‘பெண்களின் கண்ணியத்தைச் சீண்டாதீர்கள்’ - உதயநிதிக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி கண்டனம்!
தஞ்சாவூரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியபோது, பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமாகவும் பொறுப்புணர்வுடனும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்களைப் பற்றியோ, பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையிலோ பேசுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகள், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான களம். அது பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல. தி.மு.க-வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சை, ஒரு பெண்ணாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை வெறும் அரசியல் கருத்து வேறுபாடாக மட்டும் கடந்து செல்ல முடியாது. பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட வேண்டிய மரியாதை மற்றும் கண்ணியம் குறித்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலையில், அதற்கு மாறான எந்தவொரு பேச்சும் கண்டிக்கத்தக்கது.

அரசியல் அதிகாரமோ, பதவியோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசுவதற்கான உரிமையை வழங்கிவிடாது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு யாரிடமிருந்து வந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பாகும். இந்த விவகாரம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெண்களின் கண்ணியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது. ஒரு பெண்ணின் மரியாதையை அவமதிக்கும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தாலும், அதற்கு எதிராக பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதுதான் நாகரிகமான தமிழ்நாட்டின் குரல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)