மேய்ச்சல் நிலத்தின் நாயகர்கள்; காவிரி கரையோர கிராமங்களின் வேர்களைத் தேடி... | மேட்டூர் அணை ஓசை 39

Oct 08, 2026 - 11:30
0
மேய்ச்சல் நிலத்தின் நாயகர்கள்;
காவிரி கரையோர கிராமங்களின் வேர்களைத் தேடி... | மேட்டூர் அணை ஓசை 39

‘ஹொசள்ளி’ வெங்கட்ராஜு’

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதேபோல எந்த நதிக்கும் இரு கரைகள் உண்டல்லவா? காவிரி ஆற்றின் வலது புறக்கரையிலிருந்து மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கும், மாதேஸ்வரன் மலையை தாண்டி கொள்ளேகால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் சிலரது நேர்காணல்களை இத்தொடரில் கண்டோம். காவிரி ஆற்றின் இடதுபுறக் கரையில், (இன்றைய சேலம், பென்னாகரம், தர்மபுரி மாவட்ட எல்லைகள்) இருந்த நபர்கள், அந்த கிராம மக்கள் என்னவானார்கள் என்பது குறித்த இயல்பான கேள்வி நம் மனதில் எழுந்து, அதற்கான விடையைத் தேடியது.

இந்தத் தொடர் வெளிவர ஆரம்பித்து அதன் சில அத்தியாயங்களை விகடனில் படித்த பிறகு, சேலத்திலிருந்து பொறியாளர் திரு.வெங்கட்ராஜு என்பவர் நம்மை தொடர்பு கொண்டார். அவர் கைப்பேசியில் தெரிவித்த சில விவரங்களின் உந்துதலில் அவரை நேரில் சென்று சந்தித்தேன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உயரிய பதவியில் ஒன்றான “செயற் பொறியாளராக” பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி டாக்டர். பிரேமாவதி, மகப்பேறு நல மருத்துவர். இருவருமே மேட்டூரில் அரசுப்பணியில் பணி புரிந்தவர்கள். இவர்கள் இருவரின் பூர்வீகம் சென்ற நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த காவிரி கரையோர கிராமமான “ஹொசள்ளி” என்ற கிராமம். தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது இந்த கிராமம். பின்னாளில் தமிழில் “புதுப்பட்டி” என்ற பெயரில் அழைக்கப்பெற்றது.

பொறியாளர் வெங்கட்ராஜு ஆதாரப்பூர்வமாக பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 1928 ல் தயாரிக்கப்பட்ட அந்தப் பகுதியின் அரசு வரைபடத்தின் நகல் அவர் மூலம் நமக்கு கிடைத்தது. அதன்படி அப்போது காவிரியின் இரு கரைகளிலும் அமைந்திருந்த கிராமங்களின் பெயர்கள், அமைப்பு போன்றவற்றை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது உள்ள அணைச்சுவற்றின் வடக்குப் பகுதியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் “பெரும்பள்ளம்” என்று அப்போது அழைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சோளப்பாடி, ஹொசள்ளி, சாம்பள்ளி, திண்ணப்பட்டி, காவேரிபுரம், ஞாயம் பாடி, கோட்டையூர், நெருப்பூர், ஏரியூர் போன்ற கிராமங்களில் மக்கள் பெருவாரியாக வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.

பொறியாளர் வெங்கட்ராஜு

இந்தியாவிலேயே மிக அதிக அளவில் மின்னல் மற்றும் இடி தோன்றும் இடமாக வட இந்தியாவில் உள்ள “டார்ஜிலிங்” என்ற மலைப்பகுதிகளுக்கு அடுத்து மேட்டூரில் தான் அதிக அளவு மின்னல் மற்றும் இடி உருவாகும் இடமாக இருக்கிறது என ஒரு தரவு கூறுகிறது. அதிலும் குறிப்பாக நெருப்பூர் கிராமம் அருகே “சிடுமனஹள்ளி” (தமிழில் சிலுவம் பட்டி) என்ற இடத்தில் தான் இவ்வாறு மின்னல் ஏற்படுகிறது. இயற்கைச் சூழல் மிகுந்த காவிரிக் கரையோர கிராமமான ஹொசள்ளி கிராமத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார், பொறியாளர் வெங்கட்ராஜு.

