மயிலாடுதுறை மாவட்டம் மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்: முன்வினை நீங்கும்; இளமை அழகு கூடும்!

Jun 02, 2026 - 08:32
0
மயிலாடுதுறை மாவட்டம் மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்: முன்வினை நீங்கும்; இளமை அழகு கூடும்!

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிறது புறநானூற்று. நம் முன்வினைகளாலேயே நமக்கு வாழ்வில் சுகமும் துக்கமும் உண்டாகிறது என்கின்றன ஞானநூல்கள் அப்படி முன்வினைகளால் நன்மை விளைந்தால் சந்தோஷப்படுவோம்.

அதுவே தீவினைகளால் தீமைகள் விளைந்தால் எப்படி சமாளிப்பது? அதற்கென்றே நம் முன்னோர்கள் பல்வேறு ஆலயங்களைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள். அதுவும் தேவார மூவர் பாடியிருக்கும் தேவாரத் தலங்கள் அனைத்தும் திருத்தலங்கள் அனைத்தும் நம் முன்வினையைப் போக்குபவை. அப்படி ஒரு தலம்தான் மகேந்திரப்பள்ளி.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடக் கரையில் அமைந்திருக்கும் இத்தலம் தேவார வடகரைத் தலங்களில் ஆறாவது தலமாகத் திகழ்கிறது.

மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்
மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்

இங்கே சுவாமிக்கு சோமசுந்தரர் என்பது திருநாமம். சுந்தரர் என்றால் ‘அழகர்’ என்று பொருள். அதனால் சுவாமிக்குத் திருமேனி அழகர் என்கிற அழகிய தமிழ்ப்பெயரும் உண்டு. அம்பிகைக்கு வடிவாம்பிகை என்பது திருநாமம். அன்னை அழகிய வடிவுடைய தாய். இவளைத் தரிசித்தாலே மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாமி அம்பாள் ஆகிய இருவரும் இப்படி அழகே உருவாக இருப்பதால் இங்கே வந்து வேண்டிக்கொண்டால் வேண்டும் வரம் கிடைப்பதோடு பக்தர்களின் இளமையும் அழகும் கூடும் என்கிறார்கள்.

பக்தர்கள் முகப்பொலிவு வேண்டி இத்தலத்தில் சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரம், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இத்தலம் இந்திரன் வழிபட்ட தலம். இந்திரனுக்கு மகேந்திரன் என்கிற பெயரும் உண்டு. மகேந்திரன் வழி பட்ட தலம் என்பதால் இதற்கு மகேந்திரபள்ளி என்கிற திருப்பெயர் உண்டானது.

ஒருமுறை முனிவரின் சாபத்தினால் இந்திரனுக்கு உடலெல்லாம் கண்ணானது. அந்தச் சாபம் தீர இந்திரன் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டான். அப்போது இங்கே தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வணங்கினான்.

அதன் பலனாக அவனுக்கு அவன் சாப விமோசனம் தீர்ந்தது என்கிறது தலவரலாறு. இந்திரன் மட்டுமல்ல... சந்திரன், சூரியன், பிரம்மா ஆகியோரும் இத்தலம் வந்து வழிபட்டனர். எனவே இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் முன்வினைகளால் ஏற்படும் தீய பலன்கள் தீரும். ஆனந்த வாழ்வு கிட்டும் என்கிறார்கள்.

மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்
மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்

பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் அருள்பாலிக்கிறார். விநாயகருக்கு தனிசந்நிதியில் அருள்கிறார். இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். எனவே இத்தல விநாயகரை வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

மேலும், விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.

முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஈசனை வேண்டிக்கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

பங்குனி மாதத்தில் சுவாமியின் மீது சூர்யக் கதிர்கள் வீழ்ந்து வணங்கும் காட்சி அற்புதமானது. சிவன் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி அருள்கிறார்.

மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்
மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயில்

இந்தத் தலத்தை அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள். மகேந்திரப்பள்ளிக்கு வந்து இறைவனை வழிபட்டால் இன்பம் எல்லாம் பெறலாம் என்பது வள்ளலார் வாக்கு. கோயிலுக்கு எதிரே இருக்கும் திருக்குளத்துக்கு மகேந்திரத் தீர்த்தம் என்று பெயர்.

இந்திரன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு மகேந்திரத் தீர்த்தம் என்று பெயர் உண்டாயிற்று. இந்தத் தலத்துக்கு வந்து ஒரு மண்டலகாலம் இந்தத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி வந்தால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. கோடையிலும் இந்தத் தீர்த்தம் வற்றுவதே இல்லை என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User