LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது..." - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

Mar 11, 2026 - 19:01
 0
LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது..." - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விலை உயர்ந்து வருகிறது. சிலப் பகுதிகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``பிரதமர் இஸ்ரேல் பயணத்தை முடித்து திரும்பிய உடனேயே போர் தொடங்கியது. அங்கு என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியாதா? உள்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 28 அன்று ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கின. இதன் விளைவாக, மேற்கு வங்கத்தில் ஆட்டோ எல்பிஜி விலை லிட்டருக்கு ரூ.57.06-லிருந்து ரூ.62.88 ஆக திடீரென உயர்ந்தது பொதுப் போக்குவரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. நம்மிடம் இருந்த கையிருப்பு என்னவானது? முறையான திட்டமிடல் இல்லாமல் திடீரென 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்துவது ஏன்? 2014-ல் ரூ400 ஆக இருந்த சிலிண்டர் விலை இன்று ரூ1,000-ஐத் தொட்டுள்ளது. இது போர் காரணமாக மட்டும் நடந்ததல்ல, மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி.

உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், எரிபொருளை மத்திய அரசு பதுக்கி வைக்கிறதா? மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விவகாரத்தில், மாநில அரசு மானியம் கொடுத்தாலும் விநியோகம் சீராக இல்லாவிட்டால் பலன் இருக்காது.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

இந்த விலை உயர்வால் உணவகத் தொழில், உணவு விநியோகம் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 12 மில்லியன் நீக்குவதை விட, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 16 அன்று கொல்கத்தாவில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடைபெறும்" எனக் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0