‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

Jun 15, 2026 - 18:01
0
‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் பலராலும் அறியப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் அனிஷ் பகத்துடன் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் ரேஷ்மா, முதன்முறையாக இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்லாந்து மண்ணில் தன் அடையாளத்தைத் தேடிய கதை, இன்று இணையத்தையே நெகிழ வைத்திருக்கிறது.

தாய்லாந்து VLOG | ரேஷ்மா
தாய்லாந்து VLOG | ரேஷ்மா

தன் வாழ்நாளில் முதல்முறையாக விமானத்தில் ஏறி, தாய்லாந்துக்கு அனிஷுடன் பயணம் மேற்கொண்டார் ரேஷ்மா. ஆனால், அங்கு சென்றடைந்ததும் அனிஷ் அவரிடம் வைத்த கோரிக்கைதான் இந்தக் கதையின் தொடக்கப்புள்ளி.

"ஒரு நாள் முழுவதும் நீ தனியாக உனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும்," என்று அனிஷ் கூறியபோது ரேஷ்மா ஒரு கணம் உறைந்து போனார். "நான் ஒரு சாதாரண வீட்டுப் பணியாளர். இங்கு எனக்கு யாரையும் தெரியாது, அவர்களின் மொழி புரியாது, படிக்கவும் தெரியாது. நான் எப்படித் தனியாகச் சமாளிப்பேன்?" என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அந்த அச்சத்திற்குள்ளேயே ஒரு தீர்வையும் கண்டிருந்தார். "எனக்கு சமைக்கத் தெரியும். அதனால், நண்பர்களைப் பிடிப்பதற்காக பூரணப்போளி செய்திருக்கிறேன்," என்ற அவரது வார்த்தைகளில், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.

அடுத்த நாள், தனக்குப் பிடித்த புடவையைக் கட்டிக்கொண்டு, கையில் போளி நிறைந்த டிபன் பாகஸுடன் பாங்காக்கின் தெருக்களில் தனியாளாக இறங்கினார் ரேஷ்மா. அது வெறும் பயணமல்ல; தன்னைத் தானே கண்டறியும் ஒரு தீர்த்த யாத்திரை என்கிறார்.

"எனக்கு என்ன ஆர்வம், எனக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் நான் இதுவரை யோசித்ததே இல்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரம் கிடைத்ததில்லை," என்று தன் முதல் 'Vlog'கில் அவர் குறிப்பிட்டபோது, அது கோடிக்கணக்கான பெண்களின் குரலாகவே ஒலித்தது.

தாய்லாந்து VLOG | ரேஷ்மா
தாய்லாந்து VLOG | ரேஷ்மா

தன் பயணத்தின்போது, பாங்காக்கில் உள்ள ஒரு அழகான கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு சந்தித்த ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நபருக்கு போளியைக் கொடுத்து, தன் முதல் சர்வதேச நண்பரைப் பெற்றார். "மிகவும் பயமாக இருந்தது. என் வாழ்வில் ஒரு ஆணின் துணையின்றி நான் தனியாக வெளியே சென்றதே இல்லை," என்று அவர் பதிவு செய்த தருணம், பல பெண்களின் கட்டுடைக்கும் தருணமாக அமைந்தது.

ரேஷ்மாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஒரு '7-Eleven' கடைக்குச் சென்ற அவர், அங்கு போபோ என்ற பெண் இன்ஃப்ளூயன்சரை சந்தித்தார். ரேஷ்மாவின் கதையால் ஈர்க்கப்பட்ட போபோ, அவரைத் தன் வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைத்தார். இருவரும் காரில் பேசிக்கொண்டே பயணித்ததும், ஒன்றாக அமர்ந்து உணவுண்டதும் இரு கலாச்சாரங்கள் அன்பால் இணையும் காட்சியாக இருந்தது. அப்போது ரேஷ்மா உதிர்த்த வார்த்தைகள் ஆழமானவை: "பொறுப்புகள் வந்துவிட்டால், நாம் பெண்கள் ஏன் நம்மைப் பற்றியே மறந்துவிடுகிறோம் என்று தெரியவில்லை."

தாய்லாந்து VLOG | ரேஷ்மா
தாய்லாந்து VLOG | ரேஷ்மா

அந்த நாளின் முடிவில், சினிமாக்களில் வருவது போல ஒரு புத்தகத்தை கையில் ஏந்தியபடி, தாய்லாந்தின் புகழ்பெற்ற 'மேங்கோ ஸ்டிக்கி ரைஸ்' உணவைச் சுவைத்தபடி, ரேஷ்மா தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்: "ரேஷ்மா, உன்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்." இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் வெற்றி மட்டுமல்ல; சமூகத்தின் கை விலங்குகளை உடைத்தெறியத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி முழக்கமாகவே பார்க்கப்படுகிறது.

ரேஷ்மாவின் இந்த நெஞ்சை உருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்றது. "இது மிகவும் அழகானது," என்று ஒருவர் குறிப்பிட, மற்றொருவர், "காரில் அவர் தன் கூந்தலை அவிழ்த்துவிட்டபோது என் கண்கள் கலங்கிவிட்டன.

நீங்கள் ஒரு சுதந்திரப் பட்டாம்பூச்சி," என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். "இதுவரை நான் பார்த்ததிலேயே மிகவும் இதமான பயணக் காணொளி இதுதான்," என்ற கருத்துகளும் குவிந்தன. ரேஷ்மாவின் பயணம், எல்லைகளையும், மொழிகளையும், பொறுப்புகளையும் கடந்து ஒரு பெண் தன்னை எப்படி நேசிக்க முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக மாறியுள்ளது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User