ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

Jul 31, 2026 - 13:02
0
ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கை, ஷெங்கன் (Schengen) ஒப்பந்தம் மற்றும் உறுப்பு நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் மீண்டும் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.

ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டா (Ceuta) எல்லையில் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் கடல் வழியாக நீந்தியும், அலைத்தடுப்புச் சுங்ககளைக் கடந்தும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைந்தனர். ஒரே நாளில் சுமார் 2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய ஒரு வாரத்திலேயே 1,500-க்கும் மேற்பட்டோர் சியூட்டாவை அடைந்திருந்த நிலையில், இந்த புதிய வருகை அங்குள்ள நிர்வாகத்தையே திணறடித்தது.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

இந்தப் பெருமளவிலான வருகையால் தங்குமிடங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. குறிப்பாக, துணையற்ற சிறார்களுக்கான (Unaccompanied Minors) மையங்கள் 2,400 சதவீதம் வரை நிரம்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் சாலைகளிலேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. இந்தக் கடல் வழிப் பயணத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் களமும் உச் சநீதிமன்றத் தீர்ப்பும்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சியூட்டா தன்னாட்சி அரசின் தலைவர் ஜுவான் ஜீசஸ் விவாஸ் (Juan Jesús Vivas), தேசிய பாதுகாப்பு அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்றும், ராணுவத்தை இறக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார். ஆனால், குடியேற்ற நெருக்கடிக்காக அவசரநிலை அறிவிக்கும் சட்டவிதி இல்லை என்று தெரிவித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இருப்பினும், ராணுவ வீரர்களும் கார்டியா சிவில் (Guardia Civil) பாதுகாப்புப் படையினரும் எல்லைப் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர்.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

இந்த நெருக்கடிக்குப் பின்னால், சமீபத்தில் வெளியான ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சியூட்டா அல்லது மெலில்லாவை (Melilla) கடல் வழியாக அடைய முயலும் குடியேற்றவாசிகளை, முந்தைய நிலை போல் உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று அந்தத் தீர்ப்பு கூறியது. இதனால், ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்தவர்களை வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் கீழ் பரிசீலிக்க வேண்டிய சூழல் உருவானது. இந்தச் சட்ட மாற்றத்தை மனிதக் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி, பெருமளவில் கடல் வழிப் பயணங்களை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

இதற்கிடையில், சுமார் 5 லட்சம் ஆவணமற்ற குடியேற்றவாசிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் திட்டத்தை ஸ்பெயின் அரசு முன்னெடுத்து வருவதும் அரசியல் விவாதத்தை அதிகரித்துள்ளது. இந்தக் கொள்கை மேலும் பலரை ஐரோப்பாவை நோக்கி வர ஊக்குவிக்கிறது என்று பிற ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஐரோப்பிய அரங்கில் வெடித்த மோதல்

சியூட்டா எல்லையில் நடந்த சம்பவம் விரைவில் ஐரோப்பிய அரசியல் விவாதமாக மாறியது. இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனியோ தஜானி (Antonio Tajani), ஸ்பெயினை தற்காலிகமாக 'ஷெங்கன்' (Schengen) ஒப்பந்தத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் (Giorgia Meloni) இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஸ்பெயின் அரசு, இத்தாலி தூதரை அழைத்து அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்ததுடன், அந்தக் கருத்துகளை ஏற்க முடியாதவை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

இந்தச் சூழலை ஐரோப்பிய ஆணையமும் (European Commission) உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையெனில் 'ப்ரான்டெக்ஸ்' (Frontex) மூலம் உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மொராக்கோவுடன் இணைந்து சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தவர்களை விரைவாகத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் ஸ்பெயின் தீவிரப்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

பின்னணியும் எதிர்காலச் சவால்களும்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சியூட்டா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நில வழி எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும், 2021-ஆம் ஆண்டு 8,000-க்கும் மேற்பட்டோர் குறுகிய காலத்தில் எல்லையைக் கடந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி, குடியேற்ற மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஷெங்கன் ஒப்பந்தத்தின் செயல்திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம், ஒரு சாதாரண எல்லை மீறல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த குடியேற்றக் கொள்கைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது,.

ராணுவத்தைக் கொண்டு எல்லையை மூடினாலும், பாதுகாப்பு வேலிகளை உயர்த்தினாலும், ஐரோப்பாவின் வாசலில் காத்துக்கிடக்கும் இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு என்ன? இது ஸ்பெயினின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவும் சிந்திக்க வேண்டிய ஒரு சிக்கலான கேள்வி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User