விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப் போகிறது தவெக அரசு?
காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
கேள்விக்குறியாகும் விஜய்யின் கர்நாடக பயணம்
கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் - விஜய் சந்திப்புக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், மேகதாது விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் தீவிர விமர்சனங்களை எழுப்பி வருவதால், முதல்வர் விஜய்யின் கர்நாடகப் பயணம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு!
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட சட்ட அமைப்புகளின்படியே தமிழ்நாடும் - கர்நாடகாவும் நடந்துகொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடகா முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினால் இந்தப் பிரச்னையில் எந்த தீர்வும் கிடைக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், டெல்டா விவசாயிகள் சங்கங்களும் மிகக் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதியின் போராட்டம்
குறிப்பாக தவெக-வின் ஆதரவு கட்சிகளான சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் விஜய்யின் கர்நாடகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
முதல்வர் கர்நாடகா செல்லும் அன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் போராட்டத்தில் இறங்கவிருக்கிறார். முதல்வர் இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டுமென ஒருமித்தக் கருத்து நிலவுகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம்
'ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்க கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தொடரில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் இத்தனை தீவிரமாக மேகதாது குறித்துப் பேசியதால் முதல்வரே அந்த விவகாரத்தில் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் மேகதாது விவகாரத்தில் இந்த ஆட்சியில் ஏதாவது முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிட வேண்டுமென முதல்வர் விரும்பினார். அதனால்தான் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரானார்.
முதல்வர் விஜய்க்கு நெருக்கடி
ஆனால், மேகதாது விவகாரம் பேச்சுவார்த்தை என்கிற கட்டத்தையெல்லாம் எப்போதோ கடந்துவிட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டரீதியாகத்தான் இதில் செயல்பட்டாக வேண்டும். ஆனால், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றவுடன் நிலைமையை எடுத்துக் கூறி அந்த ஐடியாவை தவிர்த்திருக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருந்துவிட்டனர்.
அதனால் முதல்வர் விஜய்க்குதான் இப்போது நெருக்கடி. அவர் கர்நாடகாவுக்குச் செல்ல யாருமே ஆதரவளிக்கவில்லை. டெல்டா விவசாயிகளே முதல்வருக்கு எதிராகத்தான் நிற்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் இதை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிகாரிகளின் கள்ள மெளனம் முதல்வரை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது" என்கின்றனர் இந்த விவகாரத்தை கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள்.

கர்நாடகாவில் பதற்றமான சூழல்
இரு மாநிலங்களிலும் மேகதாது விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முதல்வரின் கர்நாடகா பயணத்தை ரத்து செய்யும் யோசனையில் இருக்கிறது முதல்வர் அலுவலகம்.
இதன் காரணமாகவே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ``காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்வது தொடர்பான இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை" எனப் பின் வாங்கியிருக்கிறார்.
கர்நாடக அரசியல் அமைப்புகளும், விவசாய சங்கங்களும் மேகதாது அணையை கர்நாடகா அரசு உடனடியாக கட்ட வேண்டும் என்றும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்றும் போராட்டங்களை முடுக்கிவிட்டு, சிவக்குமாருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
`விஜய் கர்நாடாகவிற்கு வர வேண்டாம்!'
இந்தச் சூழலில்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை வேறொரு தேதியில் கர்நாடகா வருமாறு கேட்டுக்கொள்கிறேன். சூழல் சுமுகமாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் மனவேதனை அளிக்கக் கூடாது. ஒரு விருந்தினர் வரும்போது, அவரை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும்.
ஆகஸ்ட் 3-ம் தேதி விஜய் வருவதற்கான ஏற்பாடுகளை அரசு ஏற்கெனவே செய்திருந்தாலும், வருகையை ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தவறான பாதை
நீண்ட கால பிரச்னைக்கு 'எம்.ஜி.ஆர்' ஸ்டைலில் கர்நாடகா போய் பேச்சுவார்த்தை நடத்தலாம் என விஜய் திட்டமிட்டு வைத்திருந்தார். ஆனால், மேகதாது விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் காலத்துக்குப் பிறகு நிறைய நடந்துவிட்டது என்பதை விஜய் தரப்பு யோசிக்கவில்லை. தவறான பாதையை தேர்ந்தெடுத்ததால் அரசியல் சதுரங்கத்தில் அத்தனை காய்களும் விஜய்க்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)