மணலி: எண்ணெய் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; வெடித்துச் சிதறிய பேரல்கள்.. பதறவைக்கும் காட்சிகள்!

May 25, 2026 - 23:01
0
மணலி: எண்ணெய் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; வெடித்துச் சிதறிய பேரல்கள்.. பதறவைக்கும் காட்சிகள்!

சென்னை அடுத்த மணலி, தாண்டாம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும், வானுயர எழுந்த கரும்புகை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.

மணலி பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் தொழிற்சாலையில், பழைய ஆயில்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்களில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. ஆயில் என்பதால் தீ நொடிப் பொழுதில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.

மணலி எண்ணெய் தொழிற்சாலை தீவிபத்து
மணலி எண்ணெய் தொழிற்சாலை தீவிபத்து

தீயின் வெப்பம் தாங்காமல், அங்கிருந்த ஆயில் பேரல்கள் ஒவ்வொன்றாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது.

தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ காரணமாக, மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் பகல் நேரமே இருள் சூழ்ந்தது போல் காட்சியளித்தது.

காலையில் நடைப்பயிற்சி சென்றவர்களும், பணிகளுக்குச் சென்ற பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். சிலருக்கு கண் எரிச்சல் மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், மணலி பகுதியில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிநவீன தீயணைப்பு வாகனங்களும் உதவிக்கு அழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலை ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து மணலி காவல்துறையினர் விரைந்து வந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது ஊழியர்களின் அலட்சியமா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தீவிபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User