நேபாளம்: "கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது" - மீண்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Sep 01, 2026 - 13:00
0
நேபாளம்: "கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது" - மீண்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மானசரோபர் பயணம் சென்ற 28 பேர், நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், டெல்லி வழியாக இன்று காலை கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

சிலர் தங்களது உறவினர்களை நீண்ட நேரம் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

நேபாளத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பி வந்தது குறித்து கோவை செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவனடியார் லோகநாதன் கூறுகையில், “கடந்த 18ம் தேதி நேபாளத்திற்குக் கிளம்பி சென்றோம். வெள்ளம் காரணமாக விபத்து நடந்தது குறித்து அறிந்து, மிகுந்த கவலை அடைந்தோம். அவர்கள் இறைவனிடம் சென்று விட்டார்கள். நாங்கள் இறைவன் அருளால் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் மறுபிறவி எடுத்து திரும்பி வந்துள்ளோம்” என்றார்.

நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள்
நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள்

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ரதி என்பவர் கூறுகையில், “வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட இடத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் கடந்து சென்றோம். நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதி இருக்காது என நினைக்கவில்லை. செய்தி பார்த்தபோது மனவேதனை அடைந்தோம். அந்த இடம் சேரும் சகதியமாக உள்ளது. எப்படி இருந்த கட்டிடம் இப்படி ஆகிவிட்டது?

அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது. அவ்வப்போது போன் செய்து விசாரித்தனர். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கவலைப்பட்டனர். எப்போ வருவோம் என நினைத்தனர். இந்தப் பயணம் பாதி சந்தோசம், பாதி துக்கம். சீன அரசு உதவியுடன் நேபாளம் வந்து டெல்லி வந்தோம். காட்டுப்பகுதி வழியாக நடந்து ஆபத்தான வழியில் பயணம் செய்தோம், மண் சரிவு இருந்ததால் வரும் வழியில் சிரமமாக இருந்தது” என்றார்.

நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள்
நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள்

திருப்பூரைச் சேர்ந்த தீபா லட்சுமி கூறுகையில், “இந்தப் பேரிடர் சம்பவத்தைக் கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது. பெரு வெள்ளம் மக்களை அடித்துச் செல்லும்போது, நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என அச்சமாக உள்ளது. நாங்கள் செல்லும்போது அழகாக இருந்த இடங்கள், இப்போது வேறு மாதிரியாக உள்ளன.

நேபாளத்திலிருந்து நாங்கள் திரும்ப வர சுற்றுலா வழிகாட்டிகள், அரசு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் பயப்படாமல் இருக்க உதவினார்கள். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் பயந்துவிட்டனர். மீண்டும் பெரு வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தால் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு போன் செய்து கொண்டு இருந்தனர். எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? ஏற்பாடுகள் சரியாக உள்ளதா? என வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டே இருந்தனர்” எனத் தெரிவித்தார்.

திருப்பூர் அவினாசியைச் சேர்ந்த கீர்த்தனா கூறுகையில், “நாங்கள் இருக்கும்போது பேரிடர் ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பயந்துவிட்டோம். பேரிடர் ஏற்படும் முன்பு நாங்கள் பார்த்த காட்சிகள் மிகவும் அழகானவை, நாங்கள் அங்கு புகைப்படம் எடுத்தோம். இப்போது அந்த  இடம் இல்லை. அதனை புகைப்படமாக  எடுத்து வைத்திருக்கிறோம். அதைப் பார்க்கும் தைரியம் கூட இல்லை. வீடியோவைப் பார்க்கும் போது எங்களை வெள்ளம் அடித்து செல்வது போலவே இருந்தது” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User