இன்பதுரை வெற்றி செல்லாது: `10 ஆண்டுகாலப் போராட்டம்: நீதி வென்றது' - அப்பாவு மகிழ்ச்சிப் பேட்டி!

Jun 03, 2026 - 18:01
0
இன்பதுரை வெற்றி செல்லாது: `10 ஆண்டுகாலப் போராட்டம்: நீதி வென்றது' - அப்பாவு மகிழ்ச்சிப் பேட்டி!

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அப்பாவுவை விட 104 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். இத்தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை அவர் கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, தேர்தல் அதிகாரிகளால் நான் வெற்றி வாய்ப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தபால் வாக்குகளில் 203 வாக்குகளை எண்ணாமலேயே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டார்கள். எனவே, அந்த அறிவிப்பைச் செல்லாது என அறிவிக்கக் கோரி நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று, பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், நான் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள்.

இன்பதுரை

மேலும், அந்தத் தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரையின் தேர்வு செல்லாது என்றும், சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலும் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இன்பத்துரையின் பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக என் பெயரை பதிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இறுதியாக நீதி வென்றுள்ளது.

இத்தனை காலங்களாக நாங்கள் அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாண்புமிகு நீதியரசரின் இன்றைய தீர்ப்பு ஒரு சிறந்த நிவாரணமாகக் கிடைத்துள்ளது. எனவே, இந்த நீண்ட காலதாமதம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வரலாற்று வெற்றியை நம்முடைய மாண்புமிகு மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும், முன்னாள் முதல்வர் பாதத்திலும் காணிக்கையாக்குகிறேன்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User