விஜய்: "வென்று வா தலைவா, நாங்க இருக்கோம்!" - சிபி சத்யராஜின் நெகிழ்ச்சியான பதிவு
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் சத்யராஜ் திமுகவிற்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த வாரம்கூட பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தவர், அங்கு விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ஆனால், சத்யராஜின் மகனும், நடிகருமான சிபி சத்யராஜ் தீவிர விஜய் ரசிகர்.
தவெக தொடங்கப்பட்ட நாள் முதல், இவர் விஜய்க்கு ஆதரவளித்து வருகிறார். வருகிற வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இன்று மாலையோடு பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைகின்றன.
இந்நிலையில், விஜய் தனக்குள் எப்படியான தாக்கங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறார் என சிபி சத்யராஜ், அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் சிபி சத்யராஜ், "அன்புள்ள விஜய் அண்ணா, உங்களை முதன்முதலில் நான் சந்தித்தது 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி. பொள்ளாச்சியில் உள்ள சக்தி ஹோட்டல் மொட்டை மாடியில், அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அங்கிள் ஆகியோருடன் நீங்கள் வந்திருந்தீர்கள்.
அப்போது அமைதியாக இருந்த இந்த இளைஞர், பின்னாளில் என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று எனக்குத் தெரியாது.
நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, தம்பியாக மற்றும் நண்பனாக உங்களின் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்த முடிவை மதிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.
நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். இத்தனை ஆண்டுகளில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எனது வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள்.
உங்களின் மீதுள்ள அன்பால் ஒன்றிணைந்த பலரே எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறினர். எனது காதலியாக இருந்து பின்னாளில் மனைவியான ரேவதியுடன் நான் சென்ற முதல் டேட்டிங் 'பிரியமானவளே' திரைப்படம் பார்க்கத்தான்.
உங்களுக்குப் போட்டியாக இருக்கும் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களான எனது நண்பர்களிடம், உங்களுக்காக நான் செய்த ஆரோக்கியமான விவாதங்கள் பல. உங்களின் வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே கொண்டாடி இருக்கிறேன்.
திருமணத்திற்குப் பிறகு உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தது, எனது 'லீ' படத்தின் தொடக்க விழாவிற்கு நீங்கள் வந்தது, எனது படங்கள் வெற்றி பெற வாழ்த்தி நீங்கள் செய்யும் அழைப்புகள் மற்றும் நான் எப்போது அழைத்தாலும் அல்லது மெசேஜ் செய்தாலும் உடனடியாக நீங்கள் தரும் பதில்கள் என இவை அனைத்தும் என் வாழ்வின் பொக்கிஷமான நினைவுகள்.
நான் ஒரு சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், நான் திரைத்துறைக்குள் நுழைவதற்கு நீங்கள்தான் ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தீர்கள். உங்களின் படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், உண்மையான காதல், நட்பு மற்றும் கடின உழைப்பின் மதிப்பை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.
உங்களின் 'குட்டி ஸ்டோரி'கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை எங்களுக்கு அளித்தன. கடந்த 3 தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்து, ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா!
திரையில் நீங்கள் கொடுத்த அந்த அற்புதமான தருணங்களை நாங்கள் எப்போதும் நெஞ்சில் சுமப்போம். வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0