கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' - 'Project Zero' திட்டம்

May 27, 2026 - 13:01
0
கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' - 'Project Zero' திட்டம்

கேரள மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க 'புராஜெக்ட் ஜீரோ'  திட்டத்தை உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார்.

ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். இதில் விஜிலென்ஸ் டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம், உள்த்துறை அமைச்சரின் காவல்துறை ஆலோசகர் ஏ.ஹேமச்சந்திரன், விஜிலென்ஸ் ஐ.ஜி. தாம்சன் ஜோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களின் ஒத்துழைப்புடன் ஊழலை முழுமையாக ஒழிப்பதே லஞ்ச ஒழிப்புத்துறை அமைப்பின் முயற்சியாகும். ஊழல் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சேவைகளுக்கு பணம் கொடுப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். ஊழல்வாதிகள் குறித்த தகவல்களைத் தைரியமாக வழங்க வேண்டும். அரசு ​துறைகளிலும் கூட்டுறவுத் துறையிலும் விஜிலென்ஸ் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும்.

அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி விரைவாகப் பெறுவதற்காக துறைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஊழல்வாதிகளான அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா
செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

பெரும்பாலான ஊழல்களை மக்கள் வெளியில் சொல்வதில்லை. ​ஊழல் பரிவர்த்தனைகளை வீடியோவாகப் பதிவு செய்து விஜிலென்ஸிடம் ஒப்படைப்பவர்களுக்கு 5,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து அதற்கான இணையப் பக்கத்தில் (போர்ட்டலில்) சமர்ப்பிக்கலாம்.

ஆதாரங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் வெகுமதி வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விசாரணை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்படும். ஊழலை வெளிக்கொண்டு வரப் பாடுபடும் ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். ​

பொதுமக்கள் ஊழல்வாதிகள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக மொபைல் செயலியும், இணையப் பக்கமும் தயார் செய்யப்படும். 24 மணி நேரமும் டிஜிட்டல் முறையில் புகாரளிக்கலாம். ​

புகார்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்கும், ஊழல்வாதிகளின் முகங்களை அடையாளம் காண்பதற்கும், ஊழல் ஆவணங்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை தொடங்கி வைத்தார் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

சைபர் விஜிலென்ஸ் பிரிவும், கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான புகாரளிக்கும் முறையும், ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பும் உருவாக்கப்படும். ​சமூக விஜிலென்ஸ் தன்னார்வலர்களும் தயார் செய்யப்படுவார்கள்.

சமூக ஊடகப் பிரசாரங்களும், கேம்பஸ்களில் ஊழல் எதிர்ப்பு கிளப்களும் அமைக்கப்படும். கடந்த​ ​ஐந்து ஆண்டுகளில் ஊழல் வழக்குகளில் விஜிலென்ஸ் அமைப்பிடம் 1,564 அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக 734 வழக்குகள் உள்ளன.

இவர்களிடமிருந்து கூடுதல் அபராதம், ராயல்டி, வரி போன்ற பிரிவுகளில் 13,72,06,764 ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 57 வழக்குகளில் 62 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதில் வருவாய்த் துறையில்தான் மிக அதிகம். தற்போது ஊழல்வாதிகளான சுமார் எழுநூறு அதிகாரிகள் விஜிலென்ஸ் கண்காணிப்பில் உள்ளனர்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User