நோபல் பரிசு அறிவிப்பு; `குழந்தைகளுக்கு பசிக்கும்ல...'- மதிய உணவு தயாரித்துவிட்டு கொண்டாடிய விஞ்ஞானி!

Oct 06, 2026 - 15:00
0
நோபல் பரிசு அறிவிப்பு; `குழந்தைகளுக்கு பசிக்கும்ல...'- மதிய உணவு தயாரித்துவிட்டு கொண்டாடிய விஞ்ஞானி!

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், 2026-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க விஞ்ஞானி Karl Deisseroth-ன் வெற்றிக்குப் பிறகு நடந்த ஒரு சாதாரண நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் Stanford University-யில் பேராசிரியராகவும், மனநல மருத்துவம் மற்றும் உயிரி-பொறியியல் துறைகளில் பணியாற்றுபவருமான Karl Deisseroth, Peter Hegemann மற்றும் Georg Nagel ஆகியோருடன் இணைந்து 2026-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். உயிருடன் இருக்கும் மூளையில் குறிப்பிட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை ஒளியின் உதவியுடன் இயக்கவும் நிறுத்தவும் வழிவகுக்கும் ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 5-ம் தேதி அதிகாலை நோபல் குழுவிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும், சில நொடிகளுக்குப் பேச முடியாத அளவுக்கு ஆச்சர்யமும் உணர்ச்சியும் ஏற்பட்டதாக Deisseroth தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரது வீட்டில் தொடர்ந்து வாழ்த்துகள் மற்றும் ஊடக அழைப்புகள் வந்தன.

ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவிலும் அவருக்குத் தவறாமல் செய்ய வேண்டிய ஒரு வேலை இருந்தது — தனது குழந்தைகளுக்கான பள்ளி மதிய உணவைத்  தயாரிப்பது.

Stanford வெளியிட்ட தகவலின்படி, நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அதே காலையிலும் அவர் தனது வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளுக்காக மொத்தம் ஆறு சாண்ட்விச் தயாரித்துள்ளார். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குப் பிடித்த பொருள்களை வைத்து Lunch தயார் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய அறிவியல் அங்கீகாரம் கிடைத்த நாளிலும், வீட்டில் ஒரு தந்தையாக தனது வழக்கமான பொறுப்பை அவர் தொடர்ந்தது இந்தச் சம்பவத்தை தனித்துவமாக்கியுள்ளது.

மேலும், நோபல் பரிசை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, “Get back to work” என்று அவர் பதிலளித்துள்ளார். இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களும், உதவி செய்ய வேண்டிய மக்களும் நிறைய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருபுறம் மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உலகையே மாற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு; மறுபுறம் அதே நாளில் குழந்தைகளுக்கான மதிய உணவை தயாரிக்கும் ஒரு தந்தையின் வழக்கமான காலை. Karl Deisseroth-ன் Nobel வெற்றிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வு, ஒரு பெரிய சாதனையின் பின்னாலும் அன்றாட வாழ்க்கையின் எளிமையான பொறுப்புகள் தொடர்கின்றன என்பதை நினைவுபடுத்துகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User