சமூக நல்லிணக்கம்

அந்த கிராமத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு சமுதாயத்தினர் தங்கள் கடமைகளை செய்து வாழ்வுரிமை பெற்று இருந்தனர். தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நெசவுத் தொழிலிலும், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் துணிகளை தைக்கும் டெய்லரிங் வேலையிலும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேளாண்மையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். இதுபோல பல சமுதாயத்தினர் அப்போது அங்கே ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

நெசவு செய்த துணிகள் மற்றும் பெண்களுக்கான பாவாடை, ஆண்களுக்கான பட்டாபட்டி டிராயர் போன்ற ஆயத்த ஆடைகளை தயார் செய்து, வாரம் ஒரு முறை “சந்தைப்பேட்டை” என்ற மார்க்கெட் கூடும் பகுதிக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டவர், இவரது தந்தை. மேலும், இண்டூர், அதியமான் கோட்டை ஆகிய ஊர்களுக்கும் எடுத்துச் சென்று வணிகம் செய்திருக்கிறார். இவரது தாத்தா ஆற்றில் வலை வீசி மீன் பிடிப்பதில் வல்லவர். விருந்தினர்கள் எவர் வந்தாலும் மீன்பிடித்து சமைத்து தருவது அந்த ஊரில் வழக்கமான ஒன்று. அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தோம் என்று தனது தாத்தாவும், அப்பாவும் தன்னிடம் பலமுறை கூறியதை நினைவு கூறுகிறார், பொறியாளர்.

மேட்டூர் அணை கட்டப்பட்டதால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு விட்டிருக்கிறது. இவரின் தந்தை (“ரெடிமேடு கோபால்” என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்டவர்) உட்பட பல சொந்தங்களுடன் காவிரி கரையை விட்டு விலகி, கிழக்கு நோக்கி நகர்ந்து மேச்சேரி என்ற ஊரில் ஒட்டுமொத்தமாக குடியமர்ந்துள்ளனர். மைசூர் மகாராஜாவின் பெயரை நினைவு கூறும் வகையில் “சாம்ராஜ் பேட்டை” என்ற இடத்தில் சுமார் நான்கு வீதிகளில் இந்த கன்னடம் பேசும் தேவாங்க செட்டியார் சமூகத்தினர் மட்டுமே 1930 க்கு பிறகு வாழ ஆரம்பித்துள்ளனர். இன்று வரை இந்த வம்சாவளியினர் தொடர்ந்து வசித்து வருகின்றனர். சோளப்பாடி சித்துராஜ் வகையறா, ஹொசள்ளி கோபால் செட்டி, பொம்மசமுத்திரம் முனுசாமி குடும்பத்தினர் என்று, இப்படி இருக்கிறது புலம் பெயர்ந்தவர்களின் சில குடும்பத்தினரின் பெயர்கள்.

பிரிட்டிஷ் கால நாணயங்கள்
பிரிட்டிஷ் கால நாணயங்கள்
பிரிட்டிஷ் கால நாணயங்கள்
பிரிட்டிஷ் கால நாணயங்கள்
பிரிட்டிஷ் கால நாணயங்கள்

பிற்காலத்தில் பொறியாளராக படித்து முன்னேறி மின்வாரிய அரசு செயற் பொறியாளராக பணிபுரிந்த இந்த வெங்கட்ராஜு தங்களின் மூதாதையர் வாழ்ந்த இடங்களின் மீது தீராத பற்றுள்ளவராக உள்ளார். அணை கட்டியதால் நீரில் மூழ்கிய கிராமங்களின் ஒட்டுமொத்த வரைபடத்தை “ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை” அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி வடிவமைத்திருக்கிறார். ஒவ்வொரு கிராமமும், அதன் இடத்துக்கும் இடைப்பட்ட தூரத்தையும் அளந்து ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள கிராமங்களின் விவரத்தை இந்த வரைபடம் மூலம் எவரும் எளிதாக புரிந்து கொள்ள இயலும் படி தயாரித்து நம்மிடம் பகிர்ந்தார். காவிரி ஆற்றின் வளைந்து நெளிந்த பாதையும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பொறியாளராக துல்லியமாக வரைபடத்தை இவரால் தயாரிக்க முடிந்திருக்கிறது, மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

