முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை - தங்க வாள், கஷாய பிரசாதம்.. வியக்க வைக்கும் தகவல்கள்!

Jun 12, 2026 - 19:01
0
முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை - தங்க வாள், கஷாய பிரசாதம்.. வியக்க வைக்கும் தகவல்கள்!

முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம், கொல்லூரில் அமைந்திருக்கும் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படும் அன்னை மூகாம்பிகையை வழிபட்டால் வாழ்வில் உண்டாகும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மூகாம்பிகையின் பக்தர்கள்.

முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை

இவர்கள் இருவருமே தங்கள் அரசியல் வாழ்வில் முக்கியமான தருணங்களுக்கு முன் கொல்லூர் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் குறித்த பல தகவல்கள் ஆச்சர்யம் தருவன. புராணச் சிறப்பு கொண்ட இந்தத் தலம் குறித்த ஆச்சர்யமான 11 தகவல்களை இங்கு காண்போம்.

1. மூகாசுரன் என்னும் அசுரனை அழித்த அன்னை இவள் என்பதால், இவளுக்கு மூகாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் பாரத தேசம் முழுவதும் அமைந்திருக்கும் 51 சக்தி பீடங்களில் ஆதி பராசக்தியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது கொல்லூர். கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது கொல்லூர். மங்களூரிலிருந்து 140 கி. மீ பயணித்தால் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது, இத்திருக்கோயில்.

2. மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய புராணக் கதைகளும், வரலாற்றுச் சான்றுகளும் கொண்டு விளங்குகிறது இந்த ஆலயம். ஆரண்யபுரம் என்ற பெயரில் அடர்த்தியான வனமாக இந்தப் பகுதி இருந்தபோது கோல மகரிஷி இங்கு தவமியற்றி வந்தார். அவரின் தவத்தைக் கலைக்க வந்த கம்காசுரனை அழிப்பதற்காக ஈசன், கணபதி, வீரபத்திரர் ஆகியோருடன் தோன்றிய தேவி, கம்காசுரனை வாய் பேசமுடியாத ஊமையாக மாற்றிவிட்டாள். அப்போதும் அவனுடைய அட்டகாசங்கள் அதிகரிக்கவே, அவனைக் கொன்ற அம்பிகை, மூகாம்பிகை என்னும் திருப்பெயருடன் கோயில் கொண்டாள். கோல மகரிஷி தவம் இயற்றிய அந்தப் பகுதி, 'கோலாபுரம்' என்று அழைக்கப்பட்டு, தற்போது கொல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

3. ஆதிசங்கரர் கொல்லூரில் தவமிருந்தபோது, அன்னை மூகாம்பிகை அவருக்குக் காட்சியளித்தாள். கோல மகரிஷிக்காக உருவான சுயம்புலிங்கத்தின் முன்பு தன் சிலை அமைத்துக் கோயில் உருவாக்க ஆணையிட்டாள். தேவியின் ஆணைப்படி, ஆதி சங்கரர் பஞ்சலோகங்களால் ஆன மூகாம்பிகை சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீசக்கரம் மற்றும் ஆலயத்தின் அத்தனை விதிகளையும் அவரே இயற்றிக் கொடுத்தார்.

4. இங்கே மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது; அலங்காரம், புஷ்பாஞ்சலி உண்டு. லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நிகழ்கிறது. அபிஷேகத்தின்போது லிங்கத்தின் நடுவில் சொர்ண ரேகையைக் காணலாம். இதில் இடதுபுறம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவியும் அருள்வதாக நம்பிக்கை.

மூகாம்பிகையை சரஸ்வதிதேவியாக பாவித்து, ஆதிசங்கரர் ‘கலா ரோகணம்’ பாடி அருள்பெற்றார். எனவே இங்கு அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் குழந்தைகள், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

இந்தத் தலத்தில் கடும் தவத்தில் ஈடுபட்ட ஆதிசங்கரர், எழ முயன்றாராம்; ஆனால் முடியவில்லை. அப்போது, அம்பிகையே வந்து அவருக்கு கஷாயம் ஒன்றை வழங்கினாளாம். எனவே, அர்த்தசாம பூஜையின்போது, பிரசாதமாக பக்தர்களுக்கு கஷாயம் வழங்கப்படுகிறது. இந்த கஷாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் என்கின்றனர்!

