RBI Repo Rate 25bps உயர்வு: வங்கிக் கடன் வட்டி எவ்வளவு உயரும்? என்ன செய்ய வேண்டும்?
இன்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இதையொட்டி தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய வட்டி விகித உயர்வுக்கு முக்கிய காரணங்கள் - மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை ஆகும்.
சரி... ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன... அது ஏறினால் நாம் ஏன் கவனிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்விக்கான எளிய பதில்...

நம்முடைய தேவைகளுக்கு நாம் எப்படி வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறோமோ, அதே போல, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும்.
வாங்கிய கடனுக்கு நாம் வங்கிக்கு வட்டி கட்டுகிறோம் அல்லவா... அதேபோல, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கட்டும் வட்டியின் பெயர் ரெப்போ வட்டி.
இப்போது ரெப்போ வட்டி விகிதம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கட்டும் வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இதனால், வங்கிகள் நாம் வாங்கிய கடன்களுக்கு வட்டி விகிதத்தை ஏற்றும்.
இதனால் தான், நமக்கும் ரெப்போ வட்டி விகித ஏற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
நமக்கு என்னென்ன மாற்றங்கள் வரும்?
தனிநபர் கடன், வீட்டுக் கடன் (ஃப்ளோட்டிங் வட்டியில்), வாகனக் கடன் என எந்தக் கடன் வங்கியில் இருந்து வாங்கியிருந்தாலும், அதற்கான வட்டி விகிதம் ஏறும்.
கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி விகிதம் ஏறும்.
ஏதேனும் பாசிட்டிவ் நியூஸ் உண்டா?
ஃபிக்ஸ்ட் டெபாசிட், சேமிப்புக் கணக்குகளுக்கு வரும் வட்டி விகிதம் உயரும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, வலுவாகும் அமெரிக்க டாலர் மதிப்பு, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், இந்திய ரூபாய் மதிப்பு வலுவாகும்.இதன் காரணமாக, இறக்குமதி செலவும் சற்று குறையும்.

வட்டி விகிதம் எவ்வளவு உயரும்?
நீங்கள் வங்கியில் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், இப்போது நீங்கள் கட்டி வரும் வட்டியில் இருந்து 0.25 சதவிகித வட்டி விகித உயர்வு இனி இருக்கும்.
உதாரணத்திற்கு, வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம். இதன் வட்டி விகிதம் தற்போது 10%.
இதுவரை நீங்கள் மாதத் தவணையாக ரூ.21,247-ஐ கட்டி வந்திருப்பீர்கள்.
10.25 சதவிகித வட்டி உயர்வுக்குப் பிறகு, ரூ.21,370 (அதாவது ரூ.123 அதிகமாக) கட்ட வேண்டியதாக இருக்கும்.
ஆக, ஒருவேளை, நீங்கள் வங்கிக் கடன் வாங்கியிருந்தால், குறிப்பிட்ட வங்கிக்கு சென்று, அடுத்து உங்கள் வட்டி விகிதம் எவ்வளவு மாறும் என்று கேட்டு, அதற்கேற்ப உங்கள் நிதி திட்டமிடலைப் பிளான் செய்யுங்கள்.!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)