கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ்த்திய ராதாகிருஷ்ணன்

Jun 18, 2026 - 18:00
0
கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ்த்திய ராதாகிருஷ்ணன்

2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளித் தீ விபத்தின்போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்திற்குப் பிறகு புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தையும் இழந்து தவித்த ஜெனிபர் உள்ளிட்டக் குழந்தைகளுக்கு, அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், பள்ளியில் இலவச சீட் வாங்கிக் கொடுத்து உதவினார். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைந்தபோது, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் குழந்தைகளைத் தன் அருகில் உட்கார வைத்து ஆறுதலாகப் பேசிய விதம் மற்றும் அவர் செய்த மனிதநேய உதவிகள் ஜெனிபரின் மனதில் ஐ.ஏ.எஸ் கனவை ஆழமாக விதைத்தன. கனவை நோக்கி 2017-ல் தொடங்கிய இவருடைய பயணம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக் கோட்டை எட்டியிருக்கிறது.

ஜெனிபர் - ராதாகிருஷ்ணன்
ஜெனிபர் - ராதாகிருஷ்ணன்

கடந்த ஆண்டு வெளியான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று, தற்போது துணை மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்கத் தயாராகியுள்ளார். இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மின்வாரிய தலைவராகப் பதவி வகிக்கும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ஜெனிபரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``அசாத்தியமான துணிச்சலையும் மனஉறுதியையும் பிரதிபலிக்கும் ஜெனிபரை நேரில் சந்தித்து வாழ்த்தியதை ஒரு பெருமையாகக் கருதுகிறேன்.

சிறு குழந்தையாக இருந்தபோதே, 2004-ம் ஆண்டு 94 குழந்தைகளின் உயிரைப் பறித்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் கோர நாடகத்தை அவர் நேரில் கண்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே அந்தத் துயரத்தின் பாதிப்புகளை நேரில் பார்த்த எனக்கு, இன்று அவரது சகோதரருடன் அவரைச் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

ஜெனிபர் - ராதாகிருஷ்ணன்
ஜெனிபர் - ராதாகிருஷ்ணன்

ஏராளமான சவால்களுக்கு மத்தியிலும், ஜெனிபர் தனது கல்வியை விடாமுயற்சியோடும் குறிக்கோளோடும் தொடர்ந்து, TNPSC குரூப்-1 தேர்வில் Class 1 வெற்றியைப் பெற்று, தற்போது மதிப்புமிக்க 'ஊராட்சிகள் உதவி இயக்குநர்' (Assistant Director of Panchayats) பணியிடத்தைப் பெற்றுள்ளார்.

துன்பங்கள் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை என்பதற்கு அவரது கதை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும். அவர் பொதுச் சேவையில் ஒரு நிறைவான வாழ்க்கையைப் பெறவும், தனது பணியின் மூலம் சமூகத்திற்குப் பங்களித்து அனைத்து வெற்றிகளையும் குவிக்கவும் எனது வாழ்த்துகள்.

துயரத்திலிருந்து வெற்றிக்கு மீண்டெழும் திறன், நம்பிக்கை மற்றும் சேவையின் ஊக்கமளிக்கும் பயணம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User