மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய சக காவலர்கள்

Aug 25, 2026 - 18:30
0
மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய சக காவலர்கள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மிக இளம் வயதில் அதாவது பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் விபத்தில் உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்செல்வனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் தமிழ்ச்செல்வனின் தாய், தந்தை ஆகியோருக்கு உதவி செய்வதற்காக அவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணி செய்து வரும்  ‘காவலர்கள் காக்கும் உறவுகள்’ என்ற அமைப்பின் மூலம் உதவ முன்வந்தனர்.

 இந்த அமைப்பானது தமிழக முழுவதும் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட காவலர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் விபத்தில் மூலமாகவோ அல்லது எதிர்பாராத விதமாகவும் மரணம் அடையும் சக காவலர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவியை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கு சுமார் 6,000 க்கும்மேற்பட்ட காவலர்கள் தங்களின் குழு உறுப்பினர்கள் மூலம் திரட்டிய சுமார் 22 லட்சம் ரூபாயை தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கு வழங்கினார்கள்.

மதுரை காக்கும் கரங்கள் உறவுகள்

 இந்த நிகழ்ச்சி மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு. தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு நான்கு லட்ச ரூபாய் டெபாசிட்டாகவும், அவரின் தாய் தந்தையருக்கு தலா 2 லட்சம் ரூபாய் டெபாசிட்டாகவும், இரண்டு வயது மகனுக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் டெபாசிட்டாக செலுத்தி அதன் காசோலையை குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும் ரூபாய் 80 ஆயிரத்தை தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு 50,000, பெற்றோருக்கு 30,000 என பணமாகவும் வழங்கினார்கள்.

இது குறித்து பேசிய காக்கும் கரங்கள் உறவுகள் அமைப்பின் பொறுப்பாளர்கள், “ விபத்தில் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது என்ற போதிலும் அதன் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.  குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று அந்த குடும்பத்திற்கு தேவையான நிவாரண நிதியை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

மதுரை காக்கும் கரங்கள் உறவுகள்

தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காக்கும் உறவுகள் அமைப்பின் மூலம்  விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள சக காவலர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இந்த அமைப்பில் உள்ள 8000 உறுப்பினர்களில் 6000 உறுப்பினர்கள் மட்டுமே நிதி வழங்கியதாகவும் மீதி உள்ளவர்களும் வழங்கினால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு உதவியாக இருக்கும். இனிவரும் காலங்களிலாவது அனைத்து காவலர்களும் இதுபோன்று  மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து சமயநல்லூர் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் இறந்த காவலர் தமிழ்ச்செல்வன் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User