வரலாறு குறித்த தீராத வேட்கை

சிறுவயதிலிருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உள்ள இவர், 1900 வருடங்களில் புழக்கத்தில் இருந்த பிரிட்டிஷ் நாணயங்கள் அனைத்தையும் சேகரித்து பத்திரமாக ஆவணப்படுத்தி உள்ளார். இவரின் பாட்டனார் தனக்கு அளித்த 1/12 அனா காசு, தனக்கு இந்தத் துறையில் ஆர்வத்தை உருவாக்கியது என்று தனது பாட்டனாருக்கு நன்றி கூறுகிறார். உலகின் பல நாட்டு நாணயங்களை சேகரித்து அதன் வரலாற்றை எழுதி வைத்து, ஓர் வரலாற்று நிபுணராக தனது ஓய்வு காலத்தில் 80 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

கண்ணபிரானின் பசு- வழிபாட்டு சிலை

அந்தக் காலத்தில் காவிரி கரையில் மக்கள் வழிபட்ட “கண்ணபிரானின் பசு” என்ற சிலை, இதன் தலை பகுதி பித்தளையிலும், உடல் செம்பு உலோகத்திலும் உள்ள ஒரு விக்கிரகத்தை இவர் அளித்த புகைப்படம் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. சோளப்பாடியில் மூழ்கியுள்ள கோவிலில் இருந்து மீட்டு வரப்பட்ட உற்சவர் சிலைகள், தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மூழ்கிய கிராமத்து கோவிலில் இருந்து மீட்டு வந்த சிலைகள்

கல் வட்டங்கள்

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே தெலுங்கனூர் என்ற பகுதி காவிரி கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது 2026ல் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடம், அணையின் நீர்மட்டம் சரியும் போது மட்டுமே தற்போது அங்கு ஏராளமான புதை குழிகளும், கல்வட்டங்கள் இருப்பதையும் காண முடிகிறது. இதை உள்ளூர் மக்கள் “பாண்டியன் திட்டுக்கள்” என்று அழைக்கின்றனர். ஆரம்ப கட்ட ஆய்வில், வாள், அம்பு, முதுமக்கள் தாழி மற்றும் பல அளவுகளில் பானைகள் போன்றவை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தொடர்ந்து தொல்லியல் துறை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவது சிறப்பம்சம். இதன் பழைய கால கணக்கை வைத்து ஆராயும் போது, கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வரை வரலாறு தெரியவரும் என தொல்லியல் துறை கணித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர். முன்பாக 3500 வருட பழமையான வாள் ஒன்று கிடைத்ததன் பின்னணியில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Submerged Hamlets

பொறியாளர் வெங்கட்ராஜ், தனது ஊரான ஹொசள்ளி கிராமம் குறித்தும், பொம்ம சமுத்திரம், சோளப்பாடி போன்ற கிராமங்கள் குறித்தும் விரிவாக பேசும் போது மண்ணின் மைந்தராக இவரின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நாணயங்கள், பழைய நில பத்திரம் மற்றும் கண்ணபிரானின் பசு போன்றவற்றை தன்னுடன் வைத்திருப்பது தனது முன்னோர்களின் ஆசி இதன் வாயிலாக தனது குடும்பத்துக்கு கிடைக்கிறது என்ற உணர்வு மட்டுமல்ல தனது வேரான காவிரி கரையின் பெருமையை பறைசாற்ற ஓர் சந்தர்ப்பம் என்று நினைத்து மகிழ்வில் திளைக்கிறார்.

பொறியாளர் வெங்கட்ராஜு- டாக்டர் பிரேமாவதி தம்பதியருக்கு மூன்று மகன்கள். இருவர் பொறியியல் பட்டம் முடித்து அமெரிக்காவிலும், ஒரு மகன் மருத்துவராக பிரிட்டனிலும் பணியாற்றி வருகிறார்கள்.

காவிரி நீரின் வாரிசுகள் பிரிட்டனின் தேம்ஸ் நதியோடும், அமெரிக்காவின் மிசிசிபி நதியோடும் உறவாடுகிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் எல்லா இடத்திலும் நீர் ஒன்றே! இயற்கையின் கொடை அது! உயிர்களை இணைக்கும் பாலமும் அதுவே!

