நெல்லை: `வீடியோ எடுத்து அனுப்பு' - ஆண் நண்பருக்காக லேடீஸ் ஹாஸ்டலில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண்

May 27, 2026 - 13:01
0
நெல்லை: `வீடியோ எடுத்து அனுப்பு' - ஆண் நண்பருக்காக லேடீஸ் ஹாஸ்டலில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்து வருகிறார்கள். அந்த விடுதியில், சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி தனது குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளார்.

சமீபகாலமாக அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது. வேலைக்கு எங்கும் செல்லாமல் விடுதியில் தங்கியிருந்த அவர், இரவு நேரங்களில் அத்துமீறி அடுத்தவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைவது, பெண்கள் குளிக்கும் போது, குளியலறைப் பக்கம் நடமாடுவதுமாக இருந்துள்ளார். எப்போதும் கையில் செல்போனுடன் இருக்கும் மகரஜோதியின் செயல்பாடுகள் அறைகளில் தங்கியிருக்கும் பெண்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகரஜோதி

மகரஜோதியின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல பெண்கள், விடுதிக் காப்பாளரிடம் புகார் செய்துள்ளனர். அதனால் அவரும் ரகசியமாகக் கண்காணித்துள்ளார். அப்போது, விடுதியின் மற்ற அறைகளில் தங்கியிருந்த பெண்களைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அங்கு தங்கியிருந்த பெண்கள் தூங்கும்போது ஆடைகள் கலைந்து இருப்பதை ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இருப்பது தெரியவந்தது.

ஆபாசப் புகைப்படம் மற்றும் வீடியோகளை கோவையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு அவர் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து விடுதியின் காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தியதில், மகரஜோதி சக பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து வெளியாளுக்கு அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகரஜோதி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவையைச் சேர்ந்த கண்ணன் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

கண்ணன்

பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த மகரஜோதியைக் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், விடுதிப் பெண்களைப் பல்வேறு கோணங்களில் ஆபாசமாகப் படம் பிடித்து அனுப்புமாறு அவரது முறையற்ற ஆண் நண்பரான கண்ணன் வற்புறுத்தியதாகவும், அவரை சந்தோஷப்படுத்தவே இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்டதாகவும் மகரஜோதி வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து முக்கியக் குற்றவாளியான கண்ணனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தான் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த கண்ணன் தலைமறைவானார். கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பாரதியார்புரத்தில் வசித்து வந்த அவர் தலைமறைவான நிலையில், நெல்லை மாநகரப் போலீள் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கினார். தனிப்படை போலீஸார் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த கண்ணனை கண்டுபிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை நெல்லைக்கு அழைத்து வந்த போலீஸார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User