உத்தரகாண்டின் `கார்த்திக் சுவாமி'- ஈட்டி மலை உச்சியில் அருள்பாலிக்கும் `பால முருகன்' - புராதன கோயில்

Jun 02, 2026 - 08:32
0
உத்தரகாண்டின் `கார்த்திக் சுவாமி'- ஈட்டி மலை உச்சியில் அருள்பாலிக்கும் `பால முருகன்' - புராதன கோயில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனர். உத்தரகாண்டில் சௌகம்பா, கேதார்நாத், நீலகண்டம், திரிசூல் மற்றும் நந்தா தேவி உள்ளிட்ட முக்கிய இமயமலை சிகர கோயில்கள் இருக்கின்றன. இதில் கேதார்நாத் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். எப்போதும் பனிப்படர்ந்து இருக்கும் இந்த இடத்திற்கு வந்து செல்வது மிகவும் திரில்லிங்கான ஒன்றாக இருக்கும்.

இது போன்ற ஒரு மலை உச்சி ஒன்றில் முருகப்பெருமானுக்கும் ஆலயம் இருக்கிறது. முருகனை வடமாநிலத்தவர்கள் `கார்த்திக் சுவாமி' என்று அழைப்பதுண்டு. எனவே உத்தரகாண்டில் இருக்கும் கோயில் கார்த்திக்சு வாமி கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அங்குள்ள ருத்ரபிரயாக் என்ற இடத்தில் இருந்து கார்த்திக் சுவாமி கோயிலுக்குச் செல்வதாக இருந்தால் 40 கிலோமீட்டர் செல்லவேண்டும்.

முருகன்
முருகன்

கனக்சௌரி என்ற கிராமம் வரை வாகனத்தில் சென்றுவிட்டு அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் பனிபடர்ந்த அடர்ந்த காட்டிற்குள் இயற்கை அழகை ரசித்தபடி நடந்து அக்கோயிலுக்குச் செல்லவேண்டும்.

ஈட்டி முனையில் முருகன் கோயில்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கு ஏற்ப முருகப்பெருமான் கடல் மட்டத்தில் இருந்து 3050 மீட்டர் உயரமான மலை உச்சியில் குடிகொண்டுள்ளார். இந்த முருகன் கோயில் ஆன்மிகம் மற்றும் இயற்கையை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா மையமாக இருக்கிறது. அதோடு மலை உச்சியில் முருகன் கோயிலில் இருந்து கீழே பார்த்தால் கோயில் வடிவமைப்பு ஒரு ஈட்டி போல் தெரிகிறது, ஈட்டி கார்த்திகேயனின் ஆயுதம்.

கார்த்திக் சுவாமி கோயில் உத்தரகண்ட் மாநிலத்தின் மையத்தில் ஆன்மிகம், புராணங்கள் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. சௌகம்பா, கேதார்நாத், நீலகண்டம், திரிசூல் மற்றும் நந்தா தேவி உள்ளிட்ட முக்கிய இமயமலை சிகரங்களின் அற்புதமான காட்சிகளை வழங்கும் மலை உச்சியின் மீது இந்த கோயில் அமைந்துள்ளது.

கோயிலில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளை பார்ப்பது மிகவும் அற்புதமாக இருக்கும். இது புகைப்படக்காரர்கள் மற்றும் மலையேற்றக்காரர்களை ஆண்டு முழுவதும் ஈர்க்கிறது. இந்தக் கோயிலுக்கு வர மார்ச் மற்றும் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலநிலை இனிமையானதாகவும், மலையேற்றப் பாதையை அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பெற்றோரை பகைத்துக்கொண்டு சென்ற முருகன்

இந்த கார்த்திகேயன் கோயிலுக்கு மிகப்பெரிய புராதாண வரலாறு இருக்கிறது. முருகன் என்றாலே அனைவருக்கும் ஞானப்பழம் தான் நினைவுக்கு வரும். சிவபெருமான் ஞானப்பழத்தை இரண்டு மகன்களில் யாருக்குக் கொடுப்பது என்பதை முடிவு செய்ய இரண்டு பேரிடமும் உலகத்தைச் சுற்றி வரும்படி கேட்டுக்கொண்டார். உடனே பிள்ளையார் தனது பெற்றோர்தான் உலகம் என்று கருதி தனது பெற்றோரைச் சுற்றி வந்து ஞானப்பழத்தை தனது தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

முருகப்பெருமான் உலகத்தைச் சுற்றிவிட்டு வந்தபோது பிள்ளையார் ஏற்கெனவே ஞானப்பழத்தை தனது பெற்றோரிடமிருந்து வாங்கி இருந்தார். இதனைக் கண்டு முருகப்பெருமான் கோபத்தில் தனது பெற்றோரை விட்டு பிரிந்து சென்றார். அப்படி முருகப்பெருமான் தனது பெற்றோரை விட்டு பிரிந்த இடத்தில்தான் இந்த முருகன் கோயில் அமைந்துள்ளது என்கிறார்கள். எனவே, இந்தக் கோயில் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு தைரியம், ஞானம் மற்றும் வெற்றிக்கான ஆசீர்வாதங்களைப் பெற பக்தர்கள் கார்த்திக் சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User