RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

May 27, 2026 - 13:01
0
RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் கலந்துகொண்டார். அன்றைய போட்டியில் ஆடும் லெவனில் கூட இல்லாத அவர் செய்தியாளர் சந்திப்பில் அணி சார்பாக கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பிலிப்ஸ் காட்டிய கோபம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RCB vs GT
RCB vs GT

இது ஒரு மோசமான கேள்வி!

``ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 254 ரன்கள் குவித்தபோதே, குஜராத் அணி மனதளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதா?" என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த பிலிப்ஸ், உடனடியாக காட்டமான பதிலைக் கொடுத்தார்.

"அது ஒரு முட்டாள்தனமான கேள்வி. உண்மையிலேயே மிக மிக முட்டாள்தனமான கேள்வி. 'சரி, இந்தப் போட்டியை நாம் கைவிட்டுவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு எந்த வீரரும் களத்திற்குள் செல்வதில்லை. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இது ஒரு மிக மோசமான கேள்வி. நாங்கள் களத்திற்குச் சென்று எங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினோம். துரதிர்ஷ்டவசமாக, 250 ரன்களைத் துரத்தும்போது எல்லாம் சரியாக அமைய வேண்டும். ஆனால் எங்களுக்கு அப்படி அமையவில்லை," என்று சீறினார்.

ஸ்கோர்போர்டின் அழுத்தம்!

இந்தப் போட்டியில் குஜராத் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததுதான் இந்த சரிவுக்கு முக்கியக் காரணம். இமாலய இலக்கின் அழுத்தம் குறித்துப் பேசிய பிலிப்ஸ், "250 ரன்களை சேஸ் செய்யும்போது மிகப்பெரிய ஸ்கோர்போர்டு அழுத்தம் இருக்கும். இதுவரை சில அணிகளே இதைச் சாதித்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு முறை இதைச் செய்திருப்பது அபாரமானது. ஒருவேளை அவர்கள் அதை எளிதாகத் தோன்ற வைத்திருக்கலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. சில நேரங்களில் சில விஷயங்கள் அப்படித்தான் அமையும்," என்றார்.

அணியின் கூட்டுப் பொறுப்பு!

பின்னர், போட்டியில் விளையாடாத நீங்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பது வித்தியாசமாக இல்லையா? என மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்த பிலிப்ஸ், "இல்லை, அது பரவாயில்லை. நாங்கள் அனைவரும் ஒரு அணியின் அங்கம்தான். ஊடகங்களிடம் பேசுவதும் எங்கள் கூட்டுப் பொறுப்பு. சில நேரங்களில், விளையாடாத ஒருவரின் வெளிப்பார்வை அணிக்கு உதவும். குறிப்பாக, அடுத்ததாக எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டிய வீரர்கள் மனதளவில் தயாராக இது அவசியம். எங்கள் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா சொல்வது போல, 'சில் பில்' எடுத்துக்கொண்டு அவர்கள் அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும்," என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User