தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெரிய கோயில் மாதிரியில் இந்தி எழுத்துகள் - திமுக எதிர்ப்பால் அகற்றம்!

Oct 08, 2026 - 21:30
0
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெரிய கோயில் மாதிரியில் இந்தி எழுத்துகள் - திமுக எதிர்ப்பால் அகற்றம்!

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ரயில் நிலையத்துக்குள் உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவதாக உள்ள ஒரு வழியில் உள்ள கட்டடத்தின் முகப்பு பகுதியின் மேல் பெரிய கோயில் போன்று மாதிரி கோபுரம் நிறுவப்பட்டது.

திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் "தஞ்சாவூர் சந்திப்பு" என்ற எழுத்துகளை, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி அதனை, பயணிகள் வெளியே வரும் கட்டடப் பகுதியில் பொருத்தியது. இதில் பெரிய கோயில் மாதிரி போன்ற தோற்றமுடைய கட்டடப் பகுதியில் இந்தி எழுத்துகளை, ரயில்வே நிர்வாகம் பொருத்தியது. இதனால் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் அமைப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்ததுடன் இந்தி எழுத்துக்களை எடுத்து விட்டு தமிழில் வைக்க வேண்டும் என்றனர். இதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், இன்று திமுக சார்பில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், இந்தி எழுத்துகளை மாற்றி அங்கு தமிழ் எழுத்துக்களை பொருத்த வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திட அக்கட்சியினர் ஒன்று திரண்டனர். இதில் திமுக எம்.பி முரசொலி, துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர். இதற்கிடையில் ரயில்வே தொழிலாளர்கள், மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துகளை உடனடியாக அகற்றினர். இதனால் ரயில் நிலையத்தின் முன்பு திரண்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு திரும்பினர்.

தஞ்சாவூர் ரயில் நிலையம்

இது குறித்து பேசிய சிலர், "தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் முகப்பில் முதலில் தஞ்சாவூர் பெரியகோயில் மாதிரி கோபுரம் தான் இருந்தது. பின்னர் புனரமைப்பு பணியில் பெரியகோயில் மாதிரி வடிவில் இருந்த கோபுரத்தை இடித்து விட்டு வேறு கோபுரம் கட்டினர். வடமாநிலங்களில் உள்ள மந்தீர் கோயில்களின் வடிவம் போன்று அந்த மாதிரி கோபுரம் இருந்தது. சமூக ஆர்வலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் அடுத்ததாக உள்ள பயணிகள் வெளியே வரும் முகப்பில் பெரிய கோயில் மாதிரி கோபுரம் அமைத்தனர். இதில் இந்தி எழுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்தி எழுத்துக்களை நீக்கி விட்டனர்" என்று தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User