5. மூகாம்பிகை அன்னை, ஆதிசங்கரருக்குக் காட்சி தந்த பிறகுதான் அவர் ‘சௌந்தர்ய லஹரி’ எனும் பாடல்களை இயற்றியதாக ஒரு தகவல் உண்டு. ஆதிசங்கரர் அமர்ந்த பீடம் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ளது.

6. இயற்கை அழகு கொஞ்சும் சௌபர்ணிகை ஆற்றின் படித்துறையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, கணபதியை வழிபட்ட பிறகுதான் அம்மனின் கோயிலுக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில், பழைமையான காளி கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலினுள்ளே, பிரமாண்ட புற்று ஒன்று உள்ளது. இதையும், காளிதேவியையும் வணங்கி, மூகாம்பிகை அன்னையின் கோயிலை அடையலாம்.

7. மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டு அருளும் இந்த அன்னை தன் கரங்களில் சங்கு, சக்கரத்துடன் அபய, வர முத்திரைகளோடு ஆதிசக்தியாக அருளும் திருக்கோலம் காண்பவரை சிலிர்க்க வைக்கும்.

8. கருவறை உள்ளே, சக்திதேவி மூகாம்பிகை சிலையின் முன்னர் காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும் இணைந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த லிங்கம் ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப் பிரிந்து, சக்தி - சிவன் தத்துவத்தை உணர்த்துகிறது. உச்சிவேளையின்போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த லிங்கத்தின் மீது பட்டு தகதகக்கும்போது கண்கொள்ளா காட்சியாக விளங்கும்.

9. கம்பீரமான வீரபத்திரர், பத்துத் திருக்கரங்களுடன் விநாயகர், நாக உருவில் முருகப்பெருமான், சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி எனப் பல தெய்வ சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்திருக்கின்றன.

10. பிரமாண்ட வடிவில் காணப்படும் இந்த ஆலயம் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டு அலங்காரமாகக் காட்சியளிக்கிறது.

11. ஏன் முக்கியஸ்தர்கள் அனைவரும் கொல்லூர் மூகாம்பிகையை நாடி வருகிறார்கள் என்னும் கேள்விக்கு பதிலாக அமைகின்றன சில உதாரணங்கள். எம்.ஜி.ஆர். இந்த அம்பிகையின் தீவிர பக்தர். அம்பிகைக்குத் தங்கத்தில் வாள் செய்து வழங்கினார். அதனால்தான் அவருக்கு தோல்வியே இல்லாத அரசியல் வாழ்வு அமைந்தது என்பார்கள். அதே போன்று இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெங்களூரில் ‘கூலி’ படத்தில் நடித்தபோது உடல் நலமில்லாமல் போயிற்று. அப்போது மூகாம்பிகையிடம் வேண்டிக் கொண்டார். அதன் பிறகு உடல் நலம் சரியாயிற்று. அதற்கு நன்றிக்கடனாக நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார் அமிதாப். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இங்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படிப் பிரமுகர்கள் பலரும் இன்றும் மூகாம்பிகை அம்மன் மீது நம்பிக்கை வைத்துத் தொலைதூரத்திலிருந்து வந்து வழிபட்டுப்போகிறார்கள். காரணம் இது ஸித்தி க்ஷேத்திரம். மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள். தன் மீது உண்மையான பக்தி கொண்டு நாடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு, வெற்றிகரமான வாழ்வை அருள்வாள் என்பது நம்பிக்கை.

அதன் அடிப்படையிலேயே இன்று முதல்வர் விஜய், கொல்லூர் சென்று வழிபாடு செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல அன்னையின் அருளால் இவரும் தொடர் வெற்றிகளைப் பெறுவார் என்கிறார்கள் அவர்கள் கட்சி நிர்வாகிகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User