'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

Jun 13, 2026 - 19:31
0
'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவிட்டது என்ற செய்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

அவர் வேறு யாருமல்ல, வைபவ்வின் இளைய சகோதரரான வெறும் 10 வயது நிரம்பிய சிறுவன் ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

விளையாடும் வயதில், பெரிய கிரிக்கெட் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் ஆசீர்வாத். பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடி வரும் இவர், சமீபத்தில் நடந்த உள்ளூர் பயிற்சிப் போட்டி ஒன்றில் தனது வாழ்நாளின் முதல் சதத்தை விளாசி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்துள்ளார்.

ஆசீர்வாத் சூர்யவன்ஷி
ஆசீர்வாத் சூர்யவன்ஷி

வெறும் 87 பந்துகளை மட்டுமே சந்தித்த ஆசீர்வாத், அபாரமாக 103 ரன்களைக் குவித்துள்ளார். இந்த இன்னிங்ஸில் 20 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். 118.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டிய ஆசீர்வாத், இறுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாலும், அவர் செய்த இந்த மாயாஜாலம் பார்ப்போர் அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டது.

சூர்யவன்ஷி குடும்பத்தில் மொத்தம் மூன்று சகோதரர்கள். மூத்தவர் உஜ்வால், இரண்டாமவர் இந்தியா ஏ அணிக்காக கலக்கிக் கொண்டிருக்கும் வைபவ், கடைசிப் பையன்தான் இந்த ஆசீர்வாத். வைபவ் சூர்யவன்ஷியும் ஆசீர்வாத்தும் வெவ்வேறு வயதுடையவர்கள் என்றாலும், இருவருக்கும் ஆட்டத்தில் உள்ள ஒற்றுமைகள் பிரமிக்க வைக்கின்றன.

அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும்.

அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத்.

ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக வலைத்தளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இளைய மகனின் இந்த வியக்க வைக்கும் சாதனையை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறார் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி. "இன்று ஆசீர்வாத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கும் கிடைக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அண்ணன் வைபவ் போலவே அவனையும் ஒரு மிகச்சிறந்த அதிரடி கிரிக்கெட் வீரராக உருவாக்குவதே எனது லட்சியம்," என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

ஆசீர்வாத் சூர்யவன்ஷி
ஆசீர்வாத் சூர்யவன்ஷி

தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியும், தனது தம்பியின் இந்தச் பிரமாண்டமான தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி மூலம் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு வைபவ் சூர்யவன்ஷியே எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்து வரும் நிலையில், வெறும் 10 வயதிலேயே அண்ணனைப் போல ரன் மழை பொழியும் ஆசீர்வாத்தின் வருகை, இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு அபூர்வமான பொக்கிஷம்.

இருவரின் ஆட்டத்தையும் ஒரே மைதானத்தில், ஒரே இந்திய அணிக்காக காணும் நாளுக்காக கிரிக்கெட் உலகம் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User