குமரி: ரயில் பெட்டியில் பெண் படுகொலை; 7.30 மணிநேரம் அதே பெட்டியில் இருந்த கொலையாளி - அதிர்ச்சி தகவல்

Nov 24, 2026 - 09:30
0
குமரி: ரயில் பெட்டியில் பெண் படுகொலை; 7.30 மணிநேரம் அதே பெட்டியில் இருந்த கொலையாளி - அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11-ம் தேதி பழுது காரணமாக நாகர்கோவில் 13-வது யார்டில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை, 18-ம் தேதி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, இருக்கைக்குக் கீழே அப்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து, தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், 14-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடையில் தனியாகச் சென்ற அப்பெண்ணை, செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் (31) ஆளில்லாத ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கிக் கொன்றது தெரியவந்தது. உடனடியாகத் தப்பினால் சிக்கிக்கொள்வோம் எனக் கருதி, பிணத்துடன் சுமார் 7.30 மணி நேரம் பெட்டிக்குள்ளேயே பதுங்கியிருந்த ஐயப்பன், காலை 8 மணியளவில் பயணிகள் நடமாட்டம் தொடங்கியதும் சாதாரணப் பயணி போல வெளியேறித் தப்பியுள்ளார்.

ரயில் பெட்டிக்குள் அழுகியநிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

கடந்த 4 மாதங்களாக ரயில் நிலைய வளாகத்திலேயே சுற்றித் திரிந்த ஐயப்பனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் ஐயப்பன் திடீரென மயங்கி விழுந்ததால், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மன ரீதியான சோதனைகளும் நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் குஜராத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே, ரயில் பெட்டிக்குள் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான ஐயப்பன்

24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், 4 நாட்களாகச் சடலம் கிடந்தும் கண்டறியப்படாதது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது. யார்டில் நிறுத்தப்படும் ரயில் பெட்டிகளைப் பூட்டுவதைக் கட்டாயமாக்க வேண்டும்; இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும், டிக்கெட் இன்றி ரயில் நிலைய வளாகத்தில் தங்குபவர்களை கண்காணித்து வெளியேற்றுவதுடன், இரவு நேரப் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான தனி ஓய்வறைகளை அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User