கரூர், சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் : உடல் நலம் அருளும் நவபாஷாண முருகன் சந்நிதி!

Mar 25, 2026 - 10:02
 0
கரூர், சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் : உடல்  நலம் அருளும் நவபாஷாண முருகன் சந்நிதி!

பழநி மலையில் அருளும் முருகப்பெருமான் திருமேனி சித்தர்களால் செய்யப்பட்டது. ஒன்பது வகையான விஷங்களைக் கூட்டிச்செய்யப் பட்ட மாமருந்து அந்தத் திருமேனி என்பார்கள். பால தண்டாயுதபாணியாகத் திகழும் பழநி முருகனை தரிசித்தாலோ வணங்கினாலோ நம் நோய்கள் தீர்த்து அருள்வார் என்பது நம்பிக்கை. அதன் காரணமும் அவர் அருமருந்தின் வடிவாக அருள்வதுதான் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட நவபாஷாண முருகனின் சந்நிதி ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைப்பதோடு நோய் தீர்ந்து ஆரோக்கியமும் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்து அறிந்துகொள்வோம்.

சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர்

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முனிமுக்தீஸ்வரர் ஆலயம். கரூர்- தாராபுரம் மார்க்கத்தில் சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது சின்னதாராபுரம். அங்கே இறங்கி, அமராவதி ஆற்றங்கரையை நோக்கி நடந்தால், சிறிது தூரத்திலேயே உள்ள முனிமுக்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

தமிழகத்தில் உள்ள மேற்குநோக்கிய சிவாலயங்களில் இது மிகவும் முக்கியமானது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் அம்பாள் அகிலாண்டேஸ்வரியுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். மேற்கு நோக்கி அருளும் இந்த இறைவனை வணங்கினால், முக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு முனிமுக்தீஸ்வரர் என்று திருப்பெயர் உண்டானது.

மகாபாரதக் காலத்தில் `விராடபுரம்’ என்று வழங்கப்பட்டது இந்த ஊர் என்கிறார்கள். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து அஞ்ஞாத வாசம் புரிந்தது இந்தப் பகுதியில்தான். அவர்கள் விராடபுரம் அரண்மனையில் வசித்தபோது மன்னன் கீசகன் பாஞ்சாலியைச் சீண்டினான். கோபம் கொண்ட பீமன் கீசகனை வதைத்தான். ஆகவே பீமன் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான். அந்த தோஷம் நீங்க பீமன் முனிமுக்தீஸ்வரரை வழிபட்டான் என்கிறது தலபுராணம்.

காமதேனு, பிரம்மா முதலிய தேவர்களும் வழிபட்ட தலம் இது. மேலும் இத்தலத்தில் முனிவர்கள் பலரும் நாடி வந்து தவமிருந்து வழிபட்டு முக்தி அடைந்தனர் என்பதாலோ என்னவோ ஆலயக் கருவறை விமானத்தில் முனிவர்களின் சிற்பங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில்

கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களிலேயே இங்குள்ள சிவலிங்கமே பெரிது என்கிறார்கள் பக்தர்கள். தினமும் இங்கு மாலையில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு சுவாமியை வணங்கினால், திருமண யோகமும், குழந்தைப் பேறும் கிட்டும். அன்னை அகிலாண்டேஸ்வரி இங்கே அழகே வடிவாகக் காட்சி அருள்கிறாள். இங்கே அன்னையை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டால் பெண்களுக்குத் திருமண வரம் உடனே கிடைக்கிறது என்கிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கே அருளும் முருகப்பெருமான் பழநி முருகப்பெருமானைப்போலவே அமைந்திருக்கிறார். (பழநியில் பிரதிஷ்டை செய்ய உருவாக்கப்பட்ட சிலை என்கிற செய்தியும் உண்டு.) நவபாஷாணத் திருமேனி என்பதால் அவரை தரிசித்தாலே நமக்குள் நல்லதிர்வுகள் உண்டாகிறது. நோய்களும் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். நவபாஷாணத் திருமேனி என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பங்குனி உத்திரத் திருநாளில் மட்டுமே இவருக்கு அபிஷேகம் நிகழ்கிறது. இவரை வழிபடுவது பழநி முருகனை வழிபடுவதற்குச் சமம். எனவே பழநிக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த முருகனையே பழநி முருகனாக வழிபட்டுத் தம் வேண்டுதலைச் செலுத்தலாம்.

சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் நவபாஷாண முருகன்

இந்தக் கோயிலில் மாசித் திருவிழா, ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை, தை மாதம் சண்டிகேஸ்வரர் புறப்பாடு, 108 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கோபூஜை... என விழா வைபவங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. ஆடி - 18 அன்று அம்பாள் ரதவீதிகளில் உலா வருவாள். அப்போது அன்னையைத் தரிசித்து வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்பலம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0