`தமிழ்நாடு கேரளத்தை இணைக்கும் மெட்டு சாலை; அரசிடம் வலியுறுத்தப்படும்!' - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

Jun 01, 2026 - 19:31
0
`தமிழ்நாடு கேரளத்தை இணைக்கும் மெட்டு சாலை; அரசிடம் வலியுறுத்தப்படும்!' -  ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் கேரளத்தை இணைக்கும் வண்டிப் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் தற்போது வரை கனவு திட்டமாகவே உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 1981 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வரை சாலை அமைக்கப்பட்டது. பின்னர் வனப்பகுதியில் செல்லும் 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் சாலை அமைக்க முடியாது என வனத்துறை மறுப்பு தெரிவித்தது. கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குறைந்த தொலைவில் கேரளத்துக்குச் செல்லும் வகையில் உள்ள இந்த சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை திட்டம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, இத்திட்டம் குறித்து கடந்த சனிக்கிழமை அன்று தீவிர ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அப்போது தேவாரம் வனத்துறையினரிடம் இந்தச் சாலை அமைப்பதில் உள்ள முக்கிய பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சாக்கலூத்து மெட்டில் உள்ள வண்டிப்பாதை வழியாக கேரளத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``தமிழகம் கேரளத்தை இணைக்கும் இந்தச் சாலை திட்டம் நிறைவேறினால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என இரு மாநில மக்களும் பயன்பெறுவர். மேலும் கேரள பகுதியில் வாழும் தமிழர்களும் கேரள மாநிலத்தவரும் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு தேனி மருத்துவமனைக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தை குறைக்கவும் சிறந்த மருத்துவம் விரைவில் கிடைக்கவும் இந்தச் சாலை பெருந்துணையாக அமையும். எனவே இந்த சாலை அமைக்க தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும்" என்றார்.

மேலும் இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை பகுதியைச் சுற்றி உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்தச் சாலை திட்டம் பற்றி விவாதித்ததோடு முல்லைப் பெரியாறு பிரச்னைகளை சரி செய்யும் நடவடிக்கைகளை பற்றியும் விவாதித்தார். இரு மாநில மக்களும் சகோதரத்துவ உறவு முறையை பேண வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User