மேகதாது விவகாரம்: ` ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன்.!' - உதயநிதி ஸ்டாலின் உரை
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நீண்ட நாள்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ``தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதில் திமுக என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. காவேரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. காவேரி நடுவர்மன்ற இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்புகள், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு, காவேரி மேலாண்மை ஆணையம் என அனைத்திற்கும் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே முழு காரணமாகும்.
ஒரு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இந்த உரிமையை நாம் பெற்றோம். ஆனால், அதனைப் பறிக்கும் நோக்கில் கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட முயல்கிறது. கர்நாடகாவில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது கூட, அதைப் பற்றிக் கவலைப்படாமல் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். எனவே, முதலமைச்சர் தற்போது கொண்டு வந்திருக்கும் இத்தீர்மானத்தை தி.மு.க சார்பில் மனதார வரவேற்கிறோம்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனே, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் மாதமே பிரதமருக்கும், ஜூலை மாதத்தில் ஒன்றிய ஜலசக்தி துறை அமைச்சருக்கும் கடிதங்களை எழுதினார்.

தொடர்ந்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2022-23 நிதியாண்டில் கர்நாடக அரசு அணைக்காக ரூ.1000 கோடி ஒதுக்கியபோது, இதே அவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, "தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்" என அப்போதைய முதலமைச்சர் பேசினார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்ட அறிக்கை குறித்த அஜெண்டாவை நீக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டதுடன், அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சித் குழுவினர் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இத்தகைய தொடர் எதிர்ப்புகளின் காரணமாகவே, மேகதாது திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அதன் 'டேர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ்' அனுமதியை இரு மாநிலங்களுக்கு இடையே சுமுக தீர்வு ஏற்படும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய நீர்வள ஆணையம் (CWC) கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று கர்நாடக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதையும் வழங்கவில்லை. மேலும், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் ஆட்சேபனைகளை கர்நாடகம் பரிசீலிக்க வேண்டும்.

மத்திய மின்வாரிய ஆணையம் மற்றும் உள்ளூர் மத்திய நீர்வள ஆணைய யூனிட்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு இவ்விஷயங்களை ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேச வேண்டும்.
மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக கடந்த 13.01.2025 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அப்போதைய முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல்சக்தி துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணைப் பிரச்சனை ஒரு புதிய நதிநீர் தாவா என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 4-ன் கீழ் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
எனவே, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில், "1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின்படி புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது" என்ற எனது பெயரிலான திருத்தத்தைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்க இந்த அரசு எடுக்கும் அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும்.

நடப்பு ஆண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே, அடுத்து நடக்கவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களை வலுவாக எடுத்துரைத்து, நமக்குரிய நதிநீரை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும். இறுதியாக, கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன்.
இந்தத் தீர்மானத்தைக் கடிதம் மூலமாக மட்டும் அனுப்பாமல், தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களும் ஒரு கூட்டுக்குழுவாக நேரில் சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நம்முடைய ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுக தயாராக உள்ளது என்று கூறி, இத்தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)