`கலாபவன் மணி ஆசை நிறைவேறிடுச்சு!' - டாக்டரான மகள்... மகிழ்ச்சியில் குடும்பம்!

Mar 9, 2026 - 20:01
 0
`கலாபவன் மணி ஆசை நிறைவேறிடுச்சு!' - டாக்டரான மகள்... மகிழ்ச்சியில் குடும்பம்!

மலையாளத்தில் நாடன் பாட்டு என அழைக்கப்படும் நாட்டுப்புற பாடகர், நடிகர் என பன்முகக் கலைஞர் கலாபவன் மணியின் மறைவு ரசிகர்களுக்கு பேரிழப்பாக இருந்தது. அவரது மரணத்தில் பல சர்ச்சைகள் இருந்தபோதும் அதிகமாக மது அருந்தியதே மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கலாபவன் மணியின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி நிம்மி மற்றும் மகள் ஸ்ரீலட்சுமி ஆகியோர் சாலக்குடியில் வசித்துவந்தாலும் மீடியா வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தனர். கலாபவன் மணி இறந்து பத்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் மகள் ஸ்ரீலட்சுமி  ​மருத்துவர் ஆகிவிட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் உள்ளனர்.

"கலாபவன் மணி ஆசைப்பட்டது போன்று அவர் மகள் ஸ்ரீலட்சுமி டாக்டர் ஆகிவிட்டார்" என கலாபவன் மணியின் தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். எர்ணாகுளம் ஸ்ரீ நாராயண காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் படித்து எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ள ஸ்ரீலட்சுமி, இப்போது பயிற்சிக்குச் சென்றுள்ளார்.

டாக்டராகிவிட்ட கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலட்சுமிக்கு கேக் ஊட்டும் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன்

மகள் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்று கலாபவன் மணி உயிரோடு இருக்கும் சமயத்தில் வெளிப்படையாகப் பேசிவந்தார். கலாபவன் மணி இறந்த வேதனையையும் சுமந்துகொண்டுதான் ஸ்ரீலட்சுமி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். அதன் பின்னர் பிளஸ் 2 முடித்தவர் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து எம்.பி.பி.எஸ் படிக்க கல்லூரிக்குள் நுழைந்தார். இப்போது கலாபவன் மணி விரும்பியபடி ஸ்ரீலட்சுமி மருத்துவர் ஆகிவிட்டார். ஸ்ரீலட்சுமி தனிப்பட்ட முறையில் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. தன் தந்தையின் ஆசைப்படி அமைதியாக மருத்துவச் சேவையில் ஈடுபட விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கலாபவன் மணியுடன் மகள் ஸ்ரீலட்சுமி

இது குறித்து கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "என் அண்ணன் கலாபவன் மணி விரும்பியது போலவே அவர் மகள் மருத்துவர் ஆகிவிட்டார். என் அண்ணன் தன்னுடைய மகளை ஏழைகளுக்கான மருத்துவராக மாற்ற விரும்பினார். இப்போது ஸ்ரீலட்சுமி எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனது வளர்ச்சிக்காக என் அண்ணன் கலாபவன் மணி ஒரு சிறந்த சூழலை உருவாக்கி தந்திருந்தார். நான் முனைவர் பட்டம் பெற்று கலாமண்டலத்தில் உதவிப் பேராசிரியர் வேலையும் பெற்றேன். கலாபவன் மணியையும் அவரது எண்ணங்களையும் மனதில் வைத்துக்கொண்டு, தடுமாறாமல் முன்னேறியதால்தான் இதெல்லாம் நடந்தது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0