காவிரி கரையோர கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்களை தேடி நாம் மேற்கொண்ட முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேற்றம் தெரிந்தது. சேலத்தில் உள்ள பொறியாளர் வெங்கட்ராஜு அவர்களின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டம் மேச்சேரி சென்று 106 வயதில் இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு.தம்மன்ன செட்டியார் என்ற பெரியவரை சந்தித்தோம். ஒரு ஊன்றுகோல் தடியின் உதவியுடனும் மற்றொருபுறம் தனது 60 வயது மகனின் கையை இறுகப் பற்றியவாறு படியேறி நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தார் பெரியவர். மெல்லிய குரலில் பேச்சு, ஒடிசலான தேகம். கேட்கும் திறனில் சற்று தொய்வு எனினும், பல விஷயங்களை தெளிவாக கூறும் திறன் உள்ளவராக நம்மோடு உரையாடினார்.

தம்மன்ன செட்டியார் தனது மகனுடன்

“மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு காவிரி கரையோர கிராமமான ஹொசள்ளி (இப்போதைய பெயர் புதுப்பட்டி) கிராமத்தில் தான் நான் பிறந்தேன். இது கொளத்தூருக்கு அருகில் உள்ளது. அப்போது அந்த கிராமத்தில் 20 - 25 வீடுகள் மட்டுமே இருக்கும். எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அணை கட்டியதால் தண்ணீர் மட்டம் மேலே ஏற ஆரம்பித்தபோது, எங்கள் குடும்பமும் வீடு- ஊரை காலி செய்து விட்டு கிழக்கு திசை நோக்கி பயணித்தோம். எனக்கு அப்போது பத்து வயது. நன்கு ஞாபகம் உள்ளது. அது நடந்த வருடம் 1930 என்று கூற அந்த பெரியவரின் தற்போதைய வயது 106” என்று கூற அதை அறிந்து வியந்தோம். பல்வேறு தரவுகள் மற்றும் ஆதாரங்களை சரிபார்த்து, இவரது வயது 106 என்பதையும் உறுதி செய்து கொண்டோம்.

“நாங்கள் பூர்வீகமாக நெசவுத் தொழிலை செய்யும் தேவாங்க செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் ஹொசள்ளி கிராமத்தில் சேலை வியாபாரம் செய்து வந்தார். கொளத்தூர் மற்றும் சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் சந்தைக்கு நெசவு செய்த சேலைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தார். அதோடு ராகி (கேழ்வரகு) என்ற சிறுதானியத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி, சந்தையில் கொண்டு போய் விற்று லாபம் சம்பாதித்து வருவார். எங்கள் குடும்பத்தை “ராகி மூட்டையார் குடும்பம்” என்று ஊரில் அழைப்பார்கள்.

அப்போது பொங்கல் கொண்டாடுவோம். கிருஷ்ண ஜெயந்தி ஊரே கொண்டாடும் பண்டிகை”. (மைசூர் சமஸ்தானம் இதற்கு காரணமாக இருக்கலாம்). அப்போது வியாபாரத்திற்காக சில பேர் மாட்டு வண்டிகளை கட்டிக்கொண்டு நெசவு அயிட்டங்களை விற்பதற்கு சூரத் நகரம் வரை செல்வார்கள் என்ற தகவல் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

“தண்ணீர் வரத்தால் மேற்கொண்டு வாழ முடியாமல் எங்கள் சொந்த ஊரான ஹொசள்ளியில் இருந்து மேச்சேரி வந்து சாம்ராஜ் பேட்டை என்ற இந்த இடத்தில் குடியமர்ந்தோம். அப்போது பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. ஓமலூர் சென்று தங்கி மூன்றாவது வரை மட்டுமே படித்தேன். அவ்வளவுதான் படிப்பு” என தனது இளமைக்கால நினைவுகளை பகிர்ந்தார். சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் தந்து மேற்கொண்டு உரையாடலை தொடர்ந்தோம். ஹொசள்ளி கிராம வாழ்க்கை குறித்து மேலும் கேட்டபோது, “அங்கு காவிரி தான் வாழ்க்கை, உயிர், பொழுதுபோக்கு எல்லாமே! உடல்நிலை சரியில்லையெனில் மருத்துவமனை என்பது அப்போது கிடையாது. நாட்டு வைத்தியம் தான் உயிரை காப்பாற்றும். ஆனால், பொதுவாக யாருக்கும் அவ்வளவு எளிதில் உடல் கெடாது. தினமும் ஆற்றில் மீன் பிடித்து குழம்பு வைத்து சாப்பிடுவோம். நான் தினமும் ஆற்றில் தான் குளிப்பேன். எல்லா வித டைவ் அடித்து குளிப்பது தான் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு வேலை. வாரம் இரண்டு முறை அரிசி சாதம் மற்றும் மற்ற நாட்களில் பெரும்பாலும் ராகி சாப்பாடு தான். அதனால்தான் உடம்பு இன்னமும் எனக்கு வலுவாக உள்ளது.

