நுழைந்த பிறகே இதற்கு முடிவு எட்டப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User