பேருந்தில் நகை திருட்டு : மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி!
தங்க நகை திருட்டு வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலுள்ள சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா (66) என்பவர், கடந்த 19-ந் தேதி நாட்றம்பள்ளியில் கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார்.
பர்கூரில் இறங்கியவர் அங்கிருந்து ஆட்டோ மூலம் தொகரப்பள்ளி பகுதியில் உள்ள தன் சகோதரி ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த பர்ஸ் மற்றும் எட்டரை பவுன் தங்க நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், மல்லிகா பயணம் செய்த பேருந்திலுள்ள கண்காணிப்பு கேமரா, பர்கூர் பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மல்லிகாவின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண், மல்லிகாவுடன் பர்கூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் ஏறிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து சந்தேகத்திற்குரிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் பர்கூர்-வாணியம்பாடி கூட்ரோடு பகுதியில் பர்கூர் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்ற பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகம் வலுக்கவே, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மல்லிகாவிடம் இருந்து நகைகளை திருடியதை அப்பெண்மணி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அவர், ஆம்பூர் அருகே நரியம்பட்டைச் சேர்ந்த பாரதி (57) என்பதும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியான இவர், ஏற்கனவே நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்த எட்டரை பவுன் நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)