ஆறு மற்றும் நில அமைப்பின்

என் தந்தையார் வயலில் இருந்து நேராக ராகி வாங்கி அதைக் கொண்டு போய் சந்தையில் விற்பார். என்னுடைய அப்பா 70 வது வயதில் காலமானார். அம்மா அதற்கு முன்பே காலமாகிவிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். எனது பெரியண்ணா அவரது 100 வயது வரை வாழ்ந்தார். அப்போது இருந்த நிம்மதி இப்போது இல்லை. எனக்குத் தெரிந்த தொழில் நெசவு மட்டும் தான். எனது எண்பதாவது வயது வரை நெசவு செய்ய முடிந்தது. எனக்கு மூன்று மகன்கள், நாலு பெண் மக்கள். ஹொசள்ளி கிராமத்தில் எங்கள் வீட்டுக்கருகில் மொத்தமாக எட்டு குடும்பம், வெவ்வேறு சாதி, மதம் உள்ளவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மாமா, மச்சான் என்று உறவுமுறை கூறி அழைத்து வாழ்ந்து வந்ததுதான் வழக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு புரிதலும், ஒற்றுமையும் அப்போது இருந்தது. பணம் வட்டிக்கு கொடுத்து அதன் மூலம் காசு சம்பாதிப்பது அப்போது சகஜமாக இருந்த பழக்கம் தான்”.

“எங்களுக்கு சேத்துக்குழி என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலம் இருந்தது. அப்பா இறந்த பிறகு யாரோ சிலர் வஞ்சகமாக எங்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள். ஹொசள்ளி, சந்தைப்பேட்டை போன்ற கிராமங்களில் நிறைய நெசவாளர்கள் இருந்தனர். டேம் கட்டியதால் நீர் வீடுகளை சூழ்ந்து விடும் காலி செய்து பாதுகாப்பாக போய் விடுங்கள் என்று தண்டோரா போட்ட பின்பு தான் அங்கிருந்து மேச்சேரி வந்தோம். அங்குள்ள நிலங்களில் மிளகாய் அமோகமாக விளைச்சல் பெறும்” என்று விடாமல் பேசியதில் அவருக்கு இருந்த ஆர்வம் நமக்குப் புரிந்தது.

தாயுமானவர்

தொடர்ந்து, “ஆடி மாதம் வந்தால் புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி அதில் விளையாடிய அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. அடுப்புக்கு காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்து வந்து எரிப்பார்கள். இப்போதெல்லாம் நான் மீன் சாப்பிடுவதில்லை. கொஞ்சம் சமைக்கத் தெரியும். ஆனால், இப்போது என்னால் முடிவதில்லை. எல்லாமே எனது இந்த இரண்டாவது மகன்தான். எல்லா வேலைகளையும் அவர்தான் செய்து தருகிறார். தினமும் எனக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது அவர்தான்” என்று மகனை கைகாட்டினார். அந்தப் பெரியவரின் மகனின் பெயர் T. ராஜு. 60 வயதாகிறது. அவரிடம் உரையாடிய போது, “அப்பா எனக்கு ஒரு குழந்தை மாதிரி! அவருக்கு வேண்டியதை சமைத்து ஊட்டி விடுவேன். அவருக்கு ஓரிரண்டு பற்கள் மட்டுமே உள்ளது. சில வருடங்களாக சேரில் உட்கார்ந்து சிறுநீர் கழித்து விடுவார்., கீழே பாத்திரம் வைத்து, கொண்டு போய் கொட்டி சுத்தம் செய்து வைத்து விடுவேன். அப்பா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தினமும் சாமி கும்பிடுகிறேன். எங்கள் வீட்டில் நாங்கள் இருவர் மட்டும் தான். அம்மா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மனைவியும் இல்லை. அவருக்கு வேண்டிய அனைத்துமே நான்தான் செய்ய வேண்டும்” என்று பாசத்தோடு தனது தந்தையை கவனித்துக் கொள்வதை பெருமையோடும், பணிவோடும் நம்மிடம் பகிர்ந்தார்.

தம்மண்ண செட்டியாருக்கு பார்வை நன்றாகவே உள்ளதை கவனித்தோம். ராஜு, “ஒரு கண் அறுவை சிகிச்சை முடிந்தது. இன்னொரு கண் செய்ய வேண்டும். ஆனால், அப்பாவுக்கு மாலை நேரத்தில் கண் சரியாக தெரிவதில்லை. இரவில் நான் தூங்கினால் தான் அவரும் தூங்குவார். நான் வெளியே எங்கும் செல்ல முடிவதில்லை. அப்படி சென்றாலும் உடனே திரும்பி விடுவேன். வெளியூருக்கெல்லாம் செல்வதே கிடையாது” என்று கூறியதைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் காலத்தில் இப்படி ஒரு மகனா? என்று ஆச்சர்யத்தில் வியந்தேன்.

உங்கள் மகன் குறித்து கூறுங்கள் என்று பெரியவரிடம் கேட்டேன். ஒரே வாக்கியத்தில் சொல்லி முடித்து நம்மை பார்த்து சிரித்தார். “இவர் மகன் அல்ல, என் அம்மாவைப் போல!” என்ற இவரது வார்த்தைகளை நம் செவி உணரும் போது கண்களில் நீர் துளிர்ப்பதை தடுக்க இயலவில்லை. மகன் தந்தைக்கு தாயுமானவராக தெரிந்தார். ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் இது.

மேச்சேரி செளந்தரராஜன்

பெரியவர் சௌந்தரராஜன் அவர்களின் வயது 84. அவர், "என்னுடைய தந்தை ஊரை விட்டு காலி செய்து விட்டு மேச்சேரி வந்தபோது அவருக்கு 16 வயது. ஊரை காலி செய்த போது 30 மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பத்தோடு கிளம்பி இங்கே மேச்சேரி வந்து செட்டில் ஆனோம்.

அப்போது இங்கே மேச்சேரியில் 5 ஏக்கர் 30 சென்ட் என்ற அளவில் மொத்த நிலத்தை ஒதுக்கி, அதில் நான்கு வீதிகளில் மொத்தம் 64 வீடுகள் அமைத்து "சாம்ராஜ் உடையார் ராஜா" நினைவாக இங்கு சாம்ராஜ் பேட்டை என்ற பெயரில் இந்த இடம் உருவானது. பட்டு சேலை தயார் செய்து பொம்ம சமுத்திரத்திலிருந்து கொள்ளேகால் வரை சென்று விற்பனை செய்வார்கள். கொள்ளேகாலில் 18 வீதிகளில் அப்போது நெசவாளர்கள் வாழ்ந்து வந்தனர். வியாபாரிகளாகவும் இருந்தனர்" என்றார்.

இவரது தாத்தா பெயர் மாதையன் செட்டியார். பெரும் செல்வந்தர். அவருக்கு மூன்று மனைவிகள். 100 வருடமாக இங்கேயே இவரது குடும்ப வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர் .சௌந்தரராஜன் அவர்களை உள்ளூர் மக்கள் "சேட்டு" (சௌந்தரராஜன்) என்று அழைக்கிறார்கள். அப்படி அழைத்தால் தான் அவர்களுக்கு அவரை அடையாளம் தெரிகிறது.

அது என்ன ‘சேட்டு’ ? என்ற பெயர்க்காரணம் கேட்டபோது சென்ற நூற்றாண்டில் அரசு ரெவென்யு இன்ஸ்பெக்டர் பதவியில் ஒரு நபர் வேலை பார்த்து இருக்கிறார். மிகவும் நேர்மையான ஆபிசர். அவருடைய நேர்மையான குணத்தை பாராட்டும் வகையில் ஊரில் அப்போது பிறந்த பல குழந்தைகளுக்கு "சேட்டு" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவரின் பெயர் "சேட்" .

அந்த சமயத்தில் கவுண்டர் இனத்தைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தனது பராமரிப்பில் இருந்த மாரியம்மன் சிலையை கொடுத்து அதை பராமரிக்கும் செலவுக்காக 8 ஏக்கர் நிலத்தையும் தானமாக அளித்து கோயில் வேலைகளை பார்த்துக் கொள்ளும்படி கூறியதாக பழைய கதையைக் கூறுகிறார் சௌந்தரராஜன். அப்போது பொம்ம சமுத்திரத்தில் தெலுங்கு பேசுபவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆற்றுக்கு இருபுறமும் மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வேலைகளை செய்ய அங்கும் இங்கும் சென்று வந்திருக்கின்றனர். ஆற்றின் இரு கரைகளையும் கடக்க பரிசல்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆறு எந்த விதத்திலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை.

1932 இல் ரூபாய் 500க்கு தாயாதிகளுக்குள் ஒரு பிரிவினை வந்தபோது அப்போது செய்யப்பட்ட கிரையத்திற்கு ரூபாய் 500 சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்ட பத்திரம் இவர்களிடத்தில் உள்ளது. சேத்துக்குழி என்ற இடத்தில் மார்கழி மாத காலை பஜனைக்காக ஆற்றைக் கடந்து தினமும் சென்று வருவார்களாம்.

தீவட்டி கொள்ளைக்காரர்கள் தொந்தரவு அப்போது அந்தப் பகுதியில் இருந்துள்ளது. அதை சமாளிக்க பொம்ம சமுத்திரத்திலிருந்து சில குடியிருப்பு வாசிகள் கொள்ளேகாலுக்கு சென்று மந்திரவாதிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி வந்த நேரமது என்று நினைவு கூறுகிறார் . கொள்ளேகால் மாவட்டத்தில் அந்த சமயத்தில் மந்திரவாதிகள் பில்லி, சூனியம், மாந்திரீகம் வேலைகளில் வல்லவர்களாக இருந்திருக்கின்றனர். பயிற்சி பெற்று வந்த பிறகு தீவட்டி கொள்ளைக்காரர்களுக்கு பயம் வந்து திருடுவதற்கு பயந்து இந்த ஊருக்கு வருவதை தவிர்த்துள்ளனர் என்ற சுவையான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார் இந்த பெரியவர் செளந்திரராஜன் எனும் "சேட்டு".

நாகராஜன் குடும்பம்

மேச்சேரி சாம்ராஜ் பேட்டையில் மற்றும் ஒரு பழைய பெருமை மிகு குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பெரியவரின் பெயர் நாகராஜன். இவரது தாத்தா “செட்டித்தனம்” என்ற பதவியில் காவிரி கரையோர கிராமம் “பொம்ம சமுத்திரத்தில்” அப்போது வாழ்ந்திருக்கிறார். பொம்ம சமுத்திரத்திலிருந்து சக்தி மாரியம்மன் சிலையை கொண்டு வந்து சாம்ராஜ் பேட்டையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள். அந்தக் காலத்தில் சிலர் காவிரி நீரில் மூழ்கி கோவிலுக்குள் சென்று நீரில் மூழ்கியிருந்த சாமி சிலையை எடுத்து வந்த நிகழ்வுகளை சுவை பட கூறினார். அதே சமயத்தில் இவர்களில் ஒரு பிரிவினர் மேச்சேரிக்கு சற்று தொலைவில் “வெள்ளாறு” என்ற இடத்தில், இதே போல வேறு சில சிலைகளை அங்கிருந்து கொண்டு வந்து தனியாகவும் வழிபடுகிறார்கள்.

பழைய காவிரிக் கரையோரம் நீர்மட்டம் ஏறிய போது அங்கிருந்து வந்த இந்த குடும்பங்கள் வேறு சில இடங்களையும் பார்த்துவிட்டு இறுதியில் மேச்சேரியில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். ஏனெனில், கால்நடைகளுக்கு தேவையான அளவு நீர் அங்கிருந்த ஏரியில் இருந்ததால் அந்த ஊர் “மேய்ச்சல் ஏரி” என்று முதலில் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி “மேச்சேரி” என பெயர் பெற்றுள்ளது. நாங்கள் புலம்பெயர்ந்த போது எங்களுக்கு அரசே இந்த இடத்தை ஒதுக்கித் தந்து உதவினார்கள் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் திரு.நாகராஜன். அரசின் விவசாயத்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திருமதி.

மேச்சேரி நாகராஜன் குடும்பத்தாருடன்

முத்துலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியையாகவும், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் கல்வித்துறையில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேர்காணலின்போது உடன் இருந்த ஊர் மக்கள் இந்த அம்மையார் தான் ஊரில் உள்ள பல சிறுமிகள் படித்து கல்லூரி வரை செல்வதற்கு காரணமாக இருந்தவர் என்று நன்றி பாராட்டினார்கள். அந்தளவுக்கு அந்த ஊர் சிறுமிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டியும், ஊக்கமளித்தும் அவர்களுக்கு பின்புலமாக இருந்துள்ளார். அவற்றை கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மையார் மெல்லிய புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டவாறு அமைதியாக உட்கார்ந்து இருந்தார்.

எந்த சலனமும் முகத்தில் இல்லை. என் கடன் பணி செய்து கிடந்ததே என்று கூறுவது போல இருந்தது. இந்த தம்பதியினரின் மகன் லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவோம் என்றவர் அங்கு கொஞ்சம் குளிர் அதிகம்தான் என்று புன்னகைத்தார்.

நாகராஜ் அவர்களின் தந்தையார் பொம்மசமுத்திரத்தில் நெசவுத் தொழில் செய்து வந்துள்ளார். இவரது குடும்பம் பெருமாள் செட்டியார் வகையறா என்று அழைக்கப்படுகிறது. நெசவு செய்த சேலைகளை மாட்டுவண்டியில் வைத்து சேலம் கொண்டு சென்று விற்பனை செய்வார்களாம். ஒவ்வொரு வாரமும் திங்களன்று கிளம்பி செவ்வாய் சந்தையில் விற்று, இரவு கிளம்பி புதன் காலை தங்கள் கிராமத்தை சென்றடைவார்கள் என தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையை விவரித்தார்.

அப்போதெல்லாம் மீன் இல்லாமல் ஒரு நாளும் சாப்பாடு இல்லை என்கிறார் திரு நாகராஜன். அவர்களின் வயது 96. அப்போது கிராமங்களில் கூத்து கட்டுவார்கள். (டிராமா). என் திருமணத்துக்கு கூட கூத்து நடந்தது. பெரும்பாலும் பாரதக் கதைகளே அதில் இடம்பெற்றிருக்கும்” என்ற இவரின் குடும்பம் மிகப்பெரியதாக அப்போது இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் வீட்டின் முன்னே தான் திருமணம் நடக்கும். மண்டபம் எதுவும் கிடையாது. வீட்டு வாசலில் திருமணம் நடக்கும். ஒரு சில சமயம் ஒரு ஊரில் ஒரே நாளில் ஐந்து அல்லது ஆறு திருமணம் கூட நடக்கும். திருமணத்துக்கு ஊரில் உள்ளவர்களை அழைக்கும் போது திருமண வீட்டார் பண வசதி உள்ளவர்களாக இருந்தால், அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பார்களாம். வசதி குறைவானவர்கள் தங்கள் வீட்டு திருமணத்திற்கு, வெற்றிலை பாக்கு வைத்து ஒரு நபர் அல்லது இரண்டு நபர் என்று கூறி அழைப்பார்களாம். அதாவது சாப்பிட கட்டுப்படுத்துவதற்கு, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, முன்பே ஒரு வீட்டில் இருந்து இவ்வளவு பேர் வந்தால் போதும் என்ற கட்டுப்பாட்டுடன் அழைப்பு இருக்குமாம். ஏழ்மையின் வெளிப்பாடு! பழந்தமிழர் வாழ்க்கையில்தான் எவ்வளவு வினோதங்கள்! பண்பாடு மாறாமல் பெரியவர்களை மதித்து இன்னமும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த மேச்சேரி, சாம்ராஜ் பேட்டை ஊர் மக்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.

காவிரி நன்னீர் சிறப்பு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User