புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!

Mar 10, 2026 - 17:02
 0
புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!

புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.  அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றி, அங்கு குடும்பத்துடன் குடியேறினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரக் கண்காணிப்பு என அந்த இடமே ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கும்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை

நேற்று நள்ளிரவு மது போதையில் கடற்கரை சாலையில் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள், ஆளுநர் மாளிகையின் அழகைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அதன் சுவரில் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் சென்று, அங்கிருந்த அறைகளை திறந்து திறந்து பார்த்திருக்கிறார்கள். அனைத்திலும் உயர்தர படுக்கைகளுடன் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல இருந்ததால், உற்சாகமான அவர்கள் ஆடைகளை கலைந்துவிட்டு அந்த படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து வெளியில் சென்றிருக்கிறார்.

இவர்கள் தூங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் ஆளுநர் மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில் எழுந்த அவர், அந்த அறைக் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை அழைத்து அவர் யார் என்று கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன போலீஸார், அந்த நபரை எழுப்பி விசாரித்திருக்கிறார்கள். ஆனால் மது போதையில் இருந்த அவரால் சரியாக பேச முடியவில்லை. இந்த கலகலப்பில் ஆளுநர் கைலாஷ்நாதனும் அங்கு வந்துவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

அதனால் அவரை அலேக்காக தூக்கிய போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போதையை `தெளிய’ வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, `நானும் என் ஃபிரண்டும்தான் நைட் அந்த இடத்தைப் பார்த்தோம். ஹோட்டல் மாதிரி இருந்ததால் உள்ளே போய் படுத்து தூங்கிட்டோம். என்னுடன் வந்த என் ஃபிரண்ட் மறுபடியும் சுவர் ஏறி குதித்து வெளியில் போயிட்டான். உண்மையாவே நாங்க தூங்கத்தான் போனோம்’ என்று கூலாக கூறியிருக்கிறார் அந்த போதை